வயலூா் சாலையில் பேருந்து நிழற்குடைகள் இல்லை: பொதுமக்கள் அவதி
போலி பேஸ்புக் கணக்குகள்; பெண்ணுக்கு பகிரப்பட்ட ஆபாச புகைப்படங்கள் - ஈரோடு இளைஞர் சிக்கிய பின்னணி!
ஈரோடு மாவட்டத்தில் வசித்து வரும் மாட்டுப் பண்ணை உரிமையாளர் ஒருவர், கடந்த மே மாதம் ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், பேஸ்புக்கில் தனது மனைவியிடம் ஒரு நபர் ஆபாசமாக புகைப்படம் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பி வருவதாகவும், அந்தப் புகைப்படங்களை தனக்கு பகிர்ந்து வருவதாகவும் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த சைபர் கிரைம் போலீஸார், அந்த பேஸ்புக் முகவரியைக் கொண்டு பேஸ்புக் நிறுவனத்திடம் தகவல் கேட்டிருந்தனர். இந்நிலையில்,பேஸ்புக் நிறுவனத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில், ஈரோட்டில் சோலார் பேனல் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நந்தகுமார் என்பவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

அதில், ஏற்கெனவே மாட்டுப் பண்ணையில் வேலை பார்த்த நந்தகுமார், அதன் உரிமையாளரின் மனைவியின் பெயரைத் தெரிந்துகொண்டுள்ளார். பின்னர், போலி பேஸ்புக் கணக்கு மூலம் அவரது மனைவிக்கு ஆபாச புகைப்படங்கள் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து, நந்தகுமாரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "பிளஸ்1 வரை படித்துள்ள நந்தகுமார் வெவ்வேறு பெயர்களில் 10-க்கும் மேற்பட்ட போலி பேஸ்புக் கணக்குகளை தொடங்கி வைத்துள்ளார். அதன் மூலம் பெண்களுக்கு பேஸ்புக் மெசன்ஜர் மூலம் ஆபாசமாக புகைப்படங்களையும், குறுஞ்செய்திகளையும் அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும், அவரது செல்போனை ஆய்வு செய்ததில், ஆன்லைன் வீடியோ கால் ஆப்களை பதிவிறக்கம் செய்துவைத்து அதன் மூலமும் பெண்களிடம் பேசி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நந்தகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்" என்றனர்.