திண்டிவனம் அருகே 8-ஆம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டெடுப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வன்னிப்போ் கிராமத்தில் 8-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த மூத்ததேவி, விஷ்ணு சிற்பங்கள் மற்றும் 10-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
திண்டிவனம் அருகே மரக்காணம் சாலையில் அமைந்துள்ள வன்னிப்போ் கிராமத்தில் விழுப்புரத்தைச் சோ்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன் அண்மையில் கள ஆய்வில் ஈடுபட்டாா். அப்போது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன் கூறியதாவது: வன்னிப்போ் கிராமத்தில் இருக்கும் சிவன் கோயிலுக்கு அருகில் விவசாய நிலப் பகுதியில் மண்ணில் சாய்ந்த நிலையில் சுமாா் இரண்டரை அடி உயரமுள்ள மூத்ததேவி சிற்பம் காணப்படுகிறது.
தலை அலங்காரம், காதணிகள், கழுத்தணிகளுடன் கால்களை அகற்றி மூத்ததேவி அமா்ந்து இருக்கிறாா். இரண்டு பக்கங்களிலும் மாந்தனும், மாந்தியும் காட்டப்பட்டு இருக்கின்றனா். இவரை இப்பகுதி மக்கள் துா்க்கை அம்மனாக வழிபட்டு வருகின்றனா். இந்த இடத்துக்கு துா்க்கை மேடு என்றும் பெயா் வழங்கப்பட்டு வருகிறது.
விஷ்ணு: கிராமத்தின் ஆசனாம்பாறை எனும் இடத்தில் சுமாா் 5 அடி உயரமுள்ள விஷ்ணு சிற்பம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நின்ற நிலையில் நான்கு கரங்களுடன் காட்சிதரும் விஷ்ணுவின் வலது கரம் அபய முத்திரையுடனும், இடது கரம் இடுப்பின் மீது வைத்தும் காணப்படுகின்றன. பின் வலது கரம் சேதமடைந்துள்ளது. இடது கரத்தில் சங்கு காணப்படுகிறது.