`ஆண்கள் விந்துப்பையைத் தொட்டுப் பார்க்க கூச்சப்படக்கூடாது. ஏன்னா...’ - காமத்துக்...
திருச்சி சிவா - காங்கிரஸ் மோதல்: காமராஜர் குறித்த சர்ச்சைப் பேச்சும், வெடிக்கும் கண்டனங்களும்!
எளிமைக்கும் நேர்மைக்கும் அடையாளமாகியிருக்கும் அரசியல் தலைவர் காமராஜர் குறித்து திருச்சி சிவா சர்ச்சைக்குரிய வகையில் பேசியது, அதற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருவதும் பெரும் பேசுபொருளாக வெடித்திருக்கிறது.
காமராஜர் பிறந்தநாளான கடந்த ஜூலை 15ம் தேதி சென்னை பெரம்பூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் காமராஜர் ஏசி (AC) யில்தான் இருப்பார் என்றும் காமராஜர் இறக்கும் முன்பு 'நீங்கள் தான் இந்த நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும்' என்று கலைஞர் கருணாநிதியிடம் காமராஜர் சொன்னதாகவும் பேசியிருக்கிறார் திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பியுமான திருச்சி சிவா.

காமராஜர் குறித்த திருச்சி சிவாவின் பேச்சு
கலைஞர் கருணாநிதி சொன்னது
கலைஞர் கருணாநிதி என் 23, 24 வயதின்போது என்னை காரில் அழைத்துச் செல்வார். அப்போது என்னிடம் பழைய நிகழ்வுகளைச் சொல்வார். சிலர் சின்னப்பையனிடம் எதற்கு இதெல்லாம் சொல்கிறார் என நினைப்பார்கள். ஆனால், அதனை நான் மேடையில் சொல்வேன் எனத் தெரிந்துதான் கலைஞர் கருணாநிதிக்குத் அதை என்னிடம் சொன்னார்.
ஒருநாள் மின்சார தட்டுப்பாடு குறித்து தமிழகம் முழுவதும் காமராஜர் கண்டன கூட்டம் போடுகிறார். ஆனால், காமராஜருக்கு 'ஏசி' இல்லையெனில் உடம்பில் அலர்ஜி வந்துவிடும். அதற்காக அவர் தங்கும் அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி அமைக்க உத்தரவிட்டதாக கருணாநிதி கூறினார். தன்னை எதிர்த்து பேசினாலும், அவரது உடல்நிலையை கருதி நான் உத்தரவிட்டேன் என்றும் கருணாநிதி கூறினார்.

நான் திமுக.,காரன் இல்லை, காங்கிரஸ்காரன்
எமர்ஜென்சி காலத்தில் அவரை கைது செய்ய துடித்தார்கள். தமிழகத்தில் அது முடியவில்லை. அந்த சமயத்தில் திருப்பதிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக செல்கிறார். அப்போது முதல்வர் அலுவலகத்தில் இருந்து 'தயவு செய்து நீங்கள் திருப்பதி செல்ல வேண்டாம்' எனத் தகவல் போகிறது. இதற்கு, 'நான் திமுக.,காரன் இல்லை, காங்கிரஸ்காரன். என்னை போக வேண்டாம் என சொல்ல இவர் யார்' என்றார் காமராஜர். அதற்குப் பதிலளித்த கருணாநிதி, 'நான் திமுக தலைவர் அல்ல, தமிழகத்தின் முதல்வர். இது என் உத்தரவு' என்றார்.
நீங்கள் தான் இந்த நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும்
'நான் நாற்காலியே வேண்டாம் என சொல்லிவிட்டு வந்தவன். எனக்கு உத்தரவு போட இவர் யார், இவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா' எனக் கேட்டார். உடனே ராஜாராம் நாயுடுவை கூப்பிட்ட கருணாநிதி, 'அவரை புரிந்து கொள்ள சொல்லுங்கள். அவருக்கு உத்தரவுபோடும் அளவிற்கு நான் பெரியவன் இல்லை. ஆனால், அவரை கைது செய்ய மத்திய அரசு துடித்துக்கொண்டிருக்கிறது. தமிழகத்திற்குள் இருக்கும் வரை நான் பாதுகாப்பேன். அதைத்தாண்டி, ஆந்திராவின் திருப்பதி சென்றால் என்னால் காப்பாற்ற முடியாது. எனவே தயவு செய்து போக வேண்டாம் என சொல்லுங்கள்' என்றார்.
அதன்பிறகே புரிந்துகொண்ட காமராஜர், இவ்வளவு பெரிய உள்ளமா அவருக்கு எனக்கூறி, கருணாநிதியின் கையை பிடித்துக்கொண்டு உயிர் போவதற்கு முன்பு, 'நீங்கள் தான் இந்த நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும்' என்று காமராஜர் சொன்னாராம்.

திருச்சி சிவாவைக் கண்டிக்கும் காங்கிரஸ் கட்சியினர்
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை:
``ஆதாரம் இல்லாமல் அவர் பேசுகிறார். காமராஜர் பற்றி பேச யாருக்கும் தகுதியில்லை”
'திமுக பரப்பிய கட்டுக்கதைகளாலேயே காமராஜர் தேர்தல் களத்தில் வீழ்த்தப்பட்டார்' - காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி:
``முதல்வராக அரசினர் விடுதியில் தங்கியிருந்தபோது வெப்பம் அதிகமாக இருந்தால், மரத்தடியில் கட்டிலைப் போட்டு உறங்கியவர் காமராஜர். அவர் ஏ.சி இல்லாமல் தூங்க மாட்டார் என்று திருச்சி சிவா எம்.பி கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது.
காமராஜருக்கு எதிராக கடந்த காலத்தில் காழ்ப்புணர்ச்சியில் பரப்பப்பட்ட கட்டுக்கதைகளின் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. காமராஜர் வாழ்ந்த வீட்டுக்கு காங்கிரஸ் கட்சி வாடகை கொடுத்து வந்தது. அது அவரது சொந்த மாளிகை என்பது போன்ற திமுக பரப்பிய கட்டுக்கதைகளாலேயே காமராஜர் தேர்தல் களத்தில் வீழ்த்தப்பட்டார் என்பது வரலாறு. காமராஜருக்கு எதிராக பரப்பப்படுகிற கட்டுக்கதைக ளுக்கு பதிலடி கொடுக்காமல் இருந்தால், காமராஜர் ஆன்மா நம்மை மன்னிக்காது.”
நாம் தமிழர் கட்சி, சீமான்
'திமுக விற்கு ஓட்டுப் போடுவதும், திருட்டுப் பயல வீட்டிற்குக் கூப்பிடுவதும் ஒன்று' என்று சொன்னவர் காமராஜர். அவரா, 'கருணாநிதியின் கையை பிடித்துக்கொண்டு உயிர் போவதற்கு முன்பு, 'நீங்கள் தான் இந்த நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும்' என்று கூறியிருப்பார். காமராஜர் உயிரோடு இல்லை என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசுவார்கள்.
திருச்சி சிவாவின் விளக்கம்
``பெருந்தலைவர் காமராசரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் தன்மையில் நான் பேசியதாகக் கருத்து கொண்டு விவாதங்கள் வலுத்துக் கொண்டு வருகின்றன. நான் எதிர்வரிசையில் இருக்கும் தலைவர்களைப் பற்றிப் பேசும்போதுகூட கண்ணியத்தோடு விமர்சிப்பதைப் பலரும் அறிவார்கள். கல்விக்கண் திறந்த காமராசர் என்றும், மதிய உணவுத் திட்டத்தின் மூலமாக ஏழை வீட்டுப் பிள்ளைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் வருவதற்கு இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் என்பதையும் பல மேடைகளில் உருக்கமாகவும், உணர்ச்சிகரமாகவும் நான் பேசுவது வழக்கம்.
கழகத் துணைப் பொதுச் செயலாளர் திரு @tiruchisiva எம்.பி., அவர்கள் அறிக்கை!
— DMK (@arivalayam) July 16, 2025
பெருந்தலைவர் காமராசரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் தன்மையில் நான் பேசியதாகக் கருத்து கொண்டு விவாதங்கள் வலுத்துக் கொண்டு வருகின்றன. நான் எதிர்வரிசையில் இருக்கும் தலைவர்களைப் பற்றிப் பேசும்போதுகூட… pic.twitter.com/wcKUXFGLvB
காமராசர் புகழுக்கு நாளும் மெருகேற்றும் திமுக
'குணாளா! மணாளா! குலக்கொழுந்தே! குடியாத்தம் சென்று வா! வென்று வா!' என்று எழுதிய பேரறிஞர் அண்ணா - காமராசரின் மறைவுக்குப் பின் அவருக்கு அனைத்து மரியாதைகளும் செய்ததோடு, சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு அவர் திருப்பெயரைச் சூட்டிய முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழியொற்றி, அவர் பிறந்தநாளை 'கல்வி வளர்ச்சி நாளாக' கடைப்பிடித்து அவரின் புகழுக்கு நாளும் மெருகேற்றும் இன்றைய கழகத் தலைவர் தமிழ்நாட்டு முதலமைச்சர் தளபதி அண்ணன் மு.க.ஸ்டாலின் தலைமையின்கீழ் பணியாற்றும் நான், மறைந்த தலைவர்களின் புகழுக்கு மாசு படிவதை எந்த வகையிலும் யார் செய்தாலும் ஏற்கும் மனநிலை கொண்டவனல்ல.
காமராசர் மீது மிகுந்த மரியாதையும் பெருமதிப்பும் கொண்டவன் நான்
நாட்டு விடுதலைப் போரில் பல ஆண்டுகள் சிறையேகி, தியாகத் தழும்பேறி, முதலமைச்சராகவும், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் மக்கள் தொண்டாற்றி, எல்லோர் மனதிலும் தனித்த இடம் பிடித்த பெருந்தலைவர் காமராசர் அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் பெருமதிப்பும் கொண்டவன் நான். அண்ணா, கலைஞர், தளபதி வழியில் - கண்ணியம் காக்கும் கடமை கொண்ட கழகத் தொண்டன்! இந்த விளக்கத்தினை எல்லோரும் அன்புகூர்ந்து ஏற்று என் உரையில் நான் கூறிய செய்தியினை மேலும் விவாதப் பொருளாக்கிட வேண்டாம் என அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்!

திருச்சி சிவாவின் காமராஜர் குறித்த இந்தப் பேச்சுகளும், அதற்கு எதிராக வெடிக்கும் கண்டனங்கள்தான் கடந்த இரண்டு நாள்களாக தமிழக அரசியலில் பேசுபொருளாகியிருக்கின்றன. 'தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் இது தேவையில்லாத வேலை' என்றே திமுகவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திருச்சி சிவாவை மெல்லமாகக் கண்டிக்கின்றனர், பிற கட்சி தலைவர்கள் 'காமராஜர் புகழுக்கு எதிரான கட்டுக்கதைகளில் இதுவும் ஒன்று' எனக் கடுமையான கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs