மும்பை: ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம்; அரசு ஊழியர்கள் அரைமணி நேரம் தாமதமாக பணிக்கு வர அனுமதி!
மும்பை புறநகர் ரயில்களில் எப்போதும் கூட்டம் அலைமோதும். அதுவும் காலை மற்றும் மாலை நேரத்தில் புறநகர் ரயிலில் ஏறி இறங்குவது என்பது சவாலான ஒன்றாகும். கூட்ட நெரிசல் காரணமாக ரயிலில் இருந்து கீழே விழுந்து ஒவ்வொரு ஆண்டும் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த உயிரிழப்பை கட்டுப்படுத்த ரயில்வே நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் இன்னும் பயனளிக்கவில்லை. புறநகர் ரயில்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த மாநில அரசு புதிய முடிவு எடுத்துள்ளது. சமீபத்தில் 800 தனியார் நிறுவனத்திற்கு பணி நேரத்தை மாற்றி அமைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கும்படி கூறி மத்திய ரயில்வே நிர்வாகம் கடிதம் எழுதி இருந்தது. தற்போது மாநில அரசும் இதில் விரைந்து செயல்பட ஆரம்பித்து இருக்கிறது. முதல் கட்டமாக அரசு ஊழியர்கள் பணிக்கு காலையில் அரை மணி நேரம் தாமதமாக வரலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பிரசாப் சர்நாயக் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு அளித்த பதிலில், ``புறநகர் ரயிலில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொள்வதை தவிர்க்க அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் பணிக்கு தாமதமாக வர அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அரை மணி நேரத்தை மாலையில் கூடுதல் நேரம் பணி செய்து சரி செய்து கொள்ளலாம். இதன் மூலம் அரசு ஊழியர்கள் அவசரப்பட்டு வர வேண்டிய அவசியம் இருக்காது. .அதேசமயம் பணி நேரமும் பாதிக்கப்படாது. தனியார் நிறுவனங்களில் இது போன்ற திட்டத்தை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்ய தனிக்கமிட்டி அமைக்கப்பட இருக்கிறது. மும்பை புறநகர் ரயிலில் கூட்டத்தை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலான ஒன்றாக இருக்கிறது.
எனவே பொதுமக்கள் மெட்ரோ ரயில் அல்லது வேறு வகையான போக்குவரத்தை பயன்படுத்த ஊக்கப்படுத்தப்படும். பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்யவேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது." என்றார்.