`உண்மை ஒருநாள் வெளிவரும்' - தொடர் சர்ச்சைகள், வழக்குகளில் சிக்கும் நடிகர் நிவின் பாலி விளக்கம்!
தொடர் சர்ச்சைகள், வழக்குகளில் சிக்கி வரும் நடிகர் நிவின் பாலி, தன் மீது போடப்பட்டிருக்கும் பணமோசடி வழக்குக் குறித்து விளக்கமளித்திருக்கிறார்.
இவர் 2009-ம் ஆண்டு 'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' திரைப்படம் மூலம் மலையாள திரையுலகில் அறிமுமாகி நேரம், பிரேமம், ஆக்ஷன் ஹீரோ பிஜு, ஜேக்கப்பின் சொர்க்கராஜ்ஜியம், மற்றும் 1983, பெங்களூர் டேய்ஸ் எனப் பல திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்து முன்னணி நட்சத்திரமாக மாறியவர்.
கடந்த சில ஆண்டுகளாக அவரது திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. அவரும் பல சிக்கல்களால் சில திரைப்படங்களிலேயே நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
தமிழில் அவர் நடித்த ராமின் 'ஏழு கடல் ஏழு மலை', தற்போது லோகேஷ் தயாரிப்பில் லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படங்கள் மூலம் மீண்டும் ஒரு கம்பேக் கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

இதற்கிடையில் தொடர்ந்து பல வழக்குகளில் சிக்கி திரையுலகப் பயணத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறார் நிவின்பாலி. சமீபத்தில் நடிகை ஒருவரின் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் ஆதாரம் ஏதுமில்லை என்று விடுவிக்கப்பட்டார். தற்போது மீண்டும் பணமோசடி வழக்கில் சிக்கியிருக்கிறார்.
2022ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் அப்ரித் ஷைன் இயக்கத்தில் வெளியான 'Mahaveeryar' திரைப்படம் நஷ்டமடைந்ததாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் பி.எஸ் ஷாம்னஸ், இந்த நஷ்டத்திற்கு நிவின் பாலி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். நிவின் பாலியும் அதற்கு ஒப்புக் கொண்டு ரூ.95 லட்சம் தருவதாகவும், அப்ரித் ஷைன் இயக்கும் 'Action Hero Biju 2' படத்திற்கு இணை தயாரிப்பு வழங்குவதாகவும் உத்தரவாதம் அளித்ததாகவும் பி.எஸ் ஷாம்னஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையில் இப்படத்திற்கு முதன்மை தயாரிப்பாளராக இருந்த இயக்குநர் அப்ரித் ஷைன், படத்தின் தயாரிப்பை பி.எஸ் ஷாம்னஸிடம் மாற்றிவிட்டிருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் துபாய் விநியோக உரிமையை விற்றதில் நிவின் பாலி, ரூ.2 கோடி வரை பி.எஸ் ஷாம்னஸுக்குத் தெரியாமலே அட்வான்ஸாக வாங்கியிருப்பதாகவும், துபாய் உரிமத்தையும் அவரே வைத்திருப்பதாகவும் பி.எஸ் ஷாம்னஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதுதொடர்பான வழக்குத் தொடர்ந்திருக்கும் தயாரிப்பாளர் பி.எஸ் ஷாம்னஸ், நிவின் பாலி பணமோசடி செய்திருப்பதாகவும், தயாரிப்பாளரை ஏமாற்றி இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கும் நடிகர் நிவின் பாலி, "இது தொடர்பான வழக்கு 28.06.2025 முதல் நீதிமன்ற நடுவர் குழு விசாரணையில் இருக்கிறது. இதில் ரகசியத்தன்மையை உறுதி செய்வதற்காக ஒரு தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை மதிக்காமல், அந்த வழக்கின்மேல் மேலும் ஒரு புதிய வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கிறோம். உண்மை கூடிய விரைவில் வெளிவரும்" என்று கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நிவின் பாலி.
நிவின் பாலி மூலமாதான் 'பறந்து போ' வாய்ப்பு கிடைச்சது! - கிரேஸ் ஆண்டனி
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...