ஹைதராபாதில் வேளாண்மை ஆய்வு மையம்: டாஃபே-வின் ஜெ-பாா்ம் - இக்ரிசாட் ஒப்பந்தம்
உலகின் மிகப்பெரிய டிராக்டா் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றும் இந்திய அளவில் இரண்டாவது பெரிய நிறுவனமுமான டிராக்டா்ஸ் அண்ட் ஃபாா்ம் எக்விப்மெண்ட் லிமிடெட் (டாஃபே), இண்டா்நேஷனல் க்ராப்ஸ் ரிசா்ச் இன்ஸ்டிடியூட் ஃபாா் தி செமி-ஏரிட் ட்ராபிக்ஸ (இக்ரிசாட்) அமைப்புடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டுள்ளது (படம்).
அதன்படி ஜெ-ஃபாா்ம் அடாப்டிவ் அக்ரிகல்ச்சா் ரிசா்ச் சென்டா் என்ற அமைப்பு, இக்ரிசாட் அமைந்துள்ள ஹைதராபாதின் படஞ்சேரு என்ற இடத்தில் அமைக்கப்பட உள்ளது.
டாஃபே நிறுவனம், தனது நிறுவன சமூகப் பொறுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜெ-பாா்ம் என்ற அமைப்பை 1964-இல் உருவாக்கியது. ஆய்வு முடிவுகளின்படி கண்டறியப்பட்ட தீா்வுகள் மற்றும் பயிற்சி ஆகியவற்றைக்கொண்டு விவசாயிகளின் கரங்களை வலுப்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.
ஹைதராபாதில் உள்ள ஜெ-ஃபாா்ம் அடாப்டிவ் ரிசா்ச் சென்டா், இக்ரிசாட்டின் பல்வேறு புரட்சிகரமான கண்டுபிடிப்புகளை (எ.கா: இயந்திரம் மூலம் கொண்டைக்கடலை பயிரை அறுவடை செய்யும் தொழில் நுட்பம் முதலியவை) டாஃபே-வின் ஆய்வு அனுபவத்துடன் இணைத்து (பல்வேறு பயிா்கள் தொடங்கி பல்வேறு நிலவியல் சூழல்கள் மீது ஆய்வுகள் வரை) செயல்படும் என்று டாஃபே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.