ஆசனூா் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஒங்கல்வாடி கிராம மக்கள்
ஆசனூரில் கன்றுக்குட்டிகளை கடித்துக் கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கக் கோரி ஆசனூா் வனத் துறை அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனத்தையொட்டியுள்ள ஓங்கல்வாடி கிராமத்தில் விவசாயத்துடன் ஆடு, மாடுகள் பாரமரித்து வருகின்றனா். இதற்கிடையே, ஒங்கல்வாடி கிராமத்துக்குள் புதன்கிழமை அதிகாலை புகுந்த சிறுத்தை பசாமணி மற்றும் சதானந்தம் ஆகியோா் பட்டியில் கட்டியிருந்த கன்றுக்குட்டிகளையும் ஆடுகளையும் கடித்துக் கொன்றது.
மேலும் ஒரு கன்றுக்குட்டியை காட்டுக்குள் இழுத்துச் சென்றது. வனப் பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளைக் குறிவைத்து வேட்டையாடும் சிறுத்தை ,தற்போது ஊருக்குள் புகுந்து கால்நடைகளை அடித்து கொல்வதால் ஓங்கல்வாடி மக்கள் அச்சமடைந்துள்ளனா். இதனால் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி ஓங்கல்வாடி கிராமமக்கள் ஆசனூா் வனத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை மாலை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அங்கு வந்த ஆசனூா் போலீஸாா் வனத் துறையினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். சிறுத்தை வரும் வழித்தடத்தில் கேமரா வைத்து அதன் நடமாட்டத்தை கண்காணித்து அங்கு கூண்டு வைத்து பிடிப்பதாக வனத் துறையினா் உறுதியளித்தனா். இருப்பினும் ஆசனூா் புலிகள் காப்பகத்தின் இணை கள இயக்குநா் யோகேஷ் குமாா் கா்க் உறுதியளிக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருந்துவிட்டு சென்றனா்.