செனகலில் இருந்து பிரான்ஸ் படைகள் வெளியேற்றம்! ராணுவத் தளங்கள் அரசிடம் ஒப்படைப்பு...
``ரூ.50 லட்சம் வாங்கி விட்டு போதைப் பொருள் தரவில்லை..'' - 2 பேரை 10 நாள்கள் சித்ரவதை செய்த கும்பல்
மும்பையை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் சபீர் சித்திக் மற்றும் அவரது நண்பர் சாஜித் எலக்ட்ரிக்வாலா ஆகியோரிடம் போதைப்பொருளை சப்ளை செய்வதற்காக சர்வார் கானும், அவனது கூட்டாளிகளும் சேர்ந்து ரூ.50 லட்சம் கொடுத்தனர்.
ஆனால் சொன்னபடி சாஜித் போதைப்பொருளை சப்ளை செய்யவில்லை. இதையடுத்து சர்வார் கானும், அவனது கூட்டாளிகளும் சேர்ந்து சாஜித் மற்றும் சபீர் ஆகியோரை இரவு விருந்து கொடுப்பதாகக் கூறி மும்பை அந்தேரிக்கு வரவழைத்தனர்.
அவர்கள் வந்தவுடன் அவர்களைக் கடத்திச்சென்றனர். அவர்கள் இரண்டு பேரையும் ராய்கட், நாசிக் மற்றும் மத்திய பிரதேசத்திற்கு கடத்திச்சென்றனர். இறுதியாக அவர்கள் இரண்டு பேரையும் உத்தரப்பிரதேசத்திற்கு கொண்டு சென்று அடைத்து வைத்து நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்தனர். அதை வீடியோவும் எடுத்துக்கொண்டனர். இதில் அவர்களிடமிருந்து சபீர் மட்டும் தப்பித்து மும்பைக்கு வந்தார்.

மும்பை வந்தவுடன் இது குறித்து சபீர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து இவ்வழக்கை குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். குற்றப்பிரிவு தனிப்படை போலீஸார் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாண்டா என்ற இடத்திற்கு சென்று ரெய்டு நடத்தி சாஜித்தை மீட்டனர். அவரை 10 நாட்கள் அடைத்து வைத்து அடித்து சித்ரவதை செய்திருந்தனர். அவர்களை அடைத்து வைத்திருந்த சர்வார் கானும், அவனது கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பை தொடர்குண்டு வெடிப்புக்குக் காரணமான தாவூத் இப்ராகிம் கூட்டாளி சோட்டா சகீல் சகோதரன் அன்வருக்கு கைதான சர்வார் கான் மிகவும் நெருக்கமாகும்.
போலீஸார் இது குறித்து கூறுகையில்,''சாஜித்தை கொலை செய்ய கடத்தல்காரர்கள் திட்டமிட்டிருந்தனர். சபீர் வந்து சொல்லாமல் இருந்திருந்தால் கொலை செய்திருப்பார்கள். அவர்கள் தெளிவாகத் திட்டமிட்டு பல வாகனங்களைப் பயன்படுத்தி இக்கடத்தலை செய்துள்ளனர். கைதானவர்களிடம் விசாரித்தபோது அவர்களுக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. சோட்டாசகீல் சகோதரர் அன்வர் சார்பாக மும்பையில் சர்வார் கான் செயல்பட்டு வந்தார். அன்வர் கொடுக்கும் பணத்தை எம்.டி போதைப்பொருளுக்கு சர்வார் கான் நிதியுதவி செய்து வந்திருக்கிறார். சாஜித்திற்கும் அந்த வகையில் தான் பணம் கொடுத்திருக்கிறால். சாஜித் போதைப்பொருள் தொடர்பாக 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவரை ஜாமீனில் வெளி வந்தபிறகு மீண்டும் அத்தொழிலில் ஈடுபட திட்டமிட்டிருந்தார். இதற்காக சர்வார் கானிடம் பணம் வாங்கி இருக்கியிருக்கிறார்''என்று தெரிவித்தார்.