மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
சிறுமி பாலியல் வன்கொடுமை: அலைக்கழித்த காவல்துறை; சிகிச்சையளிக்க மறுத்த மருத்துவமனை; என்ன நடக்கிறது?
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த சிறுமி, அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 12-ம் தேதி பள்ளி முடிந்து, நண்பகல் நேரத்தில் வீட்டிற்குத் திரும்ப, ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தைக் கடந்து மாந்தோப்பு வழியாக நடந்து சென்றுள்ளார்.
அப்போது, அவரைப் பின்தொடர்ந்த மர்ம நபர் ஒருவர், திடீரென சிறுமியை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று, மாந்தோப்பில் ஆள் இல்லாத இடத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து அந்த மர்ம நபர் இந்தியில் செல்போனில் பேசி, மற்றொரு நபரை அழைத்துள்ளார். இதைச் சுதாரித்துக் கொண்ட சிறுமி, அவரின் முகத்தில் மண்ணை வாரித் தூவிவிட்டுத் தப்பி, வீட்டுக்கு வந்திருக்கிறார்.
சிறுமியைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோரிடம், தனக்கு நேர்ந்த கொடூரத்தைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழித்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
வேறு வழியின்றி சிறுமியை கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையில் உள்ள அரசு மருத்துவமனைக்குப் பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். அங்குச் சிறுமிக்குச் சிகிச்சையளிக்காமல் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதனிடையே, சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் குறித்து கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

டி.எஸ்.பி சிறுமியிடம் தனியாக விசாரணை மேற்கொண்டு, வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளார். பின்னர், மேல் சிகிச்சைக்காக ராயபுரத்தில் உள்ள அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக, ஆரம்பாக்கம் காவல்துறை அலட்சியம் காட்டியதாகவும், கொடூர சம்பவம் நிகழ்ந்து 5 நாட்களாகியும் குற்றவாளி, இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
சி.சி.டி.வி காட்சியில் சிக்கிய குற்றவாளியைப் பிடிக்க காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்தச் செய்த சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.