மரண தண்டனையிலிருந்து நிமிஷா பிரியா விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது...
யேமன் நாட்டில் சிறையிலிருக்கும் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற இன்னும் சில சாத்தியக் கூறுகள் இருப்பதாக அவர் தரப்பில் போராடும் வழக்குரைஞர் தெரிவித்திருக்கிறார்.
நிமிஷா பிரியா தரப்பில் வாதாடும் வழக்குரைஞர் சுபாஷ் சந்திரன் ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் சொல்லியிருப்பதாவது: “கொல்லப்பட்ட நபரின் சகோதரர் தெரிவித்திருக்கும் விஷயங்களையெல்லாம் நாங்கள் பின்னடைவாகக் கருதவில்லை. இவையனைத்தும், இந்த செயல்முறையில் நடைபெறும் விஷயங்கள்தான். கொல்லப்பட்ட நபரின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் நாங்கள் சமாதானப்படுத்த முயற்சித்து வருகிறோம்.
செவ்வாய்க்கிழமை(ஜூலை 16) நிமிஷாவின் மரண தண்டனை ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நல்ல மனிதர்கள் பலரும் அவரைக் காப்பாற்ற முன்வந்துள்ளனர். அதற்காகச் செயல்பட்டும் வருகின்றனர்.
நிமிஷாவைக் காப்பாற்ற ‘சர்வதேச செயல் குழுவில்’ முக்கியமாக உயர்நிலையில் 19 உறுப்பினர்களும் பல்வேறு துறைசார் 300 உறுப்பினர்களும் உள்ளனர். மேலும், இவ்விவகாரத்தில் காந்தபுரம் அபூபக்கர் முஸ்லியார் மட்டுமில்லாது, செல்வாக்குமிக்க தொழிலதிபர்களான எம். ஏ. யூசுஃப் அலி(லூலூ குழுமத் தலைவர்), போபி செம்மனூர் உள்ளிட்ட பலர் நிதியுதவி அளித்து காப்பாற்ற முன்வந்துள்ளனர்” என்றார்.