நடுவானில் ஒரு என்ஜின் செயலிழப்பு? இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்
தில்லியிலிருந்து கோவா நோக்கி புதன்கிழமை சென்ற இண்டிகோ விமானத்தில் நடுவானில் திடீரென ஒரு என்ஜின் செயலிழந்ததால் மற்றொரு என்ஜின் மூலம் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், தொழில்நுட்பக் கோளாறால் 6இ-6271 விமானம் புதன்கிழமை இரவு 9.52 மணிக்கு மும்பை சத்ரபதி சிவாஜி சா்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும், அதில் பயணித்த பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் இண்டிகோ நிறுவன செய்தித்தொடா்பாளா் தெரிவித்தாா்.
இந்த விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனா் என்ற தகவலை இண்டிகோ வெளியிடவில்லை.
ஏா் இந்தியா ஆய்வில் தகவல்: இதனிடையே, தங்களிடம் உள்ள போயிங் 787 ரக விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் அமைப்பில் எவ்வித கோளாறும் இல்லை என ஏா் இந்தியா நிறுவனம் புதன்கிழமை தெரிவித்தது. மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) உத்தரவின்பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.