Vishal: "3 நாட்களுக்கு ரிவியூ எடுக்காதீர்கள்... ஆக. 29ல் நல்ல செய்தி" - விஷால் பேச்சு!
ரெட் ஃப்ளவர் என்ற படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஷால், ரிவியூவர்களை 3 நாட்கள் திரையறங்குகளுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் ஆகஸ்ட் 29ல் நல்ல செய்தி சொல்வதாகவும் பேசியிருக்கிறார்.
"படங்களில் சின்ன படம், பெரிய படம் என்றெல்லாம் இல்லை. திரையில் நீங்கள் என்ன பார்க்கிறீர்களோ அதுதான் படம். நான் என் நண்பன் விகேஷுக்காக (கதா நாயகன்) இங்கு வந்திருக்கிறேன்.

பல இயக்குநர்கள் நடைமுறை சிக்கல்களைப் பதிவு செய்யவே திணறும்போது இயக்குநர் ஆன்ட்ரூ பாண்டியன் 2047ல் என்ன நடக்கப்போகிறது என்பதைப் படமாக எடுத்திருக்கிறார்." என்றார்.
3 நாட்களுக்கு ரிவியூ எடுக்காதீர்கள்
அத்துடன் "இன்னும் 3 மாதத்துக்குள் நடிகர் சங்கம் சார்பாக நாங்கள் கட்டக் கூடிய அரங்கம் திறக்கப்படும். சின்ன படம், பெரிய படம் பாரபட்சமில்லாமல் எல்லோருக்கும் அது உதவும்.
படம் வெளியாகி 3 நாட்களுக்கு ரியூவர்கள் யாரும் தியேட்டர் வாசலில் நின்று கருத்துக்களைக் கேட்காதீர்கள். வெளியில் இருந்து கேட்டுக்கொள்ளுங்கள். அந்த 12 ஷோக்களுக்கு தியேட்டருக்குள் ரிவியூ எடுப்பதை கட்டுப்படுத்த வேண்டுமென எக்ஸிகியூட்டர் அசோசியேஷனைக் கேட்டுக்கொள்கிறேன்.

ரிவியூ சொல்வதில் போட்டி இருக்கும். ஆனால் இந்த 3 நாட்கள் மட்டும் நீங்கள் உங்கள் கருத்தைக் கூறிவிட்டு அதன்பிறகு ஆடியன்ஸ் கருத்தைக் கேட்டால் நன்றாக இருக்கும்." என்றார்.
"சங்க கட்டடத்தில்தான் எனக்கு கல்யாணம்!"
மேலும், "தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒரு வேண்டுகோள். ஒரு நாளுக்கு 10 படங்கள் ரிலீஸ் ஆகின்றன. தயாரிப்பாளர்கள் தங்களுக்கு 100 தியேட்டர் கிடைக்கிறது என சந்தோஷமாக இருக்கின்றனர். ஆனால் அதில் 400 ஷோக்கள் கிடைப்பதில்லை, 100 ஷோக்கள்தான் கிடைக்கின்றன.
அதனால் தயாரிப்பாளர்கள் எப்போது எப்படி ரிலீஸ் பண்ணலாம் என்பதைக் கூறுவதற்கு ரெகுலேஷன் கமிட்டி அமைத்தால் அது எல்லோருக்கும் பக்க பலமாக இருக்கும்.
நடிகர் சங்க கட்டடத்துக்காக 9 ஆண்டுகள் தாக்குபிடித்துவிட்டேன். இன்னும் இன்னும் 2 மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும். நிச்சயமாக நடிகர் சங்க கட்டடத்தில்தான் எனக்கு கல்யாணம் அதற்கு தாமதமெல்லாம் ஆகாது. இப்போதுகூட கட்டட வேலையைப் பார்க்கத்தான் போகிறேன். ஆகஸ்ட் 29 ஒரு நல்ல செய்தி இருக்கு எல்லோருக்கும்." எனப் பேசினார்.