விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்...
மயிலாடுதுறை: "நேர்மைக்குக் கிடைத்த பரிசு என் வாகனம் பறிப்பு" - மது விலக்கு டி.எஸ்.பி ஆதங்கம்
மயிலாடுதுறை மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி-யாக இருப்பவர் சுந்தரேசன். இவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் வாகனமான ஜீப்பை அமைச்சர் மெய்யநாதனுக்கு எஸ்கார்டு செல்ல வேண்டும் என வாங்கிக் கொண்டதால், சுந்தரேசன் வீட்டிலிருந்து நடந்தே அலுவலகத்திற்குச் செல்வது போன்ற வீடியோ வெளியானது. இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சுந்தரேசனிடம் பேசினோம், ``நான் மயிலாடுதுறை மாவட்ட மது விலக்கு டி.எஸ்.பியாக 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்றேன். அப்போதிலிருந்து கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுத்தேன். இதுவரை 1,200 வழக்குகள் பதிவு செய்துள்ளேன்.

உரிய அனுமதியின்றி செயல்பட்ட 23 பார்களுக்கு சீல் வைத்துள்ளேன். 5 பேரை குண்டர் சண்டத்தில் சிறையில் அடைத்திருக்கிறேன். மது கடத்தலுக்குப் பயன்படுத்திய 20 வாகனங்களைப் பறிமுதல் செய்திருக்கிறேன். என் பணியைப் பாராட்டி மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழ் பெற்றுள்ளேன்.
என்னுடைய போலீஸ் பணியில் நான் நேர்மையாக இருக்கிறேன். இதுவே என் அடையாளமும் கூட. ஆனால் எங்கள் மாவட்ட காவல் துறையில் நேர்மையாக இருப்பதை விரும்புவதில்லை. லஞ்சம் வாங்குவதற்கு துணை போகச் சொல்லி அட்ஜெஸ்ட் செய்யச் சொல்கிறார்கள். என் மனசாட்சி அதற்கு இடம் கொடுக்க மறுக்கிறது. என் கடமையை கண்ணியத்துடன் செய்கிறேன்.
இந்த சூழலில் கடந்த 5-ம் தேதி ஆயுதப்படை எஸ்.ஐ செந்தில்குமார் எனக்கு போன் செய்து, என் போலீஸ் வாகனத்தை அமைச்சர் மெய்யநாதன் பாதுகாப்புக்கு எஸ்கார்டு செல்வதற்கு வேண்டும் என்றார். நான் முடியாது என மறுத்து விட்டேன். ரெய்டில் இருந்த எனக்கு போன் செய்த எஸ்.பி இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன், வாகனத்தை கேட்டார். நான் ரெய்டில் இருக்கிறேன் எனச் சொல்லியும் அவர் கேட்கவில்லை. `நீங்க எந்த இடத்தில் இருக்கிறீர்களோ, அங்கேயே வண்டியை ஒப்படைத்து விடுங்கள்' என்றார். இதை நான் ஏற்கவில்லை. இதையடுத்து என்னை திருச்செந்தூர் குடமுழுக்கு பாதுகாப்புப் பணிக்கு அனுப்பி வைத்தனர். வண்டியை எஸ்கார்டுக்கு எடுத்துக் கொண்டனர். திரும்பி வந்த எனக்கு முதல்வர் வருகைக்கு டூட்டிக்கு அனுப்பினர்.

அதை முடித்து விட்டு வந்து ஜீப் கேட்டேன் தரவில்லை. அழுத்தம் கொடுத்த பிறகு பழைய வண்டி ஒன்றைத் தந்தனர். அது பாதியிலேயே நின்று விடுவதால் அதைக் கொடுத்துவிட்டேன். பழுது நீக்கித் தருவதாகச் சொன்னார்கள். செய்யவில்லை. கடந்த 10 நாட்களாக எனக்கு ஜீப் வழங்கவில்லை. டூவீலரிலும், நடந்தும் அலுவலகம் செல்கிறேன். இது எஸ்.பி ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியும். எஸ்.பி சொல்வதால் தான் இதை செய்கின்றனர். திட்மிட்டு என்னை பழிவாங்குகின்றனர்.
என் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை. ஒரு டி.எஸ்.பிக்கே இந்த நிலை என்றால், மற்ற போலீஸார் எந்த வகையிலான அழுத்தங்களுக்கு ஆளாவர்கள் என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். இங்கு லஞ்சம் வாங்குகின்றனர். என்னையும் ஒத்துப்போக சொல்கின்றனர். என்னால் முடியாது வேற ஊருக்கு என்னை டிரான்ஸ்பர் செய்து விடுங்கள் என டி.ஜி.பியிடம் பல முறை மனு கொடுத்துள்ளேன்.

தமிழக மனித உரிமை ஆணையத்தில் நேர்மையாகப் பணியாற்றி விட்டு இங்கு வந்தேன். என் நேர்மைக்குக் கிடைத்த பரிசு என் போலீஸ் வாகனம் பறிப்பு. நான் நடந்து சென்ற வீடியோ வெளியானதால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எதை இழந்தாலும் நேர்மையை ஒரு போதும் இழக்க மாட்டேன் என்றார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் சிலரிடம் பேசினோம், ``வாகனத்தை எஸ்கார்டுக்கு கேட்பது வழக்கமான நடைமுறைதான். சுந்தரேசன் வாகனம் பழுதடைந்து விட்டதால் மாற்று வாகனம் கொடுக்கப்பட்டது. எதுவாக இருந்தாலும் அதிகம் பேசும் சுந்தரேசன் விளம்பரப் பிரியரும் கூட. இதிலும் அப்படி நடந்து கொண்டிக்கிறார்" என்றனர்.