செய்திகள் :

சானட்டும் சக்கரவர்த்தி மொழியும்- சர் தாமஸ் வயாட் ; கடல் தாண்டிய சொற்கள் – பகுதி 22

post image

21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டு, 16ஆம் நூற்றாண்டின் ஆங்கில இலக்கியத்தில் சானட் என்ற பா வடிவத்தை நுட்பமாகச் செதுக்கிய சர் தாமஸ் வயாட்டை வாசிக்கவேண்டுமெனத் தோன்றியது.

அவர் எழுதிய சானட் பாடல்கள் வெறும் காதல் மொழிகளாக இல்லாமல், ஒரு கவிஞனின் உள்ளுணர்வுகளையும் அரசவையின் ஆபத்துகளையும்  வெளிப்படுத்துகின்றன. வயாட்டைக் கவிஞனாக இல்லாமல் காலத்தின் கண்ணாடியாக, வாளின் முனையில் பூத்த மலராக அழகையும், ஆபத்தையும் ஒரே நேரத்தில் தாங்கி, மொழியின் எல்லைகளை விரிவாக்கியவர். கவிதைக்கும் காதலுக்குமிடையே கட்டமைக்கப்பட்ட பாதையில், அந்திப்பூவாய் உடைந்த இரவில் கொட்டும் காதலில் நனைந்தபடியே கவிதைகளைச் செதுக்கியிருக்கிறார். 

சர் தாமஸ் வயாட்
சர் தாமஸ் வயாட்

எழுத்தாளர், கவிஞர், தூதர், அரசியல்வாதியான சர் தாமஸ் வயாட் எழுதத் தொடங்கியபோது அவருடைய கையெழுத்து நீண்டகாலம் யாருக்கும் புரியவில்லை, கையெழுத்துப் பிரதிகளைப் பார்க்கும்போது வரிவரியாக எறும்பு ஊர்வதைப் போலிருக்கின்றன. சொந்தக் கையெழுத்தில் எழுதிய கவிதைகள் மின்னிலக்கவடிவில் பிரித்தானிய நூலகத்தின் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அதில் சில கவிதைகளை முடிக்கும்போது அடித்து, திருத்தமும் செய்திருக்கிறார்.

அக்காலத்தில் ஆங்கிலம் இலக்கியமொழியாக முழுமையாக அங்கீகரிக்கப்படவில்லை. அப்போது முதன்முறையாக ‘சானட்’ பா வடிவத்தை ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தினார். அவர் மொழியின் இயல்புகளைச் சோதித்து, ஒலி, அமைதி, சந்தம் ஆகியவற்றை நுட்பமாகப் பயன்படுத்திச் சானட் பாடலை ஆங்கிலத்துக்கேற்ப செதுக்கினார்.

 'சானட்' என்ற சொல், ‘சிறிய பாடல்’ என்ற அர்த்தம் கொண்டது, இது முதலில் இத்தாலியிலிருந்தே வந்தது. வயாட்டிற்குப் பின்னால் வந்தவர் ஷேக்ஸ்பியர். வயட்டின் பா வடிவப் பரிசோதனைகளே பின்னாளில் ஷேக்ஸ்பியர் மூலமாக ஆங்கில இலக்கியம் வளர விரிவான பாதையைத் திறந்தன.

 வயாட் எழுதிய கவிதைகளில், இத்தாலிய பெட்ரார்க்கின் சானட் (Petrarchan sonnet) பா வடிவம் ஆழமான செல்வாக்காக இருந்தது. ஆரம்பத்தில் அவர் பெட்ரார்க்கின் பாடல்களை வயாட் மொழிபெயர்த்தார்; பின்னர், அதே வடிவத்தில் தனது சொந்த உணர்வுகளைச் சொல்லும் பாடல்களையும் எழுதத் தொடங்கினார். பதினான்கு வரிகளைக் கொண்ட சானட் பாடல்கள் வெறும் காதல் புனைவுகளல்ல, எண்ணங்களின் அழுத்தமும், மொழியின் நடையை நேர்த்தியாகச் செதுக்கும் முயற்சியுமாக இருந்தன.

 அவரது நோக்கம் தெளிவானது: ஆங்கில மொழிக்கு ஒரு புதிய கலைவடிவம் சேர்க்க வேண்டும், அதை உலக இலக்கியத்தின் உயரத்தில் கொண்டு செல்ல வேண்டும். இன்று நாம் படிக்கும் நவீன ஆங்கிலக் கவிதைகளின் வேர்கள், வயாட் விதைத்த அந்த மாற்றத்தில்தான் தொடங்கின. 

sonnet
sonnet

sonnet1537 முதல் 1539 வரை ஸ்பானிய நீதிமன்றத்திற்கான ஆங்கிலத் தூதராக ஐரோப்பாவிற்குப் பயணம் சென்றபோது வயாட் கவிதைகளை எழுதத் தொடங்கினார். முதலில் நையாண்டிக் கவிதைகளாகவும் நகரத்தின் பரபரப்பான வாழ்க்கை, நகரத்தின் தெருக்கள் பற்றிய வாழ்வியல் முறைகளை விவரித்தன.  வயாட்டின் சமகாலத்தவரான சர்ரேயும்  இணைந்து பெட்ரார்க்கன் சானட்டுகளின் போக்கை 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இத்தாலியிலிருந்து இங்கிலாந்திற்குக் கொண்டு வந்தனர். சந்தங்களுடன் ஓசைநயத்துடன் எழுதி வந்த முறையை மாற்றி ஷேக்ஸ்பியர் சானட்டில் பல்வேறு புதுமுயற்சிகளைச் செய்து புதிய வடிவத்தைக் கையாண்டனர்.  பின்னர் ஷேக்ஸ்பியர் அல்லது ஆங்கிலச் சானட் வகை மேம்பட்ட வடிவத்துடன் வேறுபட்ட விதிகளைக் கொண்டிருந்தன. பிறகு வந்த ஜான் மில்டனின் இத்தாலிய-வடிவமைக்கப்பட்ட சானட்டுகள் "மில்டோனிக்" சானட்டுகள் என்றழைக்கப்பட்டன. அவை வழக்கமானதை விடுவித்து எழுதியபோது, இன்னும் வடிவச் சுதந்திரம் பெற்றிருந்தது.

சர் தாமஸ் வயாட் 1503 முதல் 1542 வரை 39 வயதுவரை வாழ்ந்த ஓர் அரசியல்வாதி, தூதர் மற்றும் கவிஞராகக் கொண்டாடப்படுகிறார். தாமஸ் வயாட் 1503-ல் சர் ஹென்றி வயாட் மற்றும் ஜான் ஸ்கின்னரின் மகள் ஆன் ஸ்கின்னரின் மகனாக, கென்ட்டில் உள்ள ஆலிங்டன் கோட்டையில் பிறந்தார். அவரது தாயார் ஏழாம் ஹென்றி பிரிவின் நிர்வாகத்தில் பணிபுரிந்தார். மேலும் 1509-ல் எட்டாம் ஹென்றி ஆட்சிக்கு வந்தபோது அவருக்கு ஆலோசகராக இருந்தார். அரசப் பரம்பரையில் குடும்பப் பெயரில் முதலாம், இரண்டாமென வரிசையாகப் பெயர்களை வைத்துக்கொள்வது வழக்கம்.

வியாட் ஆறடிக்குமேல் உயரமானவர், அழகானவர், உடல் ரீதியாக வலிமையானவர் என்று கூறப்படுகிறது. 1515 ஆம் ஆண்டில், வயாட் கழிவு நீர் குழாயினைப் பராமரிக்கும் பணியில் சேர்ந்தார், அதே ஆண்டில் கேம்பிரிட்ஜில் உள்ள செயிண்ட் ஜான்ஸ் கல்லூரியில் படிக்கத் தொடங்கினார். அப்போது ஆன் போலினுடன் பழக்கம் ஏற்பட்டது.

பதின்ம வயதின் தூயக்காதலில் மெல்லிய இசையாகத் தொடங்கி, பின் அரசியல் சுழற்சிகளினால் வரலாறாக முடிந்தது. ஆன் போலின் , வயாட் இருவரது காதலும், அலங்காரமும், அரசாங்கத்தின் மிரட்டலும் ஆபத்துகளுமாகச் சேர்ந்து இவர்கள் வாழ்ந்த காலத்தைத் திரும்பிப்பார்க்க வைத்திருக்கின்றன.

எட்டாவது ஹென்றி
எட்டாவது ஹென்றி

ஆன் போலின், இங்கிலாந்தின் அரசர் எட்டாவது ஹென்றியின் கண்களில் பட அவளைத் தனது இரண்டாம் மனைவியாக்கிக்கொள்கிறார். அரசியாக அரியணையில் அமர்ந்து அரசியலிலும் மத உருமாற்றத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார் ஆன். அவரது அழகும் புத்திசாலித்தனமும் கவனத்தை ஈர்த்தன. அரசவையில் முக்கியப் பங்கு வகித்த வயாட், ஆன்னாவுடன் நெருக்கமாக இருந்தாரெனக் கூறப்பட்டது. இருவருக்குமிடையே உண்மையாகவே காதல் இருந்ததா என்பது விவாதமாக இருப்பினும், வயாட்டின் சில கவிதைகள், ஆன்னாவைச் சுற்றி உருவாக்கப்பட்டதாகவும் நுண்ணிய அடையாளங்கள் இருப்பதாகவும் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

ஆன் 1533-இல் இங்கிலாந்தின் ராணியானார், ஆனால் அவரது ஆட்சிக்காலம் நீடிக்கவில்லை. 1536-இல் தூக்கிலிடப்படும்வரை மூன்றாண்டுகள் மட்டுமே ஆட்சி நீடித்தது. தனது முதல் மனைவி கேத்தரினை விவாகரத்து செய்த ஹென்றி VIII, ஆன்னை விரும்பியே திருமணம் செய்துகொள்கிறார், அதுவே ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையுடனான முறிவுக்கு வழிவகுத்தது. பிறகு 1536-ல் தேசத்துரோகம், தகாத உறவுகளெனச் சதி குற்றச்சாட்டுகளைச் சொல்லி லண்டன் கோபுரத்தில் வைத்து ஆன்னைக் குற்றவாளியென நீதிபதிகள் அறிவித்தனர். நான்கு நாட்களுக்குப்பிறகு அவரது தலை துண்டிக்கப்பட்டது.

ஆன் போலின், இங்கிலாந்தின் மன்னர்களில் ஒருவரான முதலாம் எலிசபெத் ராணியின் தாயார். அவரது காதலும் சோகமும் கலந்த வாழ்க்கை கதையாகத் தொடர்ந்து ஏராளமான புத்தகங்கள், திரைப்படங்கள் என வரலாறாகியது. அவரது மரணமடைந்த விதம் வயாட்டின் கவிதைகளில் வன்மையாக ஒலித்தன, பிறகு சிறையிலடைக்கப்பட்டார்.

 ❝Sighs are my food, drink are my tears;

Clinking of fetters such music would crave.❞

அவரது சிறையிலிருந்த அனுபவத்தைச் சொல்லும் வரிகள் இவை.

அது ஒருபுறமிருக்க, வயாட் எலிசபெத் புரூக்கை திருமணம் செய்துகொள்கிறார்,  அவர்களுக்கு ஒரு மகன் தாமஸ் பிறந்தார்.  அவர் தனது தந்தையின் மரணத்திற்குச் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கிளர்ச்சிக்குத் தலைமைத் தாங்கியவர்.

வயாட் “மறவாதே எனது உண்மையான காதலை’ என்னும் கவிதையில் காலங்களைத் தாண்டி ஏக்கமும் காதலும் நிறைந்த கவிதையாக உணர்வுகளும் இணைந்து செல்வதைக் காட்டுகிறார். அவரது கவிதை “Forget not yet the tried intent” என்பது உண்மையான காதலின் உருக்கமான பிரார்த்தனை. காதலால் ஏற்படும் ஏக்கம், கைவிடப்படுதலின் வலி, நேர்மையின் மீதான நம்பிக்கை அனைத்தையும் இந்தச் சிறிய கவிதை சொல்கிறது.

"Forget not yet the tried intent

Of such a truth as I have meant;"

நான் உனக்காகச் செய்த உண்மையான முயற்சிகள் எதையும் மறந்துவிடாதே என்கிறார். ஒருபுறம் அரசவையில் இடம்பிடிக்க நினைக்கும் போராட்டம், மறுபுறம் தனிப்பட்ட காதலில் ஏற்பட்ட இடர்பாடுகள் என இரண்டையும் இடித்துரைக்கிறார்.

 "The cruel wrong, the scornful ways;

The painful patience in denays,

Forget not yet."

அந்த உண்மையான மனது ஒருபோதும் குற்றம் செய்யவில்லை என்பதை மட்டும் நீ நினைவில் வைத்துக்கொள் என்று சொல்கிறது.

கவிதையின் இறுதியில் வரும் வரிகள், நிலைத்த நம்பிக்கையையும் நிலைத்த காதலையும் அழுத்தமாகப் பதிவு செய்கின்றன:

"Whose steadfast faith yet never moved;

Forget not this."

நம்முடைய உறுதியான நம்பிக்கை ஒருபோதும் மாறாது எனது நம்பிக்கையை மறந்துவிடாதே. இந்த வரிகளால், வயாட் தன் காதலின் உறுதியையும், வலிமையையும் புலம்பலாக வெளிக்கொணர்கிறார். பாசாங்கும், நம்பிக்கையும், வஞ்சகமும் ஒன்றாகக் கலந்திருக்கையில் எதையும் மறந்து விடாதே, இப்படிக்கு உனது அன்புக்குரிய காதலன் என்ற தொனியில் எழுதப்பட்ட வரிகள்.

அதேபோல Remembrance - முந்தைய உறவுகள் பிரிந்து விலகுவதைப் பிரதிபலிக்கும் கவிதை. உணர்வுப்பூர்வமாகவும், காயங்களைப் பதிவு செய்திருக்கும் மூன்று கன்னிகளைக் கொண்ட சானட்டின் ஒரு பகுதியிது.

 இது கனவு அல்ல: நான் விழித்திருக்கிறேன்

எனது மென்மையினால் எல்லாம் மாறிவிட்டது

இது விசித்திரமான முறையில் கைவிடுதல்

அவளது நற்குணங்களை விட்டு வெளியேற வேண்டும்

அவளும் புதுமையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

அவள் மீது எப்போதும் நான் அன்பாகவே இருக்கிறேன்

அவளுடைய தகுதியை அறியவே விரும்புகிறேன்.

 Whoso List to Hunt காதல் ஒரு வேட்டை போலவே இருக்கிறது என்பதைக் கூறும் கவிதை. இதில் ஆன் போலினின் மீதான காதல் மற்றும் அரசர் ஹென்றியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் பிரதிபலிக்கின்றன.

"I Find No Peace": பெட்ரார்க்கின் கவிதையை அடிப்படையாகக் கொண்ட சானட் வடிவத்தில் அமைந்தது. காதலால் ஏற்படும் உள்நிலை முரண்பாடுகளைச் சொல்கிறது.

எனக்கு அமைதி இல்லை, எனது போராட்டமெல்லாம் முடிந்துவிட்டது.

எனக்குப் பயமாகயிருக்கிறது, நம்பிக்கையுமிருக்கிறது

நான் எரிகிறேன், பனிக்கட்டியைப் போல உறைகிறேன்.

நான் காற்றின் மேல் பறக்கிறேன்,

ஆனாலும் என்னால் எழுந்திருக்க முடியாதா

என வயாட்டின் வரிகள் காதலையும் மனவேதனையையும் வெளிப்படுத்த காரணங்கள் அறிந்ததே. காதலின் சுவாசங்களுடன் அதனுடன் தொடர்புடைய வஞ்சகங்கள், சமூக நிலைகள், அதிகாரம் மற்றும் நிர்வாக முறைகளின் எதிரொலிகள் தெளிவாகக் காணப்படுகின்றன. அவர் வாழ்க்கையின் பிம்பங்களை அலங்காரமின்றி, வெளிப்படையாக எழுதுகிறார். ஜார்ஜ் புட்டன்ஹாம், வயாட் மற்றும் சர்ரேயை 'நமது ஆங்கில மீட்டர் பாணியின் முதல் சீர்திருத்தவாதிகள்' என்று அழைத்தார்.

வயாட்டின் கவிதைகள் குறுகியவை, பாரம்பரிய, இத்தாலிய மாதிரிகளைப் பிரதிபலிக்கின்றன. அவை "மனக்கசப்பு நிறைந்தது” எனச் சிலர் விமர்சித்தாலும் அது கவிதையாக நிலைத்திருக்கிறது. அவருடைய நையாண்டித்தனம் பற்றிய கவிதைகள் கடுமையான குற்றச்சாட்டுகளாக இருந்தன.

அவரது 96 காதல் கவிதைகள் மரணத்திற்குப் பின் தொகுப்பாக வெளிவந்தன. அவற்றில் 31 சொனெட்டுகள், அவற்றில் பத்து பெட்ரார்க்கின் மொழிபெயர்ப்புகள். வயாட் எழுதிய 285 கவிதைகளில் 101 அவரது படைப்பு அல்ல என்பது உறுதியான ஆவணச்சான்றுகளுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. டெர்சா ரிமா, ரவுண்டோ, ஒட்டாவா ரிமா போன்ற பிற மீட்டர் வடிவங்களிலும் வயாட் பரிசோதனை செய்திருக்கிறார், ஐயாம்பிக் ஹெக்ஸாமீட்டர் மற்றும் ஐயாம்பிக் ஹெப்டாமீட்டர் எனும் பதினான்கு அடிகளிலும் எழுதியிருக்கிறார். இத்தாலிய சானட்டில் ஈரடிகளும் வெண்பாவைப் போல் ஒவ்வொரு கன்னியிலும் நான்கடியிலும் கவிதைகள் இயற்றியிருக்கிறார்.

ஐயோ முத்தத்தைத் திருடியதற்காகவா மேடம்’ என்ற கவிதை.

 ஐயோ, ஒரு முத்தத்தைத் திருடியதற்காகவா மேடம்

உங்கள் மனத்தை நான் அவ்வளவு புண்படுத்திவிட்டேன்?

நான் எவ்வளவு மோசமான தவறினைச் செய்திருக்கிறேன்

அதை எப்படியாவது திருத்திக்கொள்ள முடியுமா?

 இப்போது பழிவாங்குங்கள், அதற்கு ஒரே வழிதான்,

அடுத்த முத்தம் எனது உயிரினைப் பறித்துவிடட்டும்

முதல் முத்தம் எனது இதயத்தை வாய் வழியாக இழுத்தது;

அடுத்தது என் மார்பில் மீதமுள்ளதைச் சுருட்டி எடுத்துவிடட்டும்!

நீதிமன்ற வழக்குகளின் பாசாங்குத்தனம் பற்றிய நையாண்டிகளைக் குறிப்பிட்டு எழுதியதால் அவரை முதலில் “ஆங்கில நையாண்டி கலைஞர்" என்று கருதினார்கள். ஆனால் இருபதாம் நூற்றாண்டு விழிப்புணர்வையும் விமர்சனத்தில் எழுச்சியையும் கண்டபோது எஸ்ரா பவுண்ட், மரியான் மூர் போன்றோர் அவரது கவிதைகளைப் பாராட்டியிருக்கின்றனர்.

 1542 அக்டோபரில், கடைசி ராஜதந்திரப் பணியில் கடுமையாகச் ஈடுபட்ட பிறகு, வயாட் காய்ச்சலால் இறந்தார். வயாட்டின் நினைவுச் சின்னத்தில், 'வியாட் இங்கே இருக்கிறார், விரைந்து ஓய்வெடுக்க முடியாது' என்று எழுதப்பட்டுள்ளது. அமைதியற்ற ஆற்றலுக்கு, செயல்பாட்டிற்குப் பெயர் பெற்ற ஒரு மனிதன், இப்போது மரணத்தில் நிம்மதியாக இருக்கிறான். எதிலும் விரைந்து இயங்கிக்கொண்டேயிருந்த ஒருவன் விரைந்து ஓய்வெடுக்கமுடியாது என்பது சர்ரே எழுதிய கவிதையின் இரங்கற்பாடல் வரி.

ஆழமான அரசியல் வேர் கொண்ட உறவுகளுக்கிடையே அந்தக் காலம் எவ்வளவு எரிகாடாக இருந்தது என்பதை நமக்குச் சொல்கின்றன. ஆன் போலின் தாமஸ் வயாட் இருவரும் நடந்துசென்றது தனித்துவமான பாதைகள். ஒருவர் காதலித்துக் கட்டாயமாக அரசியாக்கப்பட்டு உயிரை விட்ட காதல் ராணி; வயாட் அந்தக் காதலைக் கவிதையாக மொழியில் விதைத்த ராஜ தந்திரி. அக்காலத்தின் காதலும் கவிதையும் இன்றைக்கும் பாடத்திட்டங்களில் இருக்கின்றன.

இங்கிலாந்தின் டோர்செட்டில் உள்ள ஷெர்போர்ன் அபேயின் வடக்கு டிரான்செப்டில் வயாட் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

#சொற்கள் மிதக்கும்

விகடன் பிரசுரம்: அமேசானில் Action & Adventure பிரிவில் 3-வது இடத்தைப் பிடித்திருக்கும் வேள்பாரி!

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி-யுமான சு.வெங்கடேசனின் எழுத்திலும், ஓவியர் மணியம் செல்வனின் ஓவியத்துடனும் விகடன் பிரசுரத்தில் வெளியானப் புத்தகம் `வீரய... மேலும் பார்க்க

நெருப்புக்கடியில் பாடும் சிரியக் குரல் -மராம் அல்-மஸ்ரி |கடல் தாண்டிய சொற்கள்- பகுதி 21

உலகலாவிய மகளிர் தினத்தையொட்டிப் பெண் படைப்பாளர்கள் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தபோது மராம் அல்-மஸ்ரி நினைவுக்கு வந்தார். சிரியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாகத் துருக்கிக்குத் தப்பித்துச் ச... மேலும் பார்க்க

வேள்பாரி : ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டிய புத்தக விற்பனை - ரஜினி, ஷங்கர் பங்கேற்கும் வெற்றி பெருவிழா

விகடன் பிரசுரத்தில், எம்.பி சு.வெங்கடேசன் எழுத்தில், மணியம் செல்வன் ஓவியங்களில் வெளியாகி மக்களின் மனதைக் கவர்ந்த புத்தகம் ‘வீரயுக நாயகன் வேள்பாரி'. இந்தப் புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனை... மேலும் பார்க்க

Guru Mithreshiva: "Asset-க்கும் liability-க்கும் உள்ள வித்யாசம் இதுதான்" - நாகப்பன் பேச்சு

ஆன்மிக குரு, யோகா நிபுணர் மற்றும் எழுத்தாளர் என்று பன்முகம் கொண்ட குரு மித்ரேஷிவா எழுதியுள்ள பணவாசம், கருவிலிருந்து குருவரை, உனக்குள் ஒரு ரகசியம்ஆகிய நூல் வெளியீட்டு விழா சென்னை சர்.பிட்டி தியாகராஜர் ... மேலும் பார்க்க

Guru Mithreshiva: "இந்த 3 மந்திரங்களை பின்பற்றினால் போதும்..." - இதயவியல் வல்லுநர் சொக்கலிங்கம்

ஆன்மிக குரு, யோகா நிபுணர் மற்றும் எழுத்தாளர் என்று பன்முகம் கொண்ட குரு மித்ரேஷிவா எழுதியுள்ள பணவாசம், கருவிலிருந்து குருவரை, உனக்குள் ஒரு ரகசியம்ஆகிய நூல் வெளியீட்டு விழா சென்னை சர்.பிட்டி தியாகராஜர் ... மேலும் பார்க்க

Guru Mithreshiva: "அமெரிக்கா காரனிடம் இதை கற்றுக்கொள்ள வேண்டும்" - ’நேச்சுரல்ஸ்’ குமரவேல் பேச்சு!

ஆன்மிக குரு, யோகா நிபுணர் மற்றும் எழுத்தாளர் என்று பன்முகம் கொண்ட குரு மித்ரேஷிவா எழுதியுள்ள பணவாசம், கருவிலிருந்து குருவரை, உனக்குள் ஒரு ரகசியம்ஆகிய நூல் வெளியீட்டு விழா சென்னை சர்.பிட்டி தியாகராஜர் ... மேலும் பார்க்க