உங்கள் ஊரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் எப்போது? அறிந்துகொள்ள எளிய வழி!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆண்ட்ரே ரஸல் ஓய்வு!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மேற்கத்திய தீவுகள் அணியில் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
மேற்கத்திய தீவுகள் அணிக்காக 2019 முதல் விளையாடி வரும் ஒரே மூத்த வீரரான ரஸல் (வயது 37) ஜமைக்காவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 தொடருடன் ஓய்வுபெறவுள்ளார்.
அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ள நிலையில், ரஸலின் ஓய்வு மேற்கத்திய தீவுகள் அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
இவர், மேற்கத்திய தீவுகள் அணிக்காக 84 டி20, 56 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஓய்வு தொடர்பாக ரஸல் தெரிவித்ததாவது:
”மேற்கத்திய தீவுகள் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியது என் வாழ்க்கையில் பெருமைமிக்க சாதனைகளில் ஒன்றாகும். வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
நான் சிறுவனாக இருந்தபோது, இந்த நிலைக்கு வருவேன் என எதிர்பார்க்கவில்லை. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் சொந்த மண்ணில் விளையாட விரும்புகிறேன். கரீபிய மண்ணில் இருந்து வரும் அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் அதே வேளையில், எனது சர்வதேச வாழ்க்கையை உயர்வாக முடிக்க விரும்புகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
பூரணைத் தொடர்ந்து இரண்டு மாதங்களில் ஓய்வுபெறும் இரண்டாவது மேற்கத்திய தீவுகள் அணியின் மூத்த வீரர் ரஸல் ஆவார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் போன்ற லீக் தொடர்களில் ரஸல் தொடர்ந்து விளையாடவுள்ளார்.