`திமுக கூட்டணியில் பெரிய பூகம்பம் நிகழ்ந்துள்ளது; விரைவில் உடையும்!’ - சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி
விருதுநகரில் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
இப்போது படி,படி என திராவிட மாடல் கூறுவதாகவும், படிக்கக் கூடாது என காவி மாடல் கூறுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார் என்கின்ற கேள்விக்கு, பதிலளித்தவர், ”காமராஜர் முதலமைச்சராக இருந்த பொழுது படிக்கச் சொல்லி எல்லா இடங்களிலும் திண்ணை பள்ளிக்கூடங்களையும், 5000 புதிய பள்ளிக்கூடங்கள் நிறுவி எல்லா கிராமங்களையும் இணைக்கும் வகையில் சாலைகள் அமைத்த அவர்தான் கல்விக்கண் திறந்த காமராஜர் என்கின்ற பெயருக்கு சொந்தக்காரர்.
தற்போது இவர்கள் படிப்பை மாற்றி வைக்கிறார்கள் பெஞ்சு மாற்றி வைக்கிறார்கள். பெஞ்சை `ப’ வடிவில் போட்டால் அது ஒரு திட்டம் என விளம்பர ஆட்சி செய்வது தான் திராவிட மாடல்.

திமுக-வின் நிலைப்பாடு எப்போதும் மக்களுக்கு எதிராக தான் இருக்கும்!
திமுக என்பது காமராஜருக்கு எதிரான ஆட்சி என்பது கலைஞர் காலத்திலேயே நிரூபிக்கப்பட்டு விட்டது. காமராஜரை சட்டசபையில் எவ்வளவு அவதூறாக பேச முடியுமோ அவ்வளவு அவதூறாக பேசி இருக்கிறார்கள். காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது சட்டசபையில் ஒருமையில் பேசியவர்களும் அவர்கள் தான். திமுக-வின் நிலைப்பாடு எப்போதும் மக்களுக்கு எதிராக தான் இருக்கும்.
கல்வியை எடுத்துக் கொண்டாலும், சில திட்டங்களை எடுத்துக் கொண்டாலும் திமுக போடுவது அனைத்தும் வேஷம். எனவே ஸ்டாலின் அவர்களின் கனவு வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒருபோதும் பலிக்காது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை அமைக்கும்” என கூறினார்.
அதிமுகவை பாஜக விழுங்க பார்க்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார் என்ற கேள்விக்கு,” திருமாவளவன் அவர்கள் ஏதோ ஒரு பதட்டத்தில் பேசுகிறார். திமுக மீது உள்ள கோபத்தை காட்டி எங்களை சரியாக இருக்கச் சொல்கிறார். எப்படியும் திமுக அடுத்த முறை ஆட்சிக்கு வரக்கூடாது என்கின்ற நிலைப்பாட்டில் திருமாவளவன் இருக்கிறார். அதனால் எங்களை சரியாக இருக்கச் சொல்லி, எந்த விதத்திலும் ஓட்டுகள் தவறி விடக்கூடாது, அடுத்த முறை அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என கூறுகிறார். அவரை திமுக பெரிய அளவில் அவமானப்படுத்தி இருக்கிறது.

அதனால் தான் இந்த வார்த்தை அவரிடத்தில் இருந்தே வருகிறது. திமுக கூட்டணியில் மிகப்பெரிய பூகம்பம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விசிக மட்டுமல்ல ஒட்டுமொத்த கூட்டணியும் உடைய போகிறது. நாலரை ஆண்டுகள் எதுவுமே செய்யாமல் தற்போது இல்லம் தோறும் முதலமைச்சர் என்று இந்த எட்டு மாதம் நாடகம் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். எப்படியாவது மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கலாம் என்று தான் திமுக இருக்கிறது.
ஆனால் அதிமுக உள்ளதைச் சொல்லி, சொல்லியதைச் செய்து ஆட்சியமைக்கும். இப்படி எல்லாம் செய்தால் திமுக ஆட்சி மேல் உள்ள கோபம் தீர்ந்து விடுமா?. நாட்டு மக்கள், விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளிகள் அனைவரும் கொதித்துப் போய் உள்ளனர் அனைவருக்கும் வேலை இல்லை கையில் பணமும் இல்லை பொருளாதாரம் சீரழிந்துள்ளது. இன்னமும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என கூறினால் அவர்களை ஏமாற்றிக் கொள்வதற்கு அர்த்தம். ” என்றார்.
எதிர்காலத்தில் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்போம் என பழனிசாமி கூறி இருப்பதால் அதிமுகவின் ஓட்டு தவெகவிற்கு செல்வதற்கான வாய்ப்பு உள்ளதா என்கின்ற கேள்விக்கு, ``அதிமுக-வில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோர்களுக்கு ஓட்டு போடுபவர்கள். மக்கள் இரட்டை இலைக்கு வாக்கு செலுத்தி திமுகவை வீட்டுக் அனுப்புவதற்கு முடிவு செய்து இருக்கிறார்கள். விஜயிலிருந்து அனைத்து கட்சி தலைவர்களும் வருவார்கள் பழனிசாமியின் பதவியேற்பு விழாவிற்கு அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்படும், எல்லோரும் வருவார்கள், எல்லோரும் சிறப்பிக்கப்படுவார்கள்”.

அப்படி என்றால் ஓபிஎஸ் பக்கம் அதிமுக-வில் ஆட்கள் இல்லையா என்கிற கேள்விக்கு,” அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஈபிஎஸ் பக்கம் இருக்கிறார்கள். இன்னமும் அங்கு குழப்பத்தை உருவாக்க திமுக-விலோ வேறு யாரு செய்தாலும் அது நடக்காது. எங்களிடத்திலே யார் வந்தாலும் பலம் தான். நாங்கள் தற்போது பலவீனமாக இல்லை. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் பல தலைவர்கள் பிரிந்து செல்வார்கள் மீண்டும் அதிமுகவிற்கு வருவார்கள். அதனால் கட்சியின் அடித்தளம் ஆடி விடாது. அதிமுக என்கின்ற சிம்மாசனம் அசைக்க முடியாததாக இருக்கிறது”. என தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb