கருப்பையில் ஃபைப்ராய்டு கட்டிகள் ஏற்படக் காரணம் என்ன? தடுப்பது எப்படி?
பெண்களின் கருப்பையில் உருவாகும் ஃபைப்ராய்டுகள் அல்லது கருப்பை நார்த்திசுக்கட்டிகள் ஏன் ஏற்படுகிறது? வராமல் தடுப்பது எப்படி? சிகிச்சை முறைகள் என்னென்ன?
பெண்களுக்கு அறிகுறிகள் ஏதுமின்றி உருவாகும் ஒரு உடல்ரீதியான பிரச்னைதான் ஃபைப்ராய்டுகள்(Uterine fibroids) எனும் கருப்பை நார்த்திசுக்கட்டிகள். இவை புற்றுநோய்க் கட்டிகள் அல்ல. கருப்பையில் உருவாகும் தசைக் கட்டிகள் என்று சொல்லலாம். பூப்படைந்த பெண்களுக்கு கருவுறும் வயதில் ஏற்படுகின்றன. இது முற்றிலும் அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம், சிலருக்கு மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு, இடுப்பு வலி இருக்கலாம்.
ஃபைப்ராய்டுகள் பற்றி நொய்டா மதர்குட் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் டாக்டர் ரொனாக் கந்தேல்வால் அளித்த நேர்காணல்..
கடந்த பத்தாண்டுகளில் இளம்பெண்களுக்கு அதிகம் பைப்ராய்டு கட்டிகள் ஏற்படுகின்றன. இது பெண்களின் ஆரோக்கியத்தில் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது?
முன்னதாக 40 வயதைக் கடந்த பெண்களிடம்தான் இந்த கருப்பை நார்த்திசுக் கட்டிகள் காணப்படும். தற்போது இது 20 மற்றும் 30களில் உள்ள பெண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது. பெரும்பாலும் மாறிவரும் வாழ்க்கை முறை, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு அல்லது சமநிலையின்மை, அதிகரித்து வரும் மன அழுத்தம், ஒழுங்கற்ற தூக்கம், உட்கார்ந்தே வேலை செய்யும் முறை ஆகியவற்றால் இது ஏற்படுகிறது.
இதன் விளைவாக இளம்பெண்கள் பலரும் மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு, இடுப்பு வலி, அதன்பின்னர் கருவுறும்போது சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
இந்த நார்த்திசுக் கட்டிகள், ரத்த சோகை, சோர்வை ஏற்படுத்தும். மேலும் கருவுறுதலில் பாதிப்பை ஏற்படுத்தி ஒட்டுமொத்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். இவற்றால் கருவுறுதலில்தான் பெண்கள் பாதிக்கப்படுவதால் அவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.
அறிகுறிகளைப் பொருத்தவரை பெரும்பாலும் நார்த்திசுக்கட்டிகள் இருப்பதே தெரியாது. அதாவது அறிகுறிகளே இருக்காது. வழக்கமான பரிசோதனைகளின் மூலமாக மட்டுமே இவற்றை கண்டறிய முடியும். பெரும்பாலான பெண்கள் கருவுறுதலின்போதுதான் கண்டறிகின்றனர்.
வகைகள்...
இன்ட்ராமுரல் ஃபைப்ராய்டுகள்: இது கருப்பையின் தசைகளில் வளரும்.
சப்மியூகோசல் ஃபைப்ராய்டுகள்: கருப்பையின் உள்ளே உருவாகும் கட்டிகள். இதனால் கருப்பை வீங்கி காணப்படும்.
சப்செரோசல் ஃபைப்ராய்டுகள்: கருப்பையின் வெளிப்புறத்தில் உருவாகும் கட்டிகள்.
பென்குலேட்டட் ஃபைப்ராய்டுகள்: கருப்பையின் உள்ளே அல்லது வெளியே உள்ள தசைகளில் வளரும்.
பெண்களில் ஃபைப்ராய்டுகளை ஏற்படுத்துவதில் உணவு மற்றும் வாழ்க்கை முறை எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?
சிவப்பு இறைச்சி, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவு, ஆல்கஹால், காஃபின் ஆகியவற்றை அதிகம் எடுத்துக்கொள்வது நார்த்திசுக் கட்டிகள் உருவாக வழிவகுக்கும். அதேநேரத்தில் பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்து நிறைந்த உணவுகளைப் புறக்கணிப்பதும் கருப்பையில் பிரச்னைகளை ஏற்படுத்தும். சூரிய ஒளி குறைபாடு காரணமாக ஏற்படும் வைட்டமின் டி குறைபாடு இளம்பெண்களிடையே அதிகரித்து வருகிறது. இது நார்த்திசுக் கட்டிகளுக்கு மற்றொரு ஆபத்து காரணியாக உள்ளது.
மேலும் உடல் பருமன், நீண்ட நாள் மன அழுத்தம், உடற்பயிற்சியின்மை அல்லது உடல் இயக்கம் இல்லாதது ஆகியவை ஃபைப்ராய்டு வளர்ச்சிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும். அதாவது கருப்பையில் ஃபைப்ராய்டுகள் உருவாக ஹார்மோன்களைத் தூண்டி சமநிலையின்மையை ஏற்படுத்தும்.
அடுத்து குடல் ஆரோக்கியமும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. ஏனெனில் இது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் வளர்சிதை மாற்றத்தை சீர்குலைத்து ஃபைப்ராய்டு உருவாக வழிவகுக்கும்.
இளம்பெண்களிடம் ஃ பைப்ராய்டுகளைக் கண்டறிவதில் மருத்துவர்களுக்கு இருக்கும் சவால்கள் என்ன? இதனை எப்படி சரிசெய்வது?
அறிகுறிகள் மூலமாக கருப்பையில் நார்த்திசுக் கட்டிகளைக் கண்டறிவது சவாலானதாகவே இருக்கிறது. சில பெண்களுக்கு மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு, மாதவிடாய் நீட்டிப்பு, சோர்வு, இடுப்பு வலி போன்ற அறிகுறிகள் இருக்கும். பெரும்பாலான பெண்களுக்கு இதுபோன்ற அறிகுறிகள் பெரிதாகத் தெரிவதில்லை. அதனால் பலரும் இதனை சாதாரணமாகவே கடந்துவிடுகின்றனர். ஏனெனில் மாதவிடாய் ஆரோக்கியம் குறித்து பெண்கள் பலருக்கும் விழிப்புணர்வு இல்லை. இன்னும் பல இடங்களில் அதுபற்றி பேச கூச்சப்படுகின்றனர். மிகவும் அரிதாகவே மாதவிடாய் மற்றும் அதுசார்ந்த பிரச்னைகளை மற்றவர்களுடன் விவாதிக்கின்றனர்.
பெரும்பாலும் நார்த்திசுக்கட்டிகள் பெரியதாக வளர்ந்திருக்கும்போது கருவுறுதலை பாதிக்கும். இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாட்டையும் பாதிக்கும்.
அதேபோல அறிகுறிகள் இல்லாத நார்த்திசுக் கட்டிகள் பெரும்பாலும் தெரிவதில்லை. பிசிஓஎஸ், ஹார்மோன் பிரச்னை உள்ள பெண்கள் கருவுறும்போது எடுக்கும் கர்ப்ப கால ஸ்கேனில்தான் இவை தெரிய வருகின்றன.
அறிகுறியற்ற அதிக ஆபத்து உள்ள ஃபைப்ராய்டுகள்தான் சிக்கலை அதிகரிக்கிறது. ஆபத்து இல்லாத சிறிய ஃபைப்ராய்டு கட்டிகளும் உள்ளன. இது வளர்கிறதா என்று தொடர்ச்சியான பரிசோதனை அவசியம்.
பள்ளி, கல்லூரிகளில் இருந்து இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்க வேண்டும். மாதவிடாய் சுழற்சி என்பது என்ன? என்பதில் தொடங்கி அதுசார்ந்த பிரச்னைகள், அவற்றைக் கண்டறிய வழக்கமான பரிசோதனை அவசியம் என்பதை சிறுமிகளிடம் எடுத்துரைக்க வேண்டும். அதற்கான உணவு பழக்கவழக்கம் மற்றும் வாழ்க்கை முறை பற்றியும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்க வேண்டும்.
ஒருவேளை நார்த்திசுக் கட்டிகள் இருக்கும்பட்சத்தில் அதனை எதிர்கொள்ளும் வழிகள், வாழ்க்கைமுறை மாற்றம் என அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். உளவியல் ரீதியாகவும் ஆதரவு அளிக்க வேண்டும்.
பைப்ராய்டுகளுக்கான சிகிச்சை பற்றி...
மருத்துவ சிகிச்சையுடன் வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமாக இந்த பிரச்னையை சரிசெய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஃபைப்ராய்டுகளுக்குச் செல்லும் ரத்தத்தைத் தடுத்து அவற்றை செயலிழக்கச் செய்யும் கருப்பை நார்த்திசுக் கட்டி அடைப்பு முறை, வயிற்றில் சிறு குழாய் மூலமாக ஃபைப்ராய்டுகளை அகற்றும் லேப்ராஸ்கோபிக் மயோமெக்டமி சிகிச்சை முறை இப்போது பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இதன் மூலமாக இந்த பிரச்சனையில் இருந்து விரைவில் மீள்வதுடன் பின்னர் கருவுறுதல் எளிதாகிறது. வாழ்க்கை முறை மாற்றங்களும் இதில் பெரும் தாக்கத்தை ஏறப்டுத்துகின்றன. உடல் எடையைக் குறைத்து சரியான அளவில் வைத்திருப்பது, துரித உணவுகளைத் தவிர்த்து சத்தான உணவுகளைச் சாப்பிடுவது கருப்பை ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.