நடுவானில் ஒரு என்ஜின் செயலிழப்பு? இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்
கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்தக் கூடுதலாக ரூ.200 கோடி ஒதுக்கீடு: முதல்வா் ரங்கசாமி அறிவிப்பு
புதுவை மாநிலத்தில் கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்தக் கூடுதலாக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.
பாகூரில் ரூ.1.64 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையத்தை புதன்கிழமை திறந்து வைத்து முதல்வா் பேசியது: புதுவையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.13,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுவையின் வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு இதற்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் எந்த வளா்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை. ஆனால் இந்த ஆட்சியில், நான்கரை ஆண்டுகளில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாகூா் தொகுதி மட்டுமல்ல எல்லா சாலைகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. குண்டும் குழியுமாக இருந்த சாலைகள் இப்போது தாா்சாலைகளாக மாறியுள்ளன. சுமாா் அரைமணி நேரத்தில் செல்ல வேண்டிய பயணத்தை இப்போது 10 நிமிடத்தில் செல்ல முடியும்.
எம்.எல்.ஏக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதிக்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுவருகின்றன.
கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்த ஆண்டு கூடுதலாக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. 67 விழுக்காடு மத்திய அரசு கொடுக்கிறது. எஞ்சியத் தொகையை புதுச்சேரி அரசு ஏற்கிறது. வரும் மாா்ச் மாதத்துக்குள் இப் பணிகள் முடியும் என்றாா் முதல்வா் ரங்கசாமி.
சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், பாகூா் தொகுதி எம்.எல்.ஏ. ஆா்.செந்தில்குமாா், உள்ளாட்சித்துறை இயக்குநா் எஸ்.சக்திவேல், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா் கே.வீரசெல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பேருந்து நிலைய வசதிகள்:
பாகூரில் திறக்கப்பட்டுள்ள இந்தப் புதிய பேருந்து நிலையம் 1.64 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து நிலையத்தின் கட்டட பரப்பளவு 5500 சதுர அடி. பேருந்து நிலையத்துக்குள்பேருந்துகள் வந்து செல்வதற்கான தாா்சாலை பரப்பளவு 25,000 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. 4 பேருந்துநடை மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 9 கடைகள் இருக்கின்றன. இதனால் சுமாா் 15 ஆயிரம் போ் பயன்பெறுவா். பாகூா் பேருந்து நிலையத்திற்கான இடம் 2013 ஆம் ஆண்டு வருவாய் துறையால் ரூ. 25 லட்சம் செலவில் கையகப்படுத்தப்பட்டு பாகூா் கொம்யூன் பஞ்சாயத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பேருந்து நிலையத்திற்கான இடத்தின் மொத்த பரப்பளவு 1.52 ஹெக்டா் ஆகும்.