Rohit - Kohli: ரோஹித், கோலி டெஸ்ட் ஓய்வு விவகாரத்தில் மௌனம் களைத்த பிசிசிஐ; காரணம் என்ன?
இந்தியாவில் ஐபிஎல் நடந்துகொண்டிருந்த சமயத்தில், இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித்துக்குப் பதிலாக புதிய கேப்டன் நியமிக்கப்படப்போகிறார் என்று மே மாதம் பேச்சு உலாவத் தொடங்கிய அடுத்த சில நாள்களில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக ரோஹித் அறிவித்தார்.
அதற்கடுத்த சில நாள்களில் அவரைத் தொடர்ந்து சீனியர் வீரர் விராட் கோலியும், டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

மிகப்பெரிய டெஸ்ட் தொடருக்கு முன்பாக சில நாள்கள் இடைவெளியில் இருவரும் ஓய்வை அறிவித்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதோடு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியம்தான் (BCCI) அவர்களைக் கட்டாயப்படுத்தி ஓய்வுபெறவைத்ததாகப் பேச்சுகள் எழுந்தன.
ஆனால், ரோஹித், கோலி ஓய்வு குறித்து பிசிசிஐ தரப்பிலிருந்து எந்தவொரு விளக்கமும் தரப்படவில்லை.
இந்த நிலையில், பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா முதல்முறையாக இந்த விவகாரத்தில் பதில் அளித்திருக்கிறார்.
தனியார் ஊடகத்திடம் பேசிய ராஜீவ் சுக்லா, "எல்லோருக்கும் ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்துகிறேன். ரோஹித் மற்றும் கோலி இல்லாததை நாம் அனைவருமே உணர்கிறோம். ஆனால், ஓய்வு முடிவு என்பது அவர்களாகவே எடுத்தது.
எந்தவொரு வீரரையும் ஓய்வுபெறுமாறு கூறக்கூடாது என்பது பிசிசிஐ-யின் கொள்கை.
அவர்கள் தாங்களாகவே ஓய்வு பெற்றுவிட்டார்கள். அவர்கள் இருவரும் சிறந்த பேட்ஸ்மேன்கள். அவர்களை நாங்கள் மிஸ் பண்ணுவோம்.
அதேசமயம் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், அவர்கள் இன்னும் ஒருநாள் போட்டியில் இருக்கிறார்கள்." என்று கூறினார்.

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் முடிந்ததும் இந்திய அணி ஆகஸ்டில் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதாக முன்பு திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், வங்கதேசத்தில் தற்போது அரசியல் பதட்டம் காரணமாக இந்தத் தொடர் கிட்டத்தட்ட நடக்க வாய்ப்பில்லை.
அடுத்து, செப்டம்பரில் நடைபெறவிருக்கும் ஆசிய கோப்பை தொடரும் டி20 வடிவில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதால் சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் மற்றும் கோலியின் ஆட்டம் இப்போதைக்கு இல்லை.
எனவே, அக்டோபர் 19-ம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் தொடரில் இவ்விருவரையும் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். ஆனால், இன்னும் 3 மாதங்கள் இருக்கிறது.