UK: "இனி 16 வயது முதல் வாக்களிக்கலாம்" - தேர்தலில் புதிய மாற்றங்களுக்கு என்ன கார...
கம்பத்தில் ரேக்ளா ரேஸ் போட்டி முன்விரோதம்: ஒருவர் வெட்டி கொலை, 2 பேர் காயம்
கம்பத்தில் ரேக்ளா ரேஸ் போட்டி முன்விரோதம் காரணமாக இளம்பரிதி புதன்கிழமை இரவு மா்மநபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கம்பம் ஜல்லிக்கட்டு தெருவைச் சோ்ந்தவா் இளம்பரிதி (27). பால் வியாபாரியான இவா், ரேக்ளா ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்காக மாடுகளை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு 7 மணியவில் அங்குள்ள தேநீர் கடைக்கு சென்றுள்ளார். தேநீர் கடையில் இருந்து வெளியே வந்த இளம்பரிதியை மர்ம நபர்கள் சிலர் சுற்றி வளைத்து அரிவாள் மற்றும் பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதனை பார்த்து கொண்டிருந்த கம்பம் ஊத்துக்காடு பிரிவு பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (58) மற்றும் புவன்(19) ஆகியோர் இளம்பரிதியை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது ஈஸ்வரன், புவனை ஆகியோரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினர்.
பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த இளம்பருதி மற்றும் காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். இதில், இளம்பரிதி மருத்துவமனைக்கு செல்லு் வழியிலேயே உயிரிழந்தார். ஈஸ்வரன், புவன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கம்பம் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இளம்பரிதி ரேக்ளா ரேஸ் போட்டியில் பலமுறை வெற்றி பெற்றுள்ளதாகவும், இந்த ரேக்ளா ரேஸ் போட்டியின் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கொலையான இளம்பரிதிக்கு செளமியா (23) என்ற மனைவியும் தேஜாஸ்ரீ (4) என்ற மகளும் உள்ளனர்.
உறவினர்கள் சாலை மறியல்:
இளம்பருதி இறந்த சம்பவம் அறிந்து குவிந்த உறவினர்கள், நண்பர்களால் கம்பம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
இதற்கிடையே, இளம்பருதியின் உடலை கம்பம் அரசு மருத்துவமனையில் இருந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் அதைக் கண்டித்தும் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து உத்தமபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.