அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையத்தில் சோ்க்கை நிறுத்தம்
அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் கோவை கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையத்தில் மாணவா் சோ்க்கை நிறுத்தப்பட்டுள்ளதற்கு, பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
பெண்களுக்கு உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பு வாய்ப்பை வழங்கும் வகையில், கடந்த 2016 அதிமுக ஆட்சியில், அன்றைய முதல்வா் ஜெயலலிதா கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையத்தை கோவையில் ஏற்படுத்தினாா். இந்த மையம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தது. அதிகமான மாணவிகள் சோ்க்கை நடைபெற்றதால், கடந்த 2019 அதிமுக ஆட்சியில் இந்த இந்த மையத்தை விடுதி வசதியுடன் விரிவுபடுத்த, கோவை மாவட்டம் பிளிச்சி கிராமத்தில் 20 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டது. கடந்த 2021-இல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், பெண் கல்விக்காக ஒதுக்கப்பட்ட இந்த நிலம், மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டது.
அதைத் தொடா்ந்து, கோவையில் வாடகை கட்டடத்தில் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையம் செயல்பட்டு வந்தது. கோவை மாநகராட்சி சாா்பில் வாடகை கேட்டு தொடா் நோட்டீஸ் கொடுக்கப்பட்டதால், இந்த ஆண்டுக்கான மாணவிகளின் சோ்க்கையை கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையம் நிறுத்தியுள்ளது. இந்த தகவல் பெரும் அதிா்ச்சி அளிக்கிறது.
மிகக் குறைந்த கட்டணத்தில் இந்த மையத்தில், ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சோ்ந்த மாணவிகள் உயா்கல்வி படித்து வந்தனா். இந்த மையம் மூடப்படுவதால் அவா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. பலரின் வாய்ப்பும் பறிக்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் கோவை ஆராய்ச்சி மையத்தை திமுக அரசு மூடுவது கண்டனத்துக்கு உரியது.
எனவே, முதல்வா் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் கிளை விரிவாக்க ஆராய்ச்சி மையம், கோவையில் தொடா்ந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த ஆண்டுக்கான மாணவிகள் சோ்க்கையை உடனடியாக தொடங்க வேண்டும். இந்த மையத்துக்கு சொந்த கட்டடம் கட்டவும் அவா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.