செய்திகள் :

The Hunt: "ஓடிடி தளங்கள் சவாலான கதைகளை படமாக எடுப்பதற்கு சுதந்திரம் கொடுக்கிறது" - இயக்குநர் நாகேஷ்

post image

ராஜீவ் காந்தியின் குண்டு வெடிப்புச் சம்பவத்தை மையப்படுத்தி பாலிவுட் இயக்குநர் நாகேஷ் குக்கூனூர் 'தி ஹன்ட்' வெப் சீரிஸை எடுத்திருக்கிறார். 'ஹைதராபாத் ப்ளூஸ்', 'இக்பால்', 'டொர்' போன்ற பாலிவுட் படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்தவர் நாகேஷ்.

Nagesh Kukunoor
Nagesh Kukunoor

பெரிதளவில் இந்த சீரிஸில் அரசியல் பேசாமல், புலனாய்வு விசாரணை பார்வையிலேயே இந்த சீரிஸைக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர். இந்த சீரிஸுக்காக அவரைப் பேட்டி கண்டோம்.

``பத்திரிகையாளர் அனிருத்யா மித்ராவின் நாவலை மையமாக வைத்து இந்த சீரிஸை எடுத்திருக்கிறீர்கள். எந்த விஷயம் இந்த சீரிஸ் எடுப்பதற்கு தூண்டியது?"

``என்னுடைய படங்கள் அனைத்துமே நான் அதற்கு முன் தொட்டிடாத களமாக இருக்கும். இந்த புத்தகத்தை என்னிடம் கொடுத்தபோது அதை நான் படமாக எடுப்பதற்கு ஆர்வமாக இருந்தேன், ஏனென்றால், அதற்கு முன் நான் உண்மையான க்ரைம் விஷயங்களை படமாக உருவாக்கியது கிடையாது. அதுதான் என்னை உடனடியாக இந்தப் படத்தை எடுப்பதற்கு தூண்டியது."

Nagesh Kukunoor
Nagesh Kukunoor

``சீரிஸுக்கு நீங்கள் தேர்வு செய்த நடிகர்கள் அனைவருமே உண்மையான நபர்களின் முகப்பாவணைகளுக்கு சரியாகப் பொருந்திப் போயிருந்தார்கள். நடிகர்களைத் தேர்வு செய்வது எவ்வளவு சவால் மிகுந்த பணியாக இருந்தது?"

``நீங்கள் கொடுக்கும் பாராட்டுகள் அனைத்துமே 'காஸ்டிங் பே' என்கிற காஸ்டிங் ஏஜென்சியையே சேரும். உண்மைக் கதையைத் திரைப்பட வடிவாக மாற்றி கதை சொல்லும்போது அதில் நடிகர்களைத் தேர்வு செய்யும் பணி மிகவும் சவாலான ஒன்று. தேர்வு செய்யும் நடிகர்கள் சிறிதளவாவது உண்மையான கதாபாத்திரங்களுடன் ஒத்துப்போக வேண்டும். நடிகர்களைத் தேர்வு செய்துவிட்டால் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டதாக நீங்கள் கருத முடியாது. அதன் பிறகு மிகுந்த சவாலுள்ள பணிகள் அத்தனையும் தொடங்கும்.

தேர்வு செய்த நடிகர்களை அந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நீங்கள் மாற்ற வேண்டும். காஸ்டிங் இயக்குநர்கள் எங்களுடைய பணிகளுக்கு பக்கபலமாக இருந்தார்கள். படப்பிடிப்பு தொடங்கிய பிறகு நடிகர்கள் அமித் சியால், சாஹில் வைத், ஷபீக் முஸ்தபா என மூவரும் நடிப்பில் என்னை ஆச்சரியப்படுத்தினார்கள். இதில் நடிகர் சாஹில் வைத் தமிழகத்தில் வளர்ந்தவர். பாலிவுட்டில் பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு தமிழ் மொழியும் பேசத் தெரிந்ததால், இந்தக் கதாபாத்திரத்திற்கு அவரால் முழுமையாக நியாயம் செய்ய முடிந்தது."

``உங்களுடைய எழுத்தாளர்கள் குழு உங்களுக்கு எந்தளவிற்கு பக்கபலமாக இருந்தார்கள்?"

``நான் ஓடிடி தளங்களுக்கு கடந்த சில வருடங்களாக வெப் சீரிஸ்களை இயக்கி வருகிறேன். ஓடிடிகளுக்கு வெப் சீரிஸ் இயக்கும்போது என்னுடன் திரைக்கதை எழுத்துப் பணியில் திரைக்கதையாசிரியர் ரோஹித் இணைந்தார். ஆனால், அதற்கு முன் நான் திரைப்படங்களை எடுக்கும்போது திரைக்கதையாசிரியர்களுடன் இணைந்தது கிடையாது. இந்தப் படைப்பிறகு புதியதாக எங்க குழுவுக்குள் எழுத்தாளர் ஶ்ரீராம் ராஜன் என்பவர் வந்தார். உண்மை சம்பவத்தை மையப்படுத்திய கதைகளுக்கு திரைக்கதை பணிகளை மேற்கொள்வது மிகவும் சவாலானது. உண்மை சம்பவக் கதைகளுக்கு, யார் மனதையும் புண்படுத்தாமல், எதையும் தவறாக காட்சிப்படுத்தாமல் திரைக்கதையை எழுத வேண்டும். இப்படியான விஷயங்கள் எங்களின் திரைக்கதை குழு மிகவும் கவனமாக செயல்பட்டது."

The Hunt - The Rajiv Gandhi Assassination Case - Series
The Hunt - The Rajiv Gandhi Assassination Case - Series

``ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு சம்பவம் நம் இந்திய வரலாற்றில் நிகழ்ந்த சென்சிடிவான சம்பவம். இந்தக் கதையை திரைக்கதையாக மாற்றி, சீரிஸாக எடுப்பதிலும், நடுநிலையாக சீரிஸை கொண்டு செல்வதிலும் உங்களுக்கு என்னென்ன சவால்கள் இருந்தது?"

``நீங்கள் சொன்னது போலவே, இந்த சம்பவம் மிகவும் சென்சிடிவான ஒன்று. இந்த சீரிஸ் இரண்டு தரப்பினரையும் காட்சிப்படுத்தி, மையமாகக் கொண்டுச் செல்ல வேண்டும். ஒரு பக்கம் சிறப்பு புலனாய்வுக் குழு, மற்றொரு பக்கம் விடுதலை புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். அந்த சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்த பலரும் இப்போதும் இருக்கிறார்கள். அவர்களை நான் சரியாகக் சித்தரிக்க வேண்டும். என்னுடைய கதாபாத்திரங்களுக்கு நான் மனித நேயம் இருக்கும்படிதான் எப்போதும் அமைப்பேன். இரண்டு பக்கத்தையும் நான் சரியாகக் காட்சிப்படுத்திவிட்டதாக நினைக்கிறேன். "

``இந்த சீரிஸுக்கான ஆராய்ச்சிப் பணிகளுக்காக எவ்வளவு மெனக்கெட்டீர்கள்? இந்த வழக்கில் ஈடுபட்ட அதிகாரிகளை நேரில் சென்று சந்தித்தீர்களா?"

``இல்லை. இந்த வழக்கில் பணியாற்றிய அதிகாரிகளை நாங்கள் சந்திக்கவில்லை. நாங்கள் அனிருத்யா மித்ரா புத்தகத்தையே அடிப்படையாக வைத்து சீரிஸை நகர்த்தினோம். நாங்கள் இந்த 90 நாட்களில் நிகழ்ந்த விசாரணையை மையப்படுத்திதான் இந்த சீரிஸை எடுத்திருக்கிறோம். எங்களுடைய முழு ஆராய்ச்சியும் ஒரு புத்தகத்தை மையப்படுத்தியே இருந்தது. ஆனால், காலம், இடம், கதாபாத்திரங்கள் பேசிய விதங்கள், அவர்கள் வெவ்வேறு நிகழ்வுகளை எப்படிப் பார்த்தார்கள் என்பதை சரியாகக் காட்சிப்படுத்த வேண்டும் என கருத்தில் கொண்டு ஆராய்ச்சிகள் செய்தோம். ஒரு முழு உலகத்தை உருவாக்குவதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது."

The Hunt
The Hunt

``தணிக்கை செய்வதில் ஏதேனும் சவால் வந்ததா?"

``இல்லை. ஏனெனில், நாங்கள் எந்த அரசியல் கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. யாரையும் நியாயமற்ற முறையில் நாங்கள் குற்றம் சாட்டவில்லை. இந்த சீரிஸ் ஒரு பக்கம் மட்டும் சார்ந்து நகர்வது கிடையாது. நாங்கள் நடுநிலையாகக் கதையைக் கொண்டுச் சென்று, நல்ல வேலையைச் செய்திருக்கிறோம் என நினைக்கிறேன்."

``ஓடிடி தளங்களின் வளர்ச்சி, இதுபோன்ற சவால் மிகுந்த கதைகளை எவ்வித தடையின்றி திரைப்படமாக எடுத்திட வழி வகுத்திருப்பதாக நினைக்கிறீர்களா?"

``ஆம், ஓடிடி தளங்கள் ஒரு சுதந்திரத்தைக் கொடுக்கிறது. பலவிதமான கதைகளைச் சொல்வதற்கும் வழிவகுக்கிறது. இதை அழகான விஷயமாகப் பார்க்கிறேன்."

'The Hunt - The Rajiv Gandhi Assassination Case' Series
'The Hunt - The Rajiv Gandhi Assassination Case' Series

``'குட் லக் சகி' திரைப்படம், உங்களுடைய தெலுங்கு திரையுலக அறிமுகமாக இருந்தது. எப்போது உங்களின் தமிழ் அறிமுகத்தை எதிர்பார்க்கலாம்?"

(சிரித்துக் கொண்டே) ``நான் இப்போதுதான் தமிழ் பேசும் நடிகர்களை வைத்து இயக்கியிருக்கிறேன். அது எனக்கு சவாலானதாக இருந்தது. எனக்கு தமிழ்நாட்டிற்கும் சில தொடர்புகள் இருக்கிறது. நான் ஏற்காடு மோன்ட்ஃபோர்ட் பள்ளியில்தான் படித்தேன். தமிழ் எனக்கு நன்றாகவே புரியும். ஆனால், சில ஆண்டுகளுக்கு நீங்கள் அந்த மொழியை பேசவில்லையெனில், அது அப்படியே நம் நினைவிலிருந்து மறந்துப் போகும். நம்பிக்கையுடன் தமிழ் பேச நான் தொடங்கிவிட்டால், நிச்சயமாக முழு நீள தமிழ் படத்தை இயக்குவேன்."

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Kiara Advani: "எங்கள் மனம் நிறைந்திருக்கிறது!" - கியாரா, சித்தார்த் தம்பதிக்கு பெண் குழந்தை

சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி இணைக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.எம்.எஸ்.தோனியின் பயோபிக்கில் சாக்ஷியாக நடித்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் கியாரா அத்வானி. தொடர்ந்து `கபீர் சிங்', `ஷேர்ஷ... மேலும் பார்க்க

`60, 70 நாள்கள் வந்தால்போதும் என்றார்கள், ஆனால் இப்போது..!’ - எம்.பி பதவி பற்றி கங்கனா ரனாவத்

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஹிமாச்சல பிரதேச மாநிலம் மாண்டி தொகுதியில் இருந்து முதல் முறையாக மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த எம்.பி வேலை தனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்று கங்கனா ... மேலும் பார்க்க

Humaira Asghar: வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை ஹுமைரா; அதிர்ச்சியில் பாகிஸ்தான் திரையுலகம்

பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகையானஹுமைரா அஸ்கர் அலி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.பாகிஸ்தானைச் சேர்ந்தபிரபல நடிகை ஹுமைரா அஸ்கர் அலி. பாகிஸ்தான் திரைப்படங்கள் மற்... மேலும் பார்க்க

Alia bhatt: போலி பில்கள் தயாரிப்பு; நடிகையிடம் ரூ.77 லட்சம் மோசடி செய்த முன்னாள் உதவியாளர் கைது

பிரபல பாலிவுட் நடிகையான அலியா பட்‌டின் முன்னாள் தனிப்பட்ட உதவியாளர் ரூ.77 லட்சம் மோசடி செய்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். வேதிகா பிரகாஷ் ஷெட்டி என்ற 32 வயதான இவர், நடிகையின் தயாரிப்பு நிறுவனமான Et... மேலும் பார்க்க

The Hunt - The Rajiv Gandhi Assassination Case Review: ராஜீவ் காந்தி கொலையும் தேடுதல் வேட்டையும்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையப்படுத்தி சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது பாலிவுட் இயக்குநர் நாகேஷ் குக்கூணூரின் 'The Hunt - The Rajiv Gandhi Assassination Case' வெப் சீரிஸ். புலனாய்வு பத்... மேலும் பார்க்க