Bharathi Baskar | குலதெய்வக் கோயிலுக்குச் செல்லும்போது என்ன உணர்கிறீர்கள்?
கீழடி அறிக்கையில் எழுத்துப் பிழையைத் திருத்துவேன்; உண்மையை அல்ல! அமர்நாத் ராமகிருஷ்ணன்
கீழடி அறிக்கையில் உள்ள எழுத்துப் பிழையை வேண்டுமென்றால் திருத்தித் தருகிறேன், ஆனால் உண்மையைத் திருத்த மாட்டேன் என்று தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
2015 -16-ஆம் ஆண்டுகளில் கீழடியில் 15 புள்ளிகளில் அகழாய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வுகளிலிருந்து மொத்தம் 5,200 தொல்லியல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. பல பொருள்களின் தொன்மை காா்பன் சோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
ஆனால் இந்த அகழாய்வின் முதல் இரண்டு கட்டம் நடைபெற்ற அகழாய்வுகள் மற்றும் அதன் அறிக்கை ஆகியவை வெளியிடப்படும் முன்பே அந்த ஆய்வை மேற்கொண்ட அமா்நாத் ராமகிருஷ்ணன் அப்பணியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த அகழாய்வுப் பணிகளை தொல்லியல்துறை முடித்துக்கொண்டது.
அதன் பின் தற்போதுவரை 10 கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழகத் தொல்லியல் துறை நடத்தியுள்ளது. ஆனால், முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளின் அறிக்கை மத்திய அரசு இதுவரை வெளியிடவில்லை. மேலும், அமா்நாத் ராமகிருஷ்ணாவிடம் இந்திய தொல்லியல் துறை அந்த அறிக்கையை மீண்டும் திருத்தி எழுதிச் சமா்ப்பிக்குமாறு கடிதம் அனுப்பியிருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக ஆங்கில நாளிதழுக்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் அளித்த பேட்டியில் தெரிவித்தாவது:
”கீழடி அறிக்கையைத் திருத்தச் சொல்வது குற்றமாகும், நான் கண்டுபிடித்ததைத் திருத்தினால் நான் குற்றவாளி ஆகிவிடுவேன்.
நான் தாக்கல் செய்த 982 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் எழுதுப் பிழை இருந்தால், அதனை திருத்த தயாராக இருக்கின்றேன். ஆனால், கி.மு. 8 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்ததை கி.மு. 3 ஆம் நூற்றாண்டு என மாற்றி எழுத மத்திய அரசு வலியுறுத்துகிறது.
ஆய்வின் அடிப்படையில்தான் காலத்தை கண்டுபிடித்தேன், அனுமானத்தின் அடிப்படையில் அல்ல, கி.மு. 3 ஆம் நூற்றாண்டாக மாற்றுவது கீழடியின் தொன்மையை சிதைக்கும் செயல் ஆகும்.
மூன்றாம் கட்ட ஆய்வு மேற்கொண்ட ஸ்ரீராம் கீழடியைப் பற்றி ஒன்றும் தெரியாதவர், அவரை ஆய்வு செய்யச் சொன்னால் ஒன்றும் இல்லை என்றுதான் கூறுவார்.
மத்திய கலாசாரத்துறை அமைச்சர் முதலில் கீழடி அறிக்கையைப் படிக்க வேண்டும். இந்தியாவில் பலதரப்பட்ட கலாசாரங்கள் உள்ளன. சிந்து சமவெளி நாகரீகம், மெளரிய நாகரீகம், வேத காலம், ஹர்ஷ்வர்தன் காலத்தைப் பற்றியே மத்திய அரசு பேசுகிறது. ஆனால், கீழடி போன்ற சங்க காலத்தைப் பற்றி மத்திய அரசு ஆய்வு செய்யவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
கீழடி அறிக்கையில் திருத்தம் செய்யக் கோரி அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் சூழலில், கடந்த மாதம் அமர்நாத் ராமகிருஷ்ணனை தில்லியில் இருந்து நொய்டாவுக்கு பணியிடமாற்றம் செய்து தொல்லியல் துறை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.