ரயில்களில் முன்பதிவில்லா பயணச்சீட்டு வழங்குவதில் கட்டுப்பாடு!
ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட் வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மற்ற போக்குவரத்தை காட்டிலும் ரயிலில் கட்டணக் குறைவு என்பதால், பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்துக்கே முன்னுரிமை அளித்து வருகிறார்கள்.
சமீபகாலமாக தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடர்பான தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தட்கல் முன்பதிவுக்கு புதிய விதிமுறைகளை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்தது.
அதன்படி, ஜூலை 1 முதல் ஆதார் எண் இணைக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை 15 முதல் ரயில்வே முன்பதிவு அலுவலகங்களிலும் ஆதார் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்பட்ட பின்னரே முன்பதிவு செய்யப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது முன்பதிவில்லா பெட்டிகளில் அலைமோதும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ரயில்வே நிர்வாகம் இறங்கியுள்ளது.
90 முதல் 100 பேர் வரை அமர்ந்து செல்லும் வகையில் உள்ள முன்பதிவுப் பெட்டிகளில் 200-க்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற மகா கும்பமேளாவுக்கு செல்வதற்காக தில்லி ரயில் நிலையத்தில் கூடிய பயணிகளிடையே கூட்டநெரிசல் ஏற்பட்டு 18 பேர் பலியாகினர்.
இந்த சம்பவத்துக்கு, அளவுக்கு அதிகமான பயணிகளுக்கு முன்பதிவில்லா டிக்கெட் வழங்கியதே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், தொலைதூர ரயில்களில் ஒரு முன்பதிவில்லா பெட்டிக்கு 150 டிக்கெட் மட்டுமே வழங்கும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது. தற்போது முதல்கட்டமாக தில்லி ரயில் நிலையத்தில் ஒரு முன்பதிவில்லா பெட்டிக்கு 150 டிக்கெட்டுகள் வீதம் சோதனை முறையில் வழங்கப்பட்டு வருகின்றது.
எடுத்துகாட்டாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு குறிப்பிட்ட நேரத்தில் 2 ரயில்கள் புறப்படும் பட்சத்தில், இரண்டு ரயில்களிலும் தலா 4 முன்பதிவில்லா பெட்டிகள் இருக்கும். எனவே, குறிப்பிட்ட நேரத்தில் 1,200 முன்பதிவில்லா டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.
இந்த நடைமுறை விரைவில் நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.