மோடிக்கு கறுப்பு பலூன் காட்டிய ஸ்டாலின் வெள்ளைக் குடை பிடிக்கிறார்! இபிஎஸ் விமர்சனம்
பாஜகவிடம் அதிமுகவுக்கு பயம் என்று அதிமுகவை முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
சிதம்பரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பழனிசாமி பிரசாரத்தில் பேசுகையில், நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். நீங்கள் ஏன் நடுங்குகிறீர்கள்? முதல்வர் ஸ்டாலினுக்கு ஏன் பயம்? பயம் என்ற சொல்லே அதிமுகவுக்கு இல்லை. அதிமுக தொண்டர்கள் யாருக்கும் பயப்பட மாட்டார்கள்.
அதிமுக என்பது இரு பெரும் தெய்வங்கள் உருவாக்கிய கட்சி; அதனை யாராலும் தொட முடியாது. எம்ஜிஆர். ஜெயலலிதா இருவரும் சபதமேற்று, பேரவைக்குள் நுழைந்தனர். மக்களிடையே கிடைத்துள்ள அதிமுகவுக்கான எழுச்சி, தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பிரதமர் மோடிக்கு எதிராகக் கறுப்பு பலூன் காட்டினார். ஆனால், தற்போது ஆட்சிக்கு வந்ததும் மோடிக்கு வெள்ளைக் குடை பிடிக்கிறார்.
பணத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பாஜகவை பார்த்து ஸ்டாலின்தான் பயப்படுகிறார். எல்லா கட்சியிலும் அமைச்சரவையில் இடம்பெற்ற திமுக மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று தெரிவித்தார்