விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்...
சென்னை: லவ் டார்ச்சர்; பண மோசடி - ஜிம் பயிற்சியாளர் சிக்கிய பின்னணி!
சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த 28 வயதாகும் இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், அசோக் நகர் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்றிருக்கிறார். அப்போது, அங்கு பயிற்சியாளராக இருந்த ராஜ்குமார் என்பவர் இளம்பெண்ணுடன் நட்பாகப் ழகியிருக்கிறார். அதனால் இளம்பெண்ணும் ராஜ்குமாரும் போனில் பேசி வந்திருக்கிறார்கள். அப்போது ராஜ்குமார், தனக்கு விவாகரத்து ஆகிவிட்டது. தனியாக வசித்து வருவதாக இளம்பெண்ணிடம் கூறி அனுதாபத்தை பெற்றியிருக்கிறார். அதோடு இளம்பெண்ணிடம் பணம் தேவை எனக் கூறி 1,10,000 ரூபாய் வரை ராஜ்குமார் வாங்கியதாகக் கூறப்படுகிறது. அந்தப் பணத்தையும் ராஜ்குமார் திரும்பக் கொடுக்கவில்லை.
இந்தநிலையில்தான் ராஜ்குமாரின் சுயரூபம் வெளியில் தெரியவந்திருக்கிறது. நட்பாகப் பழகி வந்த இளம்பெண்ணிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தியிருக்கிறார் ராஜ்குமார். ஆனால் அந்தக் காதலை இளம்பெண் நிராகரித்திருக்கிறார். ஒருதலையாக இளம்பெண்ணை காதலித்த ராஜ்குமார், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி டார்ச்சர் செய்யத் தொடங்கியிருக்கிறார். அதனால் மனவேதனையடைந்த இளம்பெண், ராஜ்குமாரின் செல்போன் நம்பரை பிளாக் செய்ததோடு அவரோடு பேசுவதை தவிர்த்து வந்திருக்கிறார். மேலும் தான் கடனாக கொடுத்த பணத்தையும் திரும்ப தரும்படி ராஜ்குமாரிடம் கேட்டிருக்கிறார். இதையடுத்து இளம்பெண்ணை நேரில் சந்தித்த ராஜ்குமார், தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியிருக்கிறார். அதன் பிறகே சுதாரித்துக் கொண்ட இளம்பெண், அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அதன்பேரில் ராஜ்குமாரை விசாரணைக்கு அழைத்த போலீஸார், அவரிடம் காதல் டார்ச்சர், பணம் வாங்கியது குறித்து விசாரித்திருக்கிறார்கள். விசாரணைக்குப் பிறகு இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் ராஜ்குமாரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 2 செல்போன்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுகு றித்து அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், ``உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்ற இளம்பெண்ணிடம் ராஜ்குமார் தவறான நோக்கத்தில் பழகியிருக்கிறார். அதை தெரிந்துக் கொண்ட இளம்பெண், ராஜ்குமாருடன் பேசுவதை தவிர்த்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார், இளம்பெண்ணுக்கு லவ் டார்ச்சர் கொடுத்ததோடு அவரை மிரட்டியிருக்கிறார். அதற்கான ஆதாரங்களை இளம்பெண் எங்களிடம் கொடுத்த பிறகு ராஜ்குமாரை விசாரணைக்காக அழைத்தோம். அப்போது ராஜ்குமார், தன்மீது எந்தவித தவறும் இல்லை என்று கூறினார். ஆனால் ஆதாரங்கள் அடிப்படையில் ராஜ்குமாரை கைது செய்திருக்கிறோம். அவரின் பின்னணி குறித்தும் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களையும் ஆய்வுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்" என்றனர்.