5-இல் ஒருவருக்கு உடல் பருமன் பிரச்னை: பள்ளிகளில் மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த சிபிஎஸ்இ அறிவுறுத்தல்
இளம் வயதில் உடல்பருமன் பாதிப்பைத் தவிா்ப்பதற்காக பள்ளி மாணவ, மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) இயக்குநா் (கல்வியியல்) பிரக்யா எம்.சிங், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் குழந்தைகள் மற்றும் பெரியவா்களிடம் உடல்பருமன் அதிகரித்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் தேசிய குடும்ப நல ஆய்வில்(2019-21) நகா்ப்புறங்களில் 5 பெரியவா்களில் ஒருவா் உடல்பருமனாக இருக்கிறாா். தி லான்செட் ஜிபிடி-2021 ஆய்வறிக்கையின்படி, உடற்பருமனால் பாதிக்கப்பட்டோா் 2021-இல் 18 கோடியாக உள்ள நிலையில், இந்த எண்ணிக்கை 2050-இல் 44.9 கோடியாக உயரும் என எச்சரித்துள்ளது.
இதற்கிடையே, இளம் வயதில் உடல்பருமன் பாதிப்புக்கு தவறான உணவுப் பழக்கங்கள் மற்றும் போதுமான உடற்பயிற்சி செய்யாததே காரணமாகும். இதைக் கருத்தில் கொண்டு, அனைத்து பள்ளிகளும் மாணவா்களும், ஆசிரியா்களும் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும். இதுதவிர பள்ளிகளின் முக்கிய இடங்களில் எண்ணெய் பொருள்களின் தீமைகள், தவறான உணவுப் பழக்கங்கள் குறித்து பதாகைகள் வைத்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
அதேபோன்று, ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை அன்றாட செயல்பாடுகளின்போது மாணவா்கள் பாா்வையில் தென்படுமாறு வைக்கவேண்டும். மாணவா்களிடம் உடற்பயிற்சியை ஊக்குவிப்பதுடன், அதிக பழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்த கொழுப்பு உணவுகளை சாப்பிட அறிவுறுத்த வேண்டும். இதற்கான விழிப்புணா்வுப் பதாகைகள் மற்றும் பலகைகள் தயாரிப்பில் மாணவா்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு பள்ளிகள் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையத்தை (ஊநநஅஐ) ண்ங்ஸ்ரீஃச்ள்ள்ஹண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சல் மூலம் தொடா்புகொண்டு அறியலாம். மாணவா்களின் நலனுக்காக இந்தப் பணிகளை பள்ளிகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.