செய்திகள் :

'கூட்டணி ஆட்சிதான்.. அமித்ஷா கூறுவதே வேத சத்தியம்' - எடப்பாடியை மீண்டும் மீண்டும் சீண்டும் அண்ணாமலை

post image

தமிழக பா.ஜ.க தலைவராக 2021-ல் அண்ணாமலை நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் தி.மு.க-வின் ஊழல் குறித்து மட்டும் பேசிவந்தார், அண்ணாமலை. திடீரென கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க குறித்தும் பேசத் தொடங்கினார். ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்தும் அண்ணாமலை பல விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி முறிந்தது. பிறகு 2024 தேர்தலில் பா.ம.க, அ.ம.மு.க-வுடன் கூட்டணி வைத்துத் தேர்தலைச் சந்தித்த பா.ஜ.க ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. இதையடுத்து அந்தக் கட்சியின் டெல்லி தலைமை தே.ஜ கூட்டணிக்குள் அ.தி.மு.க-வை கொண்டுவர முயற்சித்தது. அப்போது அ.தி.மு.க தலைவர்கள் பலரும், 'பா.ஜ.க மாநில தலைவராக அண்ணாமலை இருக்கும் வரை கூட்டணி கிடையாது' என்றனர்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா

இப்படியான சூழலில் கடந்த மார்ச்சில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசினார், எடப்பாடி. பிறகு ஏப்ரலில் சென்னைக்கு வந்த அமித்ஷா, 'அ.தி.மு.க, பா.ஜ.க இடையில் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது' என அறிவித்தார். அப்போது பேசிய அமித்ஷா, "சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து கூட்டணி ஆட்சியை அமைக்கும். கூட்டணி ஆட்சிதான் அமையப் போகிறது. அது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும்" என்றார். இது பெரும் விவாதத்தைக்கிளப்பிய சூழலில், 'கூட்டணி ஆட்சி' குறித்து எடப்பாடி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதற்கிடையில் மாநில தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.

இதில் ஏற்பட்ட அதிருப்தியில் மையக்குழுக் கூட்டம் புறக்கணிப்பு, தன்னிச்சையாக ஆர்ப்பாட்டம் எனத் தனி ரூட்டில் பயணிக்கத் தொடங்கினார், அண்ணாமலை. இதற்கு பா.ஜ.க-வுக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பிய சூழலில்தான், ''தி.மு.க-வை வீழ்த்துவதற்கான வலிமையான கூட்டணியாக அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியைப் பார்க்கவில்லை. ஏனெனில் எண்ணிக்கை மட்டும் போதாது' எனப் பேட்டி ஒன்றைக் கொடுத்துப் பரபரப்பை மேலும் எகிறவைத்தார். அப்போதும் எடப்பாடி தரப்பு அமைதியாகவே இருந்தது. இந்தச்சூழலில் சமீபத்தில் மதுரையில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. அ.தி.மு.க தலைவர்களும் கலந்து கொண்ட அந்த மாநாட்டில் பெரியார், அண்ணாவை விமர்சித்து வீடியோ வெளியானது சர்ச்சையானது. இது எடப்பாடி தரப்புக்குத் தலைவலியாக அமைந்தது.

முருக பக்தர்கள் மாநாடு
முருக பக்தர்கள் மாநாடு

அந்த நேரத்தில் அமித்ஷா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "சட்டசபைத் தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் நிச்சயமாகத் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையும். அதில், பா.ஜ.க-வும் ஒரு அங்கமாகக் கண்டிப்பாக இருக்கும். முதல்வர் அ.தி.மு.க-வில் இருந்து வருவார்" என்றார். இதனால் அ.தி.மு.க-வினர் அதிர்ச்சியடைந்தனர். குறிப்பாக 'முதல்வராக பழனிசாமி வருவார்' எனக் கூறாமல், 'அ.தி.மு.க.,வில் இருந்து வருவார்' என அமித்ஷா கூறியது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இதற்கும் எடப்பாடி தரப்பு பதிலளிக்கவில்லை.

இந்தச்சூழலில்தான் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "நான் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன் என ஸ்டாலின் நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால் நான் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்ததும் ஸ்டாலினுக்குப் பயம் வந்துவிட்டது. தி.மு.க கூட்டணி வைத்தால் நல்ல கட்சி; அதுவே அ.தி.மு.க கூட்டணி வைத்தால் அது மதவாதக் கட்சி ஆகிவிடுமா?. 'எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும்' என்றுதான் அமித்ஷா சொன்னார். 'கூட்டணி ஆட்சி' என்று அவர் சொல்லவில்லை. இந்த கூட்டணிக்கு அ.தி.மு.க தலைமை தாங்கும். அ.தி.மு.க ஆட்சி அமைக்கும். அதில் இ.பி.எஸ் முதலமைச்சர். இதில் உங்களுக்கு என்ன சந்தேகம் இருக்கிறது?. இந்தக் கூட்டணியில் யாரும் விரிசல் ஏற்படுத்த முடியாது. அ.தி.மு.க கூட்டணி பிரமாண்ட வெற்றி அடையும். தனிப்பெரும் ஆட்சி அமைக்கும்" என்றார். எடப்பாடியின் இந்த கருத்து ஏற்கெனவே அமித்ஷாவின் கூறிய கருத்துக்கு முற்றிலும் எதிராக இருந்தது.

எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா
எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா

இதுகுறித்த விவாதம் சென்றுகொண்டிருந்த சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "பா.ஜ.க-வின் ஒரு தொண்டனாகச் சொல்கிறேன்.. இந்தக் கூட்டணி உருவானதில் என் பங்கு இல்லை; இந்த கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது என்பதில் என் பங்கு இல்லை. இந்த கூட்டணி எப்படி இருக்க வேண்டும் என யார் பேசினார்கள் என்பதிலும் என் பங்கு இல்லை. அப்படியான நிலையில் என்னுடைய தலைவர் அமித்ஷா சொல்வதைத்தான் நான் கேட்டாக வேண்டும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறும் என அமித்ஷா கூறுவதே எனக்கு வேத சத்தியம். அவர் பலமுறை மிகத் தெளிவாகவே சொல்லிய பிறகு, ஒரு தொண்டனாக நான் கருத்தை மாற்றிக் கொண்டு ‘கூட்டணி ஆட்சி இல்லை’ எனச் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால், இந்தக் கட்சியில் தொண்டனாக இருக்க எனக்குத் தகுதி இல்லை. என்னுடைய தலைவர் சொன்ன கருத்தை நான் ஏற்றுக் கொள்ள முடியாமல், என்னுடைய தலைவர்கள் கருத்தை நான் வலுப்படுத்த முடியாமல், அந்த கருத்துகளில் நான் சந்தேகத்தை எழுப்பினால் இந்த கட்சியில் நான் தொண்டனாக இருக்கக் கூடாது. தலைவனாகவும் இருக்கக் கூடாது; இது என்னுடைய கருத்து.

என்னைப் பொறுத்தவரையில் தலைவர்கள் பேசியிருக்கிறார்கள்; எனக்கு அதில் பங்கு இல்லை. ஆனால் என்னுடைய தலைவர்கள் பேசியதை நான் தூக்கிப் பிடித்தாக வேண்டும். அவர்கள் கூட்டணி ஆட்சிதான் எனப் பேசியதாக நான் நம்புகிறேன். ஆகையால் இதில் உறுதியாகவும் இருக்கிறேன், என்னுடைய தலைவர்கள், தொண்டர்களை, நிர்வாகிகளைக் கூப்பிட்டு நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டால் நானும் மாற்றிக் கொள்கிறேன். ஆனால் அமித்ஷா ஒரு கருத்தைச் சொல்லியபிறகு ஒரு தொண்டனாக நான் எப்படி அந்த கருத்தில் மாறுபட முடியும்? அண்ணாமலை ஏதோ கூட்டணியை உடைக்கப் பார்க்கிறார்.. பிளக்கப் பார்க்கிறார் என நான்கு பேர் வருவான்.

பாஜக அண்ணாமலை

ஆனால் என்னுடைய தலைவர் பேசிய கருத்தை நான் ஸ்டேண்ட் செய்யலைன்னா ஒரு பி.ஜே.பி தொண்டனா, தலைவனாக இருக்க நான் தகுதி இல்லை என்றுதான் அர்த்தம். இதில் அ.தி.மு.க மாற்றுக் கருத்து இருந்தால் அவர்கள் அமித்ஷாவுடன் பேசட்டும். பா.ம.க, புதிய தமிழகம் கட்சித் தலைவர்கள் தெளிவாகக் கூட்டணிக் கட்சி ஆட்சியில் உட்கார நாங்க ஏன் கஷ்டப்பட்டு வேலை செய்யனும் எனச் சொல்கின்றனர். பிரேமலதா அக்காவும் இதே கருத்தைத்தான் சொல்கிறார். அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி ஆட்சி குறித்துப் பேசத் தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு தொண்டனும் வேலையை விட்டுவிட்டு கட்சிக்காக நேரம் ஒதுக்கும்போது அந்தத் தொண்டன் எதிர்பார்க்கிறான்.. எதற்காகக் கட்சிக்கு நேரம் கொடுக்கிறான்.. எதுக்காக போஸ்டர் ஒட்டணும்.. பெயின்ட் டப்பாவைக் கையில் எடுக்கணும்? இந்த கட்சியில் 100 பேர் கூட எம்.எல்.ஏ-வாகலாம்.. ஆனால் இத்தனை லட்சம் தொண்டர்களின் ஆசை என்ன..

நம்ம கட்சியினர் அமைச்சராவதைப் பார்த்துப் பெருமைப்படுவதுதான். அதைத்தான் ஒவ்வொரு தொண்டனும் எதிர்பார்க்கிறான். எல்லா தொண்டனுக்கும் சீட் கிடைக்காது. நான் தொண்டர்களின் குரலாகப் பேசிக் கொண்டே இருக்கிறேன். இதில் என்னுடைய தனிப்பட்ட கருத்தாக நான் எதையும் பேசவில்லை. அமித்ஷா பேசியதைத்தான் இங்கு நான் முன் வைக்கிறேன். இல்லை.. இல்லை.. இதை எல்லாம் தேர்தல் நேரத்தில் பார்க்கலாம் என்றால் என்னுடைய தலைவரையே டிபெண்ட் செய்ய முடியாத நான் ஏன் அரசியல் கட்சியில் இருக்க வேண்டும்?" என்றார். ஏற்கெனவே எடப்பாடியின் மாறுபட்ட கருத்தால் கமலாலயத்தில் அனல் தகித்துக்கொண்டிருக்கும் சூழலில்தான் அண்ணாமலையின் கூட்டணி ஆட்சி குறித்த பேட்டி மேலும் சூட்டைக்கிளப்பியிருக்கிறது!

குபேந்திரன்

இதன் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், "மக்களை முட்டாள் ஆக்கும் செயல் இது. 'பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி ஆட்சி அமையும். அந்த ஆட்சியில் பா.ஜ.க பங்கேற்கும்' என, அமித்ஷா தெரிவித்துவிட்டார். இதற்கு அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான அணி வெற்றிபெற்றால் அமைச்சரவையில் பா.ஜ.க பங்கேற்கும் என்பதுதான் பொருள். ஆனால் எடப்பாடி, 'புரிந்துகொள்ளச் சக்தி இல்லை. அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை' எனச் சொல்லி வருகிறார். இன்னும் எத்தனை காலத்துக்கு மக்களையும், பத்திரிகையாளர்களையும் நீங்கள் முட்டாள் ஆக்குவீர்கள்?

இதற்கிடையில் அண்ணாமலை, 'அமித்ஷா கூறியதுதான் வேதவாக்கு. அந்த கருத்தில்தான் நான் நிற்பேன்' என்கிறார். எனவே இரண்டு பேரும் ஒரு முடிவுக்கு வர வேண்டும். அவர்கள் இருவரும் இணைந்து செய்தியாளர் சந்திப்பை நடத்தி, 'கூட்டணி ஆட்சி என்றால் என்ன?. அ.தி.மு.க தலைமையிலான அணி வெற்றிபெற்றால் அமைச்சரவையில் பா.ஜ.க இடம்பெறுமா?' என்பதையெல்லாம் விளக்க வேண்டும். நான் தான் முதல்வர் எனக் கூறும் எடப்பாடி, 'உங்களுக்குக் கூட்டணி ஆட்சி குறித்துப் புரியவில்லையென்றால் நாங்கள் பாடம் எடுக்கத் தயாராக இருக்கிறோம்' என அண்ணாமலையைக் கண்டித்து காட்டமாக அறிக்கை வெளியிடுவாரா?. ஆக அமித்ஷா, எடப்பாடி மாறுபட்ட கருத்துக்களுடன் பேட்டி கொடுப்பது காமெடியாகவே இருக்கிறது.

அமித்ஷா வுட

கவுண்டமணி, செந்தில்; பார்த்திபன், வடிவேலு காமெடியை விட மோசமாகச் சென்று கொண்டிருக்கிறது. நீங்கள் முதலில் தெளிவுக்கு வர வேண்டும். இவர்களுக்கெல்லாம் பாடம் கற்பிக்க வேண்டியது தமிழக மக்கள்தான். அதேநேரம் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி அமையக்கூடாது. எடப்பாடி அவமானப்பட வேண்டும் என்பதுதான் அண்ணாமலையின் நோக்கம். தி.மு.க தலைவர் ஸ்டாலினை விட அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி உடைய வேண்டும் என்பதில் அண்ணாமலைக்குத்தான் ஆர்வம் அதிகம். தமிழ்நாட்டில் பா.ஜ.க-வால் ஒரு போதும் காலூன்ற முடியாது' என அன்வர்ராஜா பேட்டி கொடுத்திருந்தார்.

அதுகுறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, 'நான் தனி மனிதன்.. யாரிடமும் வேலை செய்யவில்லை' என்றார். இதேபோல் பா.ஜ.க-வின் பூத் வலிமைப்படுத்தும் பயணத்திலும் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை. ஆனால் எடப்பாடி கருத்துக்கு மட்டும் முதல் ஆளாக ஓடி வந்து பதில் சொல்கிறார். இதன் மூலமே அவரது நோக்கம் தெளிவாகிவிட்டது. இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கூட்டணியை உடைக்கும் வேலைகளை அண்ணாமலை செய்வார். இப்படியான சூழலில் பா.ஜ.க கூட்டணியில் தொடர வேண்டுமா என எடப்பாடிதான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.

'கூட்டணி ஆட்சி விவகாரத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க உறவு சீக்கிரமே முறியும்' என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன. அதற்கு ஏற்றார் போலவே அவர்களின் நகர்வுகளும் இருக்கின்றன. என்ன நடக்கப்போகிறது என்பது விரைவில் தெரிந்துவிடும்!

kamarajar: `கட்டுக்கதை DMK' - கொதிக்கும் Congress | குழப்பும் Annamalai | Imperfect Show 17.7.2025

* கமராஜர் பற்றி சர்ச்சை கருத்து சொன்ன திருச்சி சிவா?* திமுகவின் கட்டுக்கதைகளால் காமராஜர் வீழ்த்தப்பட்டார்: ஜோதிமணி* காமராஜர் தற்போது உயிரோடு இல்லை என்பதால் எதை, எதையோ பேசிக் கொண்டிருக்கிறார் - சீமான் ... மேலும் பார்க்க

Israel: நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இழக்கிறாரா நெதன்யாகு... சுற்றிவளைக்கும் பிரச்னைகள் என்னென்ன ?

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சி, நாடாளுமன்றத்தில் அதன் பெரும்பான்மையை இழந்து வருகிறது. இந்த வாரத்தில் இரண்டாவது கட்சியாக தீவிர பாரம்பரிய கட்சியான ஷாஸ், நெதன்யாகுவின் கேபினட்டில் இருந்து ... மேலும் பார்க்க

TNPSC Group 4: "மறுதேர்வு நடத்த வேண்டும்" - தவெக பொதுச்செயலாளர் அறிக்கை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கடந்த ஜுலை 12ம் தேதி நடத்திய குரூப்-4 தேர்வில் கடினமான கேள்விகள் கேட்கப்பட்டதாக சலசலப்புகள் எழுந்தன. இந்தநிலையில் தமிழ்நாடு அரசு தமிழ் வழியில் 10ம் வகுப்ப... மேலும் பார்க்க

UK: "இனி 16 வயது முதல் வாக்களிக்கலாம்" - தேர்தலில் புதிய மாற்றங்களுக்கு என்ன காரணம்?

இங்கிலாந்தில் அடுத்த பொதுத்தேர்தல் முதல், வாக்களிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 16-ஆக தளர்த்தி் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே ராணுவம் முதல் பல இடங்களில் பணியாற்றும் 16,17 வயது இளைஞர்களுக்க... மேலும் பார்க்க

`கூட்டணி ஆட்சிதான்; அமித் ஷா கூறுவதே வேதசத்தியம்; மாற்றுக் கருத்து இருந்தால்..!' - அண்ணாமலை

2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவும்- பாஜகவும் கூட்டணி அமைத்திருக்கிறது. ஆனால் ஆட்சி அதிகாரம் குறித்து இருதரப்பினரிடையேயும் ஒரு வித சலசலப்பு இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. அமித் ஷா தமிழகத்... மேலும் பார்க்க