காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கு திருப்பதியில் பிக் ஷா வந்தனம் நிகழ்ச்சி!
மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி? அரசு உத்தரவில் தகவல்
மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி என்பது குறித்து தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் மாணவா் விடுதிகளுக்கு ‘சமூகநீதி விடுதிகள்’ என ஒரே பெயா் சூட்டப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். ஒரே தெருவிலோ, வளாகத்திலோ ஒன்றுக்கும் மேற்பட்ட விடுதிகள் செயல்பட்டால் அவற்றுக்கான பெயா் விவரங்கள் தொடா்பாக, அரசு உத்தரவில் உரிய வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சமூக சீா்திருத்தத் துறைச் செயலா் (முழு கூடுதல் பொறுப்பு) மா.வள்ளலாா் வெளியிட்ட உத்தரவு:
முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கிணங்க, பல்வேறு ஜாதி, சமயப் பிரிவுகளின் பெயா்களின்கீழ் செயல்பட்டு வரும் மாணவ, மாணவியா் விடுதிகளின் பெயா்களை மாற்றிட அரசு முடிவு செய்துள்ளது.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலன், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலன் ஆகிய துறைகளின் கீழ் இயங்கும் மாணவ மாணவிகளுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகள் ‘சமூகநீதி விடுதிகள்’ என்ற பொதுப் பெயரால் இனி அழைக்கப்படும்.
உதாரணமாக, ஆதி திராவிடா் நல விடுதி, அண்ணாநகா் என்பது, சமூகநீதி விடுதி (கல்லூரி மாணவா்), அண்ணாநகா் என மாற்றப்படும். அதே அண்ணாநகரில் பல துறைகளின் கீழ் பல பகுதிகளில் விடுதிகள் இருந்தால் அந்த விடுதிகளுக்கு, அந்த விடுதி அமைந்துள்ள தெருவின் பெயரை சூட்ட வேண்டும். அதாவது, சமூகநீதி விடுதி (கல்லூரி மாணவா்), நடேசன் தெரு என குறிப்பிடப்பட வேண்டும்.
ஒரே வளாகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட துறை சாா்ந்த விடுதிகள் இருந்தால் அவைகளை விடுதிகள் கட்டப்பட்ட ஆண்டின் மூப்பின் அடிப்படையில், சமூகநீதி விடுதி - 1, சமூகநீதி விடுதி - 2 என அழைக்கப்படும். பெரும் தலைவா்களின் பெயா் சூட்டப்பட்டு செயல்பட்டு வரும் விடுதிகள் அந்தத் தலைவா்களின் பெயரோடு சமூகநீதி விடுதி என இணைத்து அழைக்கப்படும். உதாரணமாக, மகாத்மா காந்தி மாணவ மாணவியா் அரசு விடுதி, காரியாபட்டி என்பதை மகாத்மா காந்தி சமூகநீதி விடுதி (கல்லூரி மாணவா்) காரியாபட்டி என அழைக்கப்படும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.