முள்ளங்கனாவிளையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்கம்
'ப்ரேமலு 2' நிறுத்திவைப்பு! - பகத் பாசில் தயாரிப்பில் நிவின் பாலியை இயக்கும் 'ப்ரேமலு' இயக்குநர்!
கடந்தாண்டு மலையாளத்தில் வெளியாகியிருந்த 'ப்ரேமலு' திரைப்படம் கோலிவுட்டிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் இப்படியான பெரிய வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் வரும் என அப்போதே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு இந்தாண்டு மே மாதத்தில் தொடங்கும் என அப்படத்தின் இயக்குநர் கிரீஷ் ஏ.டி தெரிவித்திருந்தார்.

ஆனால், படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. அதைத் தொடர்ந்து, 'ப்ரேமலு 2' தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகரும் இயக்குநருமான திலீஷ் போத்தன், " 'ப்ரேமலு 2' படம் தற்போது தாமதமாகியிருக்கிறது.
அத்திரைப்படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பணிகளை எப்போது தொடங்குவோம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால், அப்படத்தின் இயக்குநர் கிரீஷ், எங்களின் தயாரிப்பில் வேறொரு படத்தைக் கூடிய விரைவில் இயக்கவிருக்கிறார்," எனச் சமீபத்தில் கூறியிருந்தார். திலீஷ் போத்தன் குறிப்பிட்டிருந்த கிரீஷ் ஏ.டி-யின் மற்றொரு படத்தின் அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருக்கிறது.
'ப்ரேமலு' படத்தைத் தயாரித்திருந்த திலீஷ் போத்தன், ஃபகத் பாசில், ஷ்யாம் புஷ்கரன் ஆகிய மூவரும் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்கள். 'சூப்பர் சரண்யா', 'ப்ரேமலு' ஆகிய படங்களைத் தொடர்ந்து, கிரீஷ் ஏ.டி-யின் இந்தப் புதிய படத்திலும் நடிப்பதற்கு மமிதா பைஜூ கமிட்டாகியிருக்கிறார்.

'ப்ரேமலு' படத்தின் வெற்றிக்குப் பிறகு, தமிழ், தெலுங்கு என பம்பரமாய்ச் சுற்றி வருகிறார் மமிதா. படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு நிவின் பாலி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
படம் தொடர்பாக தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகர் ஃபகத் பாசில், "இந்தத் திரைப்படம் மிகவும் ஸ்பெஷலானதாக இருக்கும். படத்தின் வேலைகள் செப்டம்பர் மாதத்தில் தொடங்கவிருக்கின்றன," எனத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.