மணிப்பூரில் வீடுகளுக்குத் திரும்ப முயற்சிக்கும் மக்கள்! தடுக்கும் பாதுகாப்புப் படைகள்!
மணிப்பூர் மாநிலத்தில் உள்ளூரிலேயே இடம்பெயர்ந்த 100-க்கும் அதிகமான மக்களைத் தங்களது வீடுகளுக்குத் திரும்பவிடாமல் பாதுகாப்புப் படையினர் தடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையால், கிழக்கு இம்பால் மாவட்டத்திலுள்ள தொலாய்தபி கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி, சஜிவா பகுதியில் அமைந்துள்ள நிவாரண முகாம்களில் சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்த முகாம்களில் இருந்து, தங்களது கிராமத்துக்குச் செல்ல முயன்ற 100-க்கும் மேற்பட்டோரை வழியிலேயே பாதுகாப்புப் படையினர் தடுத்துள்ளனர்.
தொலாய்தபி கிராமத்திலிருந்து சுமார் 2.5 கி.மீ. தூரத்திலுள்ள புகாவோ டெஸ்பூர் பகுதியில் அவர்கள் அனைவரையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், வன்முறையில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான தொலாய்தெபி பதற்றம் நிறைந்த மண்டலத்தினுள் வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், அப்பகுதி முழுவதும் சி.ஆர்.பி.எஃப். பெண் காவலர் படை உள்பட ஏராளமான வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, தடுக்கப்பட்ட கிராமவாசிகள் அனைவரும், வன்முறையில் தங்களது வீடுகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது தங்களுக்கு தெரியும் என்றும், தங்களது நிலங்களை பார்க்க மட்டுமே அவர்கள் அங்கு செல்ல முயன்றதாகவும் கூறியுள்ளனர்.
இதனால், அவர்கள் அனைவரும் அங்கேயே உட்கார்ந்து சில நிமிடங்களுக்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, மாவட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் உள்ளூர் தலைவர்களுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
கடந்த 2023-ம் ஆண்டு, மணிப்பூரில் இருதரப்புக்கு இடையில் ஏற்பட்ட வன்முறையால், சுமார் 260-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில், ஏராளமானோர் தங்களது வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து நிவாரண முகாம்களில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மரண தண்டனையிலிருந்து நிமிஷா பிரியா விடுவிக்கப்பட வாய்ப்பு..!