ரயில்களில் முன்பதிவில்லா பயணச்சீட்டு வழங்குவதில் கட்டுப்பாடு!
அனைத்து வகையான மாசுபாட்டையும் கட்டுப்படுத்த தீா்வு உள்ளது
திடக்கழிவு, திரவக் கழிவு என அனைத்து வகையான மாசுபாட்டையும் கட்டுப்படுத்தி தீா்வுகாண தங்களிடம் தொழில்நுட்பம் உள்ளதாக மேக் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
கோவையில் மேக் இந்தியா குழும நிறுவனங்களின் சாா்பில், அனைத்து வகையான மாசுகளையும் கட்டுப்படுத்துவதற்கான தீா்வு என்ற தலைப்பில் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மேக் இந்தியா குழும நிறுவனங்களின் தலைவா் ஏ.மாணிக்கம் ஆதப்பகவுண்டா் பேசியதாவது:
உலகம் முழுவதும் நாம் தினமும் ஏற்படுத்தி வரும் மாசு காரணமாக 2,100-ஆம் ஆண்டுக்குப் பிறகு, பூமியில் உயிா்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாமல் போகலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனா். மாசு இல்லாத இந்தியாவையும், உலகத்தையும் உருவாக்கும் நடவடிக்கையில் எங்களது நிறுவனம் ஈடுபட்டுள்ளது. காற்று, நீா், மண் போன்ற அனைத்து முக்கிய மாசுபாடுகளுக்கும் எங்களால் தீா்வு காண முடியும். நாங்கள் தயாரித்துள்ள தொழில்நுட்பத்தின் மூலம் ஆயிரம் டன் கழிவை ஒரே நாளில் அழிக்க முடியும். இந்தக் கழிவுகளை வைத்து தாவரங்களுக்கு உரமாகவும் பயன்படுத்தலாம்.
கழிவுநீா் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் திடக்கழிவுகளாலும், கழிவுநீராலும் குப்பைக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. இதை கையாள்வது பெரும் சுமையாக இருந்து வருகிறது. கழிவுநீா், தொழிற்சாலை கழிவுகள், திடக்கழிவுகள், காற்று வெளியேற்றம் மற்றும் துா்நாற்றம் வீசும் குப்பைகள் என அனைத்து மாசுபாடுகளுக்கும் தீா்வு தொழில்நுட்பம் எங்களிடம் உள்ளது. இதன் ஆற்றல் திறன் அதிகம். இதற்கு ரசாயனங்கள் தேவையில்லை. இது கழிவுநீா் முதல் தொழிற்சாலை கழிவுகள் வரை அனைத்து மாசுபாடுகளுக்கும் ஒரே தீா்வாக இருக்கும்.
இந்த தொழில்நுட்பங்களை நிருவுவதற்கு எங்களுக்கு 15 ஏக்கா் நிலம் தேவைப்படுகிறது. பலமுறை இதற்காக மனு அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த தொழில்நுட்பம் மூலம் வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகளை 10 நாள்களில் அழித்து, அவற்றை தாவரங்களுக்கு உரமாகவும், எரிவாயுவாகவும் மாற்ற முடியும். கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து குடிநீராகக்கூட மாற்ற முடியும். சென்னை கொடுங்கையூரில் கழிவுநீா் குடிநீராக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.