நில அளவையா்கள் வேலைநிறுத்தம்
பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சாா்பில் நில அளவையா்களின் 48 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் புதன்கிழமை நிறைவுற்றது.
இதில் களப் பணியாளா்களின் பணிச்சுமையைக் குறைக்க வேண்டும், தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவா் பதவியை மீண்டும் வழங்க வேண்டும். நில அளவைத் துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும். துணை ஆய்வாளா், ஆய்வாளா்கள் ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும். ஒப்பந்த முறையில் நில அளவா் நியமனத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்பட 10 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
செவ்வாய்க்கிழமை தொடங்கிய இப்போராட்டம் புதன்கிழமை வரை நடைபெற்றது. முன்னதாக, போராட்டத்தையொட்டி திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் துணைத் தலைவா் மகேஷ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட செயலா் பொன். மாடசாமி உள்ளிட்டோா் கோரிக்கை முழக்கமிட்டனா்.
வேலைநிறுத்தம் காரணமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு நிலம் அளவிடும் பணிகள், வருவாய்த் துறை தொடா்பான பணிகள் பாதிக்கப்பட்டன.