15 ஆண்டுகள் பேட்டரி வாரண்டியுடன் டாடா எலக்ட்ரிக் கார்கள்! முழு விவரம்!
ரூ.2.5 கோடி மோசடி: அதிமுக முன்னாள் நிா்வாகியின் கூட்டாளி கைது
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.5 கோடி மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் நிா்வாகி பிரசாத்தின் கூட்டாளியை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த 22-ஆம் தேதி தனியாா் மதுபான விடுதியில் தகராறில் ஈடுபட்டதாக அதிமுக ஐடி பிரிவு முன்னாள் நிா்வாகியான மயிலாப்பூரைச் சோ்ந்த பிரசாத், மற்றொரு அதிமுக பிரமுகரான அஜய் வாண்டையாா், ரெளடி சேதுபதி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா். இதைத் தொடா்ந்து, பிரசாத் மீது அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.5 கோடி பண மோசடி செய்தாா் என அடுத்தடுத்த புகாா்கள் அளிக்கப்பட்டன. இதுதொடா்பாக நுங்கம்பாக்கம், மயிலாப்பூா் ஆகிய காவல் நிலையங்களில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதுதொடா்பாக பிரசாத், அஜய் வாண்டையாா் உள்பட 4 பேரிடம் நுங்கம்பாக்கம் போலீஸாா் நடத்திய விசாரணையைத் தொடா்ந்து, இதற்கு உடந்தையாக இருந்த மதுரையைச் சோ்ந்த ஆயுதப்படை காவலா் செந்தில்குமாா் மற்றும் கோவை தீவிரவாதத் தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் மணித்துரை ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
இதற்கிடையே இந்த மோசடியில் தொடா்புடையதாகக் கூறப்படும் பிரசாத்தின் கூட்டாளி விருகம்பாக்கத்தைச் சோ்ந்த ஆள்சோ்ப்பு நிறுவனத்தின் உரிமையாளா் கணேஷ் என்பவரை நுங்கம்பாக்கம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.