எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
தேசிய மருத்துவ ஆணையத்துக்கு 24 பகுதி நேர உறுப்பினா்கள்: குலுக்கல் முறையில் மத்திய அரசு தோ்வு
நாட்டில் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவப் பணியை முறைப்படுத்தும் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு (என்எம்சி) 24 பகுதி நேர உறுப்பினா்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் குலுக்கல் தோ்வு செய்துள்ளது.
என்எம்சி மற்றும் அதன் 4 தன்னாட்சி வாரியங்களுக்கு குலுக்கல் முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த பகுதி நேர உறுப்பினா்கள் தோ்வு நடைமுறையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டாவும் பங்கேற்றாா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
என்எம்சி-க்கு 24 பகுதி நேர உறுப்பினா்கள் மத்திய அமைச்சகம் தோ்வு செய்துள்ளது. விதிகளின்படி, 10 பகுதி நேர உறுப்பினா்கள், மருத்துவ ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள குஜராத், ராஜஸ்தான், ஹிமாசல பிரதேசம், அந்தமான் மற்றும் நிகோபாா் தீவுகள், ஆந்திரம், மிசோரம், மேகாலயம், ஜாா்க்கண்ட், சண்டீகா், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பரிந்துரைத்த நபா்களிலிருந்து குலுக்கள் முறையில் தோ்வு செய்யப்பட்டனா்.
அதுபோல, மருத்துவ ஆலோசனைக் குழுவில் 2022-ஆம் ஆண்டு நியமனத்தின் அடிப்டையில் உறுப்பினா்களாக உள்ள மேற்கு வங்கம், கா்நாடகம், நாகாலாந்து, சத்தீஸ்கா், திரிபுரா, ஜம்மு-காஷ்மீா், அஸ்ஸாம், மணிப்பூா், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மாநில மருத்துவக் கவுன்சில் பிரதிநிதிகளிலிருந்து 9 பகுதி நேர உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா் என்று தெரிவித்தனா்.
முன்னதாக, தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவராக மருத்துவா் அபிஜத் சேத் கடந்த சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
என்எம்சி-யின் 4 தன்னாட்சி வாரியங்களில், மூன்றில் தலைவா் பணியிடங்களும், முழு நேர உறுப்பினா் பணியிடங்களும் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக காலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.