மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
`படித்த பழங்குடியின பள்ளியிலேயே தலைமை ஆசிரியர் பணி' - ஷீலாவை நெகிழ்ந்து வாழ்த்தும் மக்கள்
கன்னியாகுமரி மாவட்டம் கடையால் பேரூராட்சிக்குட்பட்ட பேணு அருகேயுள்ள பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தாவர் கோவிந்தன். அரசு ரப்பர் கழகத்தில் ரப்பர் மரங்களில் பால் வடிக்கும் பணியாளராக இருந்தார். இவரின் மனைவி பாறுக்குட்டி. கோவிந்தன் - பாறுக்குட்டி தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் பயின்ற பாறுக்குட்டி, அப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தார். தான் பயின்று, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்த அதே பள்ளியில் மூத்த மகள் ஷீலாவை 1991-ம் ஆண்டு ஒன்றாம் வகுப்பில் சேர்த்தார் பாறுகுட்டி. பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்த தாய் பள்ளிக்கு அடிக்கடி வருவது ஷீலாவிற்கு படிக்கக் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியது. பள்ளி விடுதியில் தங்கி கல்வி பயின்ற ஷீலா 2002 -ம் ஆண்டு 12-ம் வகுப்பு படித்து முடித்தார். ஒன்றாம் வகுப்பு முதல் படிப்பில் ஆர்வமாக இருந்த ஷீலா ஆசிரியர் ஆகவேண்டும் என விருப்பம் தெரிவித்தார். அவருக்கு திண்டுக்கல்லில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் மெரிட் அடிப்படையில் படிக்க இடம் கிடைத்து.

ஆசிரியர் பயிற்சி முடித்து 2007-ல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை கிடைத்தது. தான் படித்த பள்ளியில், மாணர்வகளை கல்வி கற்பிக்க ஆசை இருந்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையே பேச்சிப்பாறை பழங்குடியினர் பள்ளியில் இடமாறுதல் கிடைத்தது. பின்னர் வட்டப்பாறை பள்ளிக்கு மாறுதல் கிடைத்தது.
இரண்டு வருடங்களுக்கு முன் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு கிடைத்தது. இந்நிலையில் தான் படித்த பத்துகாணி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் தலைமை ஆசிரியராக மாறுதல் கிடைத்துள்ளது. தான் பயின்ற பள்ளியிலேயே தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ள ஷீலாவுக்கு அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் வழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

இதுபற்றி தலைமை ஆசிரியை ஷீலா கூறுகையில், "மாணவராக பத்துகாணி பள்ளிக்கு வரும்போது இதே பள்ளியில் ஆசிரியராக வரவேண்டும் என விரும்பினேன். ஆனால் தலைமை ஆசிரியராக வர வேண்டும் என இறைவன் விரும்பியிருக்கிறார். இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்துள்ளேன். தற்போது எங்கள் பள்ளியில் அதிகமான வசதிகள் கிடைத்துள்ளது. கூடுதல் மாணவர்களை பள்ளிக்கு வர செய்வதும், மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கவும் அனைத்து ஆசிரியர்களுடன் இணைந்து பணிசெய்வோம்" என்றார். தலைமை ஆசிரியர் ஷீலாவின் கணவர் மது, விவசாயம் செய்து வருகிறார். மூத்த மகன் சபரீஷ் நாவல்காடு பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கிறார். இளைய மகன் சக்திவேல் பத்துகாணி பள்ளியில் பயின்று வருகிறார். இவரது இளைய சகோதரி தபால் துறையிலும், சகோதரன் தனியார் நிறுவனத்திலும் வேலை செய்கின்றனர்.