ரஜினியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற கமல்!
மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கவுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து பெற்றார்.
மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
அவருடன் திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், அதிமுக சாா்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் வருகின்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொள்ளவுள்ளனர்.
வருகின்ற ஜூலை 25 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் பதவியேற்றுக் கொள்வார் என்று மக்கள் நீதி மய்யம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள ரஜினிகாந்த்தின் இல்லத்துக்கு நேரில் சென்ற கமல்ஹாசன், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணையை அவரிடன் காட்டி வாழ்த்து பெற்றார்.
இதுதொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ள கமல்ஹாசன், புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த்துடன் பகிர்ந்தேன், மகிழ்ந்தேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.