வயலூா் சாலையில் பேருந்து நிழற்குடைகள் இல்லை: பொதுமக்கள் அவதி
மகாராஷ்டிரா: பனியன், துண்டுடன் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் போராட்டம்; பின்னணி என்ன?
மும்பையில் கடந்த வாரம் சிவசேனா சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் கெய்க்வாட் சட்டமன்ற உறுப்பினர் விடுதி கேண்டீனில் சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்ட போது பருப்பு குழம்பு கெட்டுப்போய் இருந்தது.
இதையடுத்து சஞ்சய் கெய்க்வாட் தனது அறையிலிருந்து அப்படியே பனியன் அணிந்தபடி கேண்டீனுக்கு வந்து கேண்டீன் உரிமையாளரை முகத்தில் குத்தி தாக்கினார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பான விடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானது. சஞ்சய் கெய்க்வாட் தனது செயலை நியாயப்படுத்தி இருந்தார். அதோடு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இச்செயலைத் தொடர்ந்து கேண்டீன் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது. சட்டமன்ற உறுப்பினரின் இச்செயலைக் கண்டித்து மும்பையில் சட்டமன்றத்திற்கு வெளியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பனியன் மற்றும் டவல் அணிந்த படி வந்து இப்போராட்டத்தில் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் பங்கேற்ற சட்டமேலவை எதிர்க்கட்சித் தலைவர் அம்பாதாஸ் தன்வே அளித்த பேட்டியில், ''சட்டமன்ற உறுப்பினர். சஞ்சய் கெய்க்வாட் கேண்டீன் ஆட்களைத் தாக்கியதன் மூலம் இது போன்ற சக்திகளுக்கு அரசே ஆதரவு கொடுப்பதாகத் தெரிகிறது'' என்றார்.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜய் இது குறித்துக் கூறுகையில், ''ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு ரவுடித்தனத்துடன் நடந்துகொள்கின்றனர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறோம். சட்டமன்ற உறுப்பினர்.சஞ்சய் கெய்க்வாட் செயல் வெட்கக்கேடானது. அவரது செயலுக்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்'' என்றார்.
இதில் பங்கேற்ற தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) எம்.எல்.ஏ. ஜிதேந்திர அவாட் கூறுகையில், ''ஆட்சியில் இருப்பவர்களின் உண்மையான முகத்தை வெளிக்காட்டவே இப்போராட்டம் நடத்தப்படுகிறது. வெறும் பனியன், டவல் அணிந்து கொண்டு வந்து கேண்டீன் ஆட்களை கெய்க்வாட் தாக்கி இருக்கிறார். எனவே, அரசின் நிலை எவ்வளவு தரம் தாழ்ந்துவிட்டது என்பதைக் காட்ட நாங்கள் அதே முறையில் உடை அணிந்துள்ளோம்" என்று அவர் கூறினார்.

சஞ்சய் கெய்க்வாட்டை சட்டமன்றக் கூட்டத்திலிருந்து இடைநீக்கம் செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், 'ஜட்டி, பனியன் கூட்டத்தின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்' என்று கோஷமிட்டனர்.
முன்னதாக சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் கெய்க்வாட் மற்றும் சஞ்சய் ஷிர்சாத் ஆகியோரை, 'ஜட்டி பனியன் கூட்டம்' என ஆதித்திய தாக்கரே குறிப்பிட்டார்.
சஞ்சய் கெய்க்வாட் தென்னிந்தியர்கள் கொண்டு வந்த டான்ஸ் பார்களால்தான் மராத்தி கலாசாரம் கெட்டுப்போய்விட்டதாகவும் கூறி சர்ச்சையைக் கிளப்பினார்.