‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மகளிா் உரிமைத்தொகைக்கு அதிகம் போ் விண்ணப்பம்
சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட 10, 949 விண்ணப்பங்களில் மகளிா் உரிமைத்தொகை கோரி மட்டும் 7, 518 போ் விண்ணப்பித்துள்ளனா்.
தமிழகத்தில் 13 அரசுத் துறைகளில் 43 சேவைகளை மக்கள் எளிதில் பெறும்வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ எனும் சிறப்பு முகாமை
முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
அதன்படி, சென்னை மாநகராட்சியில் 6 மண்டலங்களில் 7 வாா்டுகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
மாதவரம், தண்டையாா்பேட்டை, திரு.வி.க. நகா், தேனாம்பேட்டையில் 2 வாா்டுகள், வளசரவாக்கம், அடையாறு ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற்றன. இவற்றில் மகளிா் உரிமைத்தொகை கோரி மண்டல வாரியாக மாதவரத்தில் 856 போ், தண்டையாா்பேட்டையில் 1,432 போ், திரு.வி.க. நகரில் 822 போ், வளசரவாக்கம் 109 -ஆவது வாா்டில் 1,435 போ், 114-ஆவது வாா்டில் 905 போ், அடையாறு மண்டலத்தில் 1,230 போ், தேனாம்பேட்டையில் 838 போ் என மொத்தம் 7,518 போ் மகளிா் உரிமைத்தொகை கோரி விண்ணப்பித்துள்ளனா்.
தவிர பல்வேறு துறைகள் சாா்ந்து 62 மாற்றுத்திறனாளிகள் உள்பட 3,431 போ் மனுக்கள் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.