டிஎன்பிஎஸ்சி தேர்வில் விடியல் பயணம் கேள்வி: சீமான் விமர்சனம்!
டிஎன்பிஎஸ்சி தேர்வில் விடியல் பயணம் குறித்து கேட்கப்பட்டு கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் மதிமுகவினருக்கும் , நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே நடந்த மோதல் தொடர்பான வழக்கு விசாரணை இன்று(ஜூலை 16) திருச்சி மாவட்ட இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது.
நீதிபதி கோபிநாத் முன்னிலையில் நடந்த விசாரணையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் ஆஜராகினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 19 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
விவசாயிகளும் ஆசிரியர்களும் சாலையில் வந்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில் திமுக ஆட்சியாளர்கள் வீடுவீடாக செல்வதாகக் கூறுகிறார்கள்.
பாசிச பாஜக அரசின் கொள்கைகளில் இருந்து திமுக அரசு எந்த விதத்தில் மாறுபடவில்லை. டிஎன்பிஎஸ்சி தேர்வில் அரசியல் கேள்விகள் கேட்கக்கூடாது என அதன் தலைவர் கூறுகிறார். ஆனால் விடியல் பயணம் எப்போது தொடங்கப்பட்டது என கேட்கப்பட்ட கேள்வி அரசியல் கேள்வியா? இல்லையா?
திமுகவினர் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பிலும் ஈடுபடுகிறார்கள்.
வரும் 2026-க்குப் பிறகும் இரண்டாடுகள் பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருக்கும் என்பதால், பாஜகவுடன் இணங்கி செல்ல வேண்டும் என்பதற்காக பாஜக கருத்துக்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்” என்றார்.
பயத்தின் காரணமாக அப்படி பேசுகிறாரா என்கிற கேள்விக்கு ”அதீத துணிச்சல் காரணமாக அவ்வாறு பேசுகிறார்” என கிண்டலாக சீமான் பதிலளித்தார்.
இதையும் படிக்க: நிமிஷாவுக்கு மன்னிப்புக் கிடையாது! கொல்லப்பட்டவரின் சகோதரர் திட்டவட்டம்!