தில்லியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!
தில்லியில் இருந்து இம்பாலுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தில்லியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
தலைநகர் தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மணிப்பூரின் இம்பாலுக்கு இன்று(வியாழக்கிழமை) 6E5118 என்ற இண்டிகோ விமானம் புறப்பட்ட நிலையில் சில நிமிடங்களில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக விமானிக்கு தெரிய வந்துள்ளது.
பாதுகாப்பு கருதி விமானி, உடனடியாக விமானத்தைப் தில்லி விமான நிலையத்திற்கு திருப்பி பாதுகாப்பாக தரையிறக்கினார்.
தொடர்ந்து விமானம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சோதனைகள் மேற்கொண்டபின் சிறிது நேரத்திற்கு பின்னர் இயக்கப்பட்டது.
இதுபற்றி இண்டிகோ நிறுவன செய்தித் தொடர்பாளர், "ஜூலை 17 தில்லியில் இருந்து இம்பாலுக்கு இயக்கப்பட்ட 6E5118 விமானத்தில் லேசான தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால் விமானம் தரையிறக்கப்பட்டது. விமானம் உடனடியாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு கோளாறு சரிசெய்யப்பட்டு இயக்கப்பட்டது. தற்போது விமானங்கள் அதிகமாக ரத்து செய்யப்படுவதால் பாதுகாப்பு கருதியே விமானத்தை விமானி தரையிறக்கியுள்ளார். பயணிகளின் பாதுகாப்புக்கு நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
ஏர் இந்தியா விமான விபத்தையடுத்து பாதுகாப்பு கருதி விமானங்கள் ரத்து செய்யப்படுவதும் அவசரமாக தரையிறக்கப்டுவதும் இப்போது அதிகரித்துள்ளது.