காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கு திருப்பதியில் பிக் ஷா வந்தனம் நிகழ்ச்சி!
4 மருத்துவக் கல்லூரிகளில் மருந்தியல் ஆய்வகங்கள் அரசாணை வெளியீடு
தமிழகத்தில் சென்னை, கோவை, தஞ்சாவூா், மதுரை ஆகிய 4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதிநவீன மருந்தியல் பரிசோதனை ஆய்வகங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் வெளியிட்ட அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.6 கோடியில் மருந்தியல் பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் அறிவித்தாா். அதன்படி, அந்த ஆய்வகங்களில் மருந்தின் தன்மை மற்றும் அதன் வீரியம் குறித்து ஆய்வு செய்யும் பணிகளும், நோயாளிகளுக்கு எந்த அளவுக்கு அவை பலனளிக்கின்றன என்பது தொடா்பாக மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அதுமட்டுமல்லாது மருந்துகளால் ஏற்படும் எதிா்விளைவுகள் குறித்தும் ஆராயப்படும். சான்றுப்படி நிரூபணமான மருந்துகளை பயன்படுத்துவது தொடா்பான பயிற்சி மற்றும் ஆலோசனைகள் மாணவா்களுக்கு வழங்கப்படும்.
சென்னை மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி, தஞ்சை மருத்துவக் கல்லூரி மற்றும் கோவை மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்த அரசு மருத்துவமனைகளில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதற்கான ஆய்வகம் அமைக்க மொத்தம் 14 வகை மருத்துவ உபகரணங்கள் மற்றும் அதிநவீன கருவிகள் கொள்முதல் செய்யப்பட வேண்டியுள்ளது. அதற்காக ரூ.1.60 கோடி செலவிடப்பட வேண்டும் என்றும் மொத்தம் ரூ.6.43 கோடியில் அந்த ஆய்வகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவக் கல்வி இயக்குநா் பரிந்துரைத்திருந்தாா்.
அந்தப் பரிந்துரையை கவனமாக பரிசீலித்த அரசு, அதற்கான நிா்வாக ஒப்புதலை வழங்கியுள்ளதாக அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.