உங்கள் ஊரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் எப்போது? அறிந்துகொள்ள எளிய வழி!
`கயிறுக்கு முன்னால் ஊசலாடும் உயிர்' - மன்னிப்பா? மரணமா? - நிமிஷா பிரியாவின் வழக்கில் நடந்தது என்ன?
``எப்படி துருதுருனு திரிஞ்சிட்டு இருந்த புள்ள அது தெரியுமா... ட்ராக்டர் ஓட்டும், வயலுக்கு போயி விவசாய வேலைக்கூட பார்க்கும். படிப்புலயும், எதிர்காலம் பத்தின சிந்தனையும் ரொம்ப அதிக கவனமா இருப்பா. எப்படியாவது முன்னுக்கு வந்துடமாட்டோமானு யோசிச்சிட்டே இருப்பா" இப்படித்தான் நிமிஷா பிரியாவைப் பற்றி அவரின் சொந்த ஊரான பாலக்காட்டின் மக்கள் கூறுகிறார்கள்.
ஆனால் 2017-ம் ஆண்டு ``நிமிஷா பிரியா கொலை செய்துவிட்டார்' என வெளியான செய்திகள் அவரின் ஊரை மட்டுமல்ல கேரளாவையே அதிரச்செய்தது.
இதை அவரின் கிராம மக்கள் நம்பவே இல்லை. ``அந்த ஏமன் தம்பி இங்க வந்திருக்கு... நிமிஷா கூடவும், அவங்க புருஷன் கூடவும் நட்பா அன்பாதான் இருந்தாரு... 15 - 20 நாளுக்கு மேல இங்க தானே தங்கியிருந்தார்... அதனால ஏமன்-ல என்ன நடந்ததுனு தெரியாம எங்க புள்ளையை எப்படி குத்தம் சொல்ல முடியும்?' என நிமிஷாவுக்காக முதலில் குரல் கொடுத்தவர்கள் அவரின் கிராம மக்கள்தான்.
இந்தியாவின் சராசரி மனிதனின் கனவுகளுடன் வலம் வந்தவர்தான் நிமிஷா பிரியா. கிராமத்தில் பெற்றோருக்கு உதவிக்கொண்டே செவிலியர் பணிக்கு படித்து வந்தார். அப்போது நிமிஷாவின் பெரும் கனவு சொந்தக்காலில் நிற்க வேண்டும் எனபதுதான்.
மிகவும் அமைதியானவர், படிப்பில் கவனமாக இருப்பவர், கடுமையான உழைப்பாளி என்றெல்லாம் அவரைச் சார்ந்தவர்கள் குறிப்பிடுகிறார்கள். வீட்டு வேலைகளுக்குச் செல்லும் அம்மா, வறுமையில் வாடும் குடும்பம் என தன் பொறுப்புகளைச் தானே சுமந்தார். வறுமைக்கு எதிரான போருக்காக, தன் கனவின் முதல் முயற்சியாக, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணிக்கும் 2 மில்லியனுக்கும் அதிகமான மலையாளிகளில் ஒருவராக 2008-ம் ஆண்டு ஏமனுக்கு பயணமானார் நிமிஷா பிரியா. அப்போது அவருக்கு வயது 19.
திருமணம்:
நினைத்தது போலவே நல்ல மருத்துவமனையில் செவிலியராக வேலைக்குச் சேர்ந்த நிமிஷா பிரியா, 2011-ம் ஆண்டும் இந்தியா திரும்பினார். உடனே அவருக்கு வரன் பார்க்கப்பட்டு, டோமி தாமஸ் என்பவருக்கும் நிமிஷா பிரியாவுக்கும் திருமணம் நடத்தப்பட்டது. திருமணத்துக்குப் பிறகு நிமிஷாவும், டோமி தாமஸும் ஏமன் புறப்பட்டார்கள். நிமிஷா செவிலியராக பணியாற்ற, டோமி எலக்ட்ரீசியனாக வேலை செய்தார்.
2012-ம் ஆண்டு இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அதற்குப் பிறகு நிமிஷாவும் தாமஸும் ஏமனில் வாழ்க்கை நடத்த கடுமையாகப் போராடியதாகத் தெரிகிறது. எனவே, பொருளாதாரச் சூழல் சரியாகும்வரை கணவனும் - குழந்தையும் இந்தியாவில் இருக்கட்டும் என முடிவு செய்து, 2014-ம் ஆண்டு இருவரை மட்டும் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கிறார் நிமிஷா பிரியா.
ஏமனில் ஜவுளிக்கடை நடத்தி வந்தவர் தலால் அப்து மஹ்தி. இவருக்கு திருமணமாகியிருந்த நிலையில், இவரின் மனைவி கர்பமாக இருந்தார். அவருக்கு நிமிஷா பிரியா பணி செய்யும் மருத்துவமனையில்தான் பிரசவம் நடந்தது. அப்போது நிமிஷா பிரியா அவரின் மனைவியை கவனித்துக்கொண்ட விதத்தில் தலால் அப்து மஹ்திக்கும் நிமிஷா பிரியாவுக்கும் நட்பு மலர்ந்தது.
அந்த நட்பின் அடிப்படையில்தான் தன் மகளின் ஞானஸ்தானத்திற்காக நிமிஷா இந்தியா வந்தபோது, தலால் அப்து மஹ்தியையும் உடன் அழைத்து வந்திருக்கிறார். அப்போதுதான் தன் குடும்பப் பொருளாதார சிக்கலை சரிசெய்வதற்கு ஒரு மருத்துவமனை தொடங்கலாம் என்றும், தன் குடும்ப எதிர்க்காலத்தை ஏமனில் அமைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்திருக்கிறார்.
உள்நாட்டுப்போரால் மாறிய திசை:
1990-களில் சமூக சேவையை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது "ஷபாப் அல்முமினீன்' என்றக் குழு. இந்தக் குழுவின் தலைவராக இருந்த ஹுசைன் பத்ருத்தின் அல்-ஹூதி, 2004-ம் ஆண்டு ஏமன் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தார்.
அதனால், ஏமன் அரசு ஹுசைன் பத்ருத்தின் அல்-ஹூதியைத் தேடி கொலை செய்தது. அதைத் தொடர்ந்து உருவானது உள்நாட்டுப் போர். அரசுக்கும் ஹூதி அமைப்புக்கும் இடையே தொடர்ந்து தாக்குதல்கள் நடந்ததுவந்தது. இதன் விளைவாக 2014-ல் ஹூதிகள் ஏமனின் தலைநகர் சனாவை கைப்பற்றினர்.

அதன் பிறகு ஏமன் தெற்கு - வடக்கு என ஆட்சிப் பகுதிகள் பிரிந்து, இரண்டு ஆட்சிமுறை நடந்து வருகிறது. இதில் ஹூதிகள் ஆட்சி செய்யும் சனா பகுதியில்தான் நிமிஷா பிரியா மருத்துவமனைத் தொடங்க திட்டமிட்டார். அந்த சமயத்தில்தான் உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரிடமிருந்தும் இந்திய மதிப்பில் சுமார் ரூ.50 லட்சம் புதிய மருத்துவமனைக்காக கடன்பெற்றிருக்கிறார்.
உள்நாட்டுப்போர் சூழல் காரணமாக அயல்நாட்டவர் ஏமனில் மருத்துவமனைத் தொடங்குவது சிக்கலானது. அதனால், அவருக்கு உள்நாட்டைச் சேர்ந்த ஒரு பார்ட்னர் தேவைபட்டது. எனவே, நீண்டநாள்களாக நட்புடன் பழகிவந்த தலால் அப்து மஹ்தியிடம், மருத்துவமனைத் திட்டம் குறித்துப் பேசியிருக்கிறார்.
2016-ம் ஆண்டு ஏமன் தலைநகர் சனாவில் 'அல் அமான்' என்ற மருத்துவமனையை தலால் அப்து மஹ்தி கூட்டணியில் நிமிஷா பிரியா தொடங்கினார். அதே வருடம், கணவரையும் மகளையும் ஏமன் அழைத்து வருவதற்கான வேலைகளை நிமிஷா தொடங்கிய போதுதான், அங்கு உள்நாட்டுப் போர் தீவிரமாகிறது. அதனால், அவர்களால் ஏமன் செல்ல முடியவில்லை.
நட்பு முதல் திருமணம் வரை - எது உண்மை?
மருத்துவமனை தொடங்கப்பட்டு, அது சிறப்பாக செயல்படத் தொடங்கியதும் தலால் அல் மஹ்தியின் செயல்பாடில் மாற்றங்கள் தொடங்கியதாகவும், நிமிஷாவுக்கும் தலால் அப்து மஹ்திக்கும் இடையேயான முரண்பாடுகள் அதிகரித்ததாகவும் நிமிஷா அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஏமன் நீதிமன்றத்தில் நிமிஷா தரப்பு, ``தலால் அப்து மஹ்தி நிமிஷா பிரியாவை திருமணம் செய்துகொள்வதாகப் பொய்யான வாக்குறுதி கொடுத்திருக்கிறார். மேலும், நிமிஷாவை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையாக கொடுமைப்படுத்தினார். நிமிஷாவின் பாஸ்போர்ட்டை பறித்துவைத்துக்கொண்டு நாட்டை விட்டு வெளியேறவிடாமல் தடுத்து மிரட்டியிருக்கிறார்.
மருத்துவமனையின் பார்ட்னர் என்ற அடிப்படையில் நிமிஷாவிடம் கையெழுத்து வாங்கி, வங்கிக் கணக்கிலிருந்து பணத்தையெல்லாம் எடுத்திருக்கிறார். சில நேரங்களில் துப்பாக்கி வைத்தும் மிரட்டியிருக்கிறார்' என்கிறது.
அதே நேரம் தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்துல் ஃபத்தா மஹ்தி பிபிசி அரபி செய்திக்கு அளித்த பேட்டியில், ``தலால், நிமிஷாவின் பாஸ்போர்ட்டை பறித்துவைத்துக்கொண்டார், நிமிஷாவை மிரட்டினார் என்பன போன்ற குற்றச்சாட்டுகள் பொய்யானவை. இதற்கு எந்த அடிப்படையும் இல்லை. குற்றம்சாட்டப்பட்ட நிமிஷா கூட தலால் மஹ்தி தன் பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டதாக கூறவில்லை.

இந்தச் செய்திகள் வெறும் வதந்தி. தலாலுக்கும் நிமிஷாவுக்கும் இடையில் ஒரு இயல்பான உறவே இருந்தது. அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துக்கொண்டப் பிறகே ஒரு கிளினிக் தொடங்குவதாக முடிவு செய்தனர். அவர்கள் திருமணம் செய்துகொண்டு, 2 -3 ஆண்டுகள் வரை திருமண உறவில் இருந்தனர்" என்கிறார். ஆனால், தலால் அப்து மஹ்தி திருமண ஆவணம் போலியாக உருவாக்கியது எனக் கூறப்படுகிறது.
2017-ம் ஆண்டு தலால் அப்து மஹ்தியின் உடல், ஒரு தண்ணீர் தொட்டியில் பலத் துண்டுகளாக கிடைக்கிறது. இந்தக் கொலையை யார் செய்தது என்றக் கோணத்தில் விசாரித்த காவல்துறை, ஒரு மாதம் கழித்து சவுதி - ஏமன் எல்லையில் நிமிஷா பிரியாவை கைது செய்கிறது. அப்போதே இந்தச் செய்திகள் ஊடக வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை கிளப்பின.
இந்தக் கொலை வழக்கை நடத்துவதற்காக நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி தன் வீட்டை விற்று பணம் ஏற்பாடு செய்கிறார். வளைகுடா நாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பதை சேவையாக செய்துவரும் சாமுவேல் என்பவரின் உதவியுடன் நிமிஷா தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ``இது கொலையல்ல... தலால் அப்து மஹ்தி நிமிஷாவின் பாஸ்போர்ட்டை மறைத்து வைத்திருந்தார். நிமிஷாவைக் கட்டுப்படுத்த போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கிறார். இது தொடர்பாக நிமிஷா காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. அதனால், தலால் அப்து மஹ்தியிடமிருந்து பாஸ்போர்ட்டை எடுப்பதற்காக அவருக்கு மயக்க மருந்து கொடுத்திருக்கிறார். ஆனால், அது ஓவர் டோஸ் ஆகிவிட்டதாகத் தெரிகிறது.
அதனால் தலால் அப்து மஹ்தி இறந்திருக்கிறார். அதற்குப் பிறகு என்ன செய்வது எனத் தெரியாமல், ஹனன் என்ற உள்ளூர் பெண் உதவியுடன் தலால் அப்து மஹ்தியின் உடலை சில துண்டுகளாக வெட்டி அப்புறப்படுத்த முயன்றிருக்கிறார். இதில், கொலை நோக்கம் இல்லா தவறுதலாக நடந்தக் கொலை." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்திய அரசு தலையீடு:
கேரளாவின் வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆணையத்தில் (NRI Commission) நிமிஷா சார்பில் வழக்கறிஞர் கே.எல்.பாலச்சந்திரன் ஆஜராகி வாதாடி, நிமிஷாவின் நிலை குறித்து ஏமன் நீதிமன்றத்தில் வாதிட்டார். அப்போது, ``இந்த வழக்கின் தொடக்கத்தில் நிமிஷாவுக்கு ஏமனில் சட்ட உதவிகள் முறையாக கிடைக்கவில்லை. இதனால் அவர் தரப்பு நியாயத்தைக் கூற முடியவில்லை. மொழி தெரியாமல், அவர்கள் காட்டிய ஆவணங்களில் எல்லாம் அப்போது நிமிஷா கையெழுத்திட்டுவிட்டார்" எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து நிமிஷாவுக்கு உதவுவதற்காக இந்தியாவில் இருந்து முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. 2020-ம் ஆண்டு நிமிஷாவின் தரப்பில் வாதாட ஒரு ஏமன் நாட்டு வழக்கறிஞரை இந்திய வெளியுறவுத் துறை நியமித்தது. ஆனாலும், 2020-ம் ஆண்டில், சனாவில் உள்ள நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது.
சனாவில் உள்ள நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து நிமிஷா தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேல் முறையீட்டு மனுவை ஏமனின் உச்ச நீதிமன்றம் நவம்பர் 2023-ல் தள்ளுபடி செய்து, மரண தண்டனையை உறுதி செய்தது.
ஏமனில் இருக்கும் அரசு ஷரியா எனும் இஸ்லாமிய சட்டத்தின்படி ஆட்சி செய்துவருகிறது. அதன் அடிப்படையில், ஒருவர் கொலைக் குற்ற நடவடிக்கையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டுமென்றால், இரண்டு வழிகள் இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பம் மனமுவந்து குற்றம் செய்தவரை மன்னிக்க வேண்டும். அல்லது இந்தக் கொலைக்கு பகரமாக பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 'Blood Money' எனும் தொகை வழங்கி இந்தக் குற்றத்திலிருந்து விடுதலைப் பெறலாம். இந்த இரண்டும் இல்லை என்றால் மரண தண்டனை நிறைவேற்றப்படும்.
எனவே, நிமிஷா பிரியா வழக்கில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு மரண தண்டனையிலிருந்து அவரை விடுவிக்க வேண்டும் என 2023-ம் ஆண்டு 'Save Nimisha Priya International Action Council - (SNPIACl)' என்ற தன்னார்வலர் குழு தொடங்கப்பட்டது.
ஏமன் சென்ற நிமிஷாவின் தாய்:
2023-ம் வருடம் நிமிஷாவின் தாயார் ஏமன் அனுப்ப அனுமதி கோரி, 'SNPIACl' குழு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதே நேரம் இந்தக் குழு நிமிஷாவை மீட்பதற்கு தேவையான நிதியை நன்கொடை மூலம் திரட்டி வந்தது.
திரட்டப்பட்ட பணத்தில், மஹ்தி குடும்பத்துடனான பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்வதற்கான செலவுகள் 40,000 அமெரிக்க டாலர்கள் (ரூ.34 லட்சம்) இரு தவணைகளாக, இந்திய வெளியுறவுத் துறையால் நியமிக்கப்பட்ட ஏமன் நாட்டின் வழக்கறிஞரின் கணக்கில் செலுத்தப்பட்டது. இதற்கு மத்தியில் 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி, இந்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று ஏமன் சென்றார்.
2025 ஜனவரியில் 2023-ல் உறுதி செய்யப்பட்ட தண்டனையை நிறைவேற்ற ஏமன் அதிபர் மஹ்தி அல் மஷாத் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டார். அதனால் மீண்டும், தலால் அப்து மஹ்தி குடும்பத்துடனான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகள் முடக்கிவிடப்பட்டன. இதற்கிடையில், கேரள அரசு மத்திய அரசுக்கு நிமிஷா பிரியா மரண தண்டனை தொடர்பாக கடிதம் எழுதியது.
அதைத் தொடர்ந்து, 'இந்த தூக்கு தண்டனை தள்ளிவைக்கப்பட வேண்டும்' என இந்திய அரசு ஹூதி அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. அதன் காரணமாக அப்போது நிமிஷாவின் தண்டனை தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் 2025 ஜூலை 8 அன்று "ஜூலை 16, நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும்" என அறிவிப்பு வெளியானது.
கை விரித்த இந்திய அரசு:
இத்தனை ஆண்டுகள் முன்னெடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளும் இன்னும் ஒரே வாரத்தில் ஒன்றுமில்லாமல் போகிறது என நிமிஷா பிரியாவை மீட்கப் போராடிய SNPIACl தன்னார்வக் குழு, நிமிஷா பிரியாவை காப்பாற்ற மத்திய அரசின் தலையீட்டைக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், ``நிமிஷா பிரியா வழக்கில் இந்திய அரசாங்கம் எத்தனை தூரம் செல்ல இயலுமோ அதுவரை சென்று முயன்றுவிட்டது.
உலகின் பிற நாடுகளைப்போல் அல்ல ஏமன். தனிப்பட்ட முறையில் சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். ஏமன் நாட்டின் நிலவரத்தைப் பொறுத்துப் பார்க்கையில் இதற்கும்மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை" என வெளிப்படையாக கைவிரித்து விட்டது. இதற்கு மேல் என்ன செய்வது என தெரியாமல் திணறியது SNPIACl.
நிமிஷா பிரியாவை காப்பாற்ற வேண்டும் என்ற உந்துதலால் SNPIACl' குழு கேரளாவின் புதுப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் சாண்டி உம்மனை தொடர்புகொண்டதாகத் தெரிகிறது. அவர் இறுதி முயற்சியாக கேரளாவின் 'கிராண்ட் முஃப்தி' என அழைக்கப்படும் காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியாரை அணுகி நடந்த வழக்கு குறித்தும், இதன் பின்னணி குறித்தும் விளக்கினார்.
அதற்குப் பிறகு காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார் 'இந்த விவகாரத்தில் என்னால் எதுவரை செல்ல முடியுமோ அதன் எல்லைவரைச் சென்று நிமிஷா பிரியாவை காப்பாற்ற கரம் கொடுப்போம்' என உறுதியளித்திருக்கிறார்.
ஈரான் சூஃபி அறிஞருடன் பேச்சுவார்த்தை:
அதைத் தொடர்ந்து ஈரானின் உலகப் புகழ்பெற்ற சூஃபி அறிஞர் ஹபீப் உமர் பின் ஹஃபீஸை தொடர்புகொண்டு. மரண தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன் தொடராக சூஃபி அறிஞரின் சீடர்கள் சிலர் தலால் அப்து மஹ்தியின் குடும்பத்தினரிடமும், ஏமன் ஜனாதிபதியிடமும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர்.
இது தொடர்பான தகவல்கள் இந்தியாவின் வெளியுறவுத்துறை அலுவலகத்துக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், தேதி குறிப்பிடாமல் நிமிஷா பிரியாவின் தண்டனை ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இது தொடர்பாக நிமிஷா பிரியா வழக்கில் ஆரம்பம் முதல் தீவிரமாக கவனித்து வரும் வழக்கறிஞரும் கவுன்சிலின் முக்கிய உறுப்பினருமான சுபாஷ் சந்திரன், ``நீதிமன்றம் 16-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டபோதுகூட, 'நிமிஷாவுக்கு மரண தண்டனை தவிர வேறு எந்த மன்னிப்பும் இல்லை' என தலால் அப்து மஹ்தி குடும்பத்தினர் உறுதியாக இருந்தனர். ஆனால், மத குருகளின் தலையீட்டுக்குப் பிறகு, வழக்கு தொடங்கியதிலிருந்து பாதிக்கப்பட்டவரின் சகோதரர் முதல்முதலாக இந்த விவகாரம் குறித்த பேச்சுவார்த்தைக்கு வந்தார்.
நாங்கள் இரவு முழுவதும் பேசினோம். அதிகாலையில், மரணதண்டனை ஒத்திவைக்கப்பட்டது. அதைத்தன் நாங்கள் விரும்பினோம். இப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் மன்னிக்க வைக்க சிறிது நேரம் கிடைத்திருக்கிறது.
ஏமன் போன்ற போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் ராஜதந்திர நடவடிக்கைக்கும் வரம்புகள் உள்ளன. இந்திய அரசும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறது. ஆனால், அதையும் தாண்டி பல சவால்கள் இருந்தன. அதனால்தான் நாங்கள் மதம், மனிதநேயம் போன்ற மாற்றுப் பாதைகளுக்குத் திரும்பினோம். அங்கிருந்துதான் இப்போது எங்களுக்கான சில கால அவகாசம் கிடைத்திருக்கிறது.
இனி விசாரணைகள் இருக்காது. ஏமன் நீதித்துறையும் தன்னால் முடிந்ததைச் செய்துள்ளது. இப்போது இந்த வழக்கு முற்றிலும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரைப் பொறுத்தது. அவர்கள் தியா(Blood Money)வை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு வழங்கினால், நிமிஷா பிரியன் உயிருடன் இருப்பார். இல்லையென்றால், நாம் அவரை இழப்போம். காலம்தான் இனி எல்லாம்" என்றார்.
'இந்தியாவின் கிராண்ட் முப்தி' என்ற சமூகப் பட்டத்தைக் கொண்டவர் காந்தபுரம் ஏபி அபுபக்கர் முஸ்லியார் (94). முஸ்லிம் மதகுருவான இவரின் இயற்பெயர் ஷேக் அபுபக்கர் அகமது. இந்தியாவிலும், உலகின் இஸ்லாமிய நாடுகளில் உள்ள சன்னி இஸ்லாமியப் பிரிவின் மத்தியில் செல்வாக்குமிக்கவராக இருக்கிறார். கோழிக்கோட்டில் பிறந்த ஏபி அபுபக்கர் முஸ்லியார், மாநில மற்றும் தேசியளவில் கல்வி சார்ந்தும், சமூக சேவை சார்ந்தும் தீவிரமாகப் பணியாற்றுகிறார்.
வளைகுடா மற்றும் தென்கிழக்கு ஆசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சொற்பொழிவுகளுக்காக பயணங்களை மேற்கொள்கிறார். கோழிக்கோட்டில் உள்ள தனியார் ஒருங்கிணைந்த 'மர்க்கஸ் நாலெட்ஜ் சிட்டி' திட்டத்தின் தலைவராக இருக்கும் இவர், கலாச்சார மையம், மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரிகளை நிர்வகிக்கிறார். தற்போது நிமிஷா பிரியாவின் வழக்கில் முன்வந்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். தலால் அப்து மஹ்தியின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறார். இதுபோன்று வளைகுடா நாடுகளில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணிகளை தொடர்ந்து செய்துவருகிறார்.
என்ன சொல்கிறார் முஸ்லியார்?
இந்த விவகாரம் குறித்து பேசிய ஏபி அபுபக்கர் முஸ்லியார், ``ஒரு இந்திய குடிமகன் வெளிநாட்டில் மரணதண்டனைக்காக காத்திருக்கும்போது, மனிதாபிமானத் தீர்வைப் பெற வேண்டும் என்பது ஒரு இந்தியனாக என் தேசியப் பொறுப்பு. அந்த உறுதியான நம்பிக்கையுடன் இந்த விஷயத்தில் தலையிட முடிவு செய்தேன்.
இஸ்லாத்தில் மரண தண்டனை மட்டும் இருப்பதாகத்தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இன்னொரு சட்டமும் இருக்கிறது. கொலைகாரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். அந்தக் குடும்பம் மன்னித்தால், அவர் விடுவிக்கப்படுவார். நஷ்ட ஈடாக பணம் கேட்டால் அதைக் கொடுத்து விடுதலைப் பெற்றுக்கொள்ளலாம்.
இது இரண்டுக்கும் வாய்ப்பில்லாத இடங்களில்தான் மரண தண்டனை நிறைவேற்றப்படும். ஏமனில் இருக்கும் குடும்பம் யார் என்றே எனக்குத் தெரியாது என்பதால், ஏமனில் இருக்கும் பொறுப்பான அறிஞர்களைத் தொடர்புகொண்டு, அவர்களுக்கு பிரச்னைகளைப் புரிய வைத்தேன். இஸ்லாம் மனிதகுலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு மார்க்கம்.
ஏமனிலிருந்து அதிகாரப்பூர்வமாக 'மரணதண்டனை தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது' என்ற ஆவணத்தை அனுப்பியுள்ளனர். நான் பிரதமர் அலுவலகத்திற்கும் அந்த ஆவணக் கடிதத்தை அனுப்பியுள்ளேன். இனி இது நடந்துகொண்டிருக்கும் பேச்சுவார்த்தையை எளிதாக்க உதவும் என்று நம்புகிறேன்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb