கூட்டணி ஆட்சிதான்! அமித் ஷா சொல்வதைத்தான் நான் கேட்க முடியும்: அண்ணாமலை
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிதான் என்று அமித்ஷா பலமுறை மிகத் தெளிவாக கூறிவிட்டதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"அதிமுக - பாஜக கூட்டணி உருவானதில் என் பங்கு இல்லை. இந்த கூட்டணி எப்படி இருக்க வேண்டும் என்று பேசினார்களோ அதிலும் என் பங்கு இல்லை. அப்படி இருக்க, என் தலைவர் அமித்ஷா சொல்வதைத்தான் நான் கேட்டாக வேண்டும். அவர் ஒருமுறை அல்ல, பலமுறை கூறியிருக்கிறார்.
எனவே அமித் ஷா சொல்வதை மாற்றி, கூட்டணி ஆட்சி இல்லை என்று கூறினால் இந்த கட்சியில் நான் தொண்டனாக இருக்கவே தகுதி இல்லை.
கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசியிருக்கிறார்கள், அதில் எனக்கு பங்கு இல்லை. ஆனால் என்னுடைய தலைவர்கள் பேசியிருப்பதை நான் தூக்கிப்பிடித்தாக வேண்டும். அவர்கள் சொன்னதை நான் நம்புகிறேன். அதனால் நான் இதில் உறுதிபட இருக்கிறேன்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, கூட்டணி ஆட்சி என்று மிகத் தெளிவாக கூறிவிட்டார். அவர் சொன்னதை நான் எப்படி மாற்றி கூற முடியும்?
அமித் ஷா கூறியதில் அதிமுகவுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் அவர்கள் பேசி முடிவெடுக்கலாம்" என்று பேசினார்.