பேராசிரியரின் பாலியல் தொல்லை; கல்லூரியில் தீக்குளிப்பு - 3 நாள் உயிருக்கு போராடிய மாணவி உயிரிழப்பு
ஒடிசாவில் உள்ள பாலசோர் என்ற இடத்தில் இருக்கும் பஹிர் மோகன் கல்லூரியில் பி.எட் படித்து வந்த மாணவிக்கு அதே கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்யும் சமீர் குமார் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. துறை தலைவரான அப்பேராசிரியர் மாணவியிடம் தனது ஆசைக்கு இணங்கும்படி கூறி நிர்ப்பந்தம் செய்து வந்தார். அதோடு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.
தனது ஆசைக்கு இணங்கவில்லையெனில் தேர்வுகளில் தோல்வியடைய செய்துவிடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது. இதையடுத்து கடந்த ஒன்றாம் தேதி மாணவி தனக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகள் குறித்து விரிவாக புகார் எழுதி அதனை கல்லூரி புகார் கமிட்டியில் கொடுத்தார். ஆனால் அப்புகாரின் பேரில் பேராசிரியர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புகார் கொடுத்தவுடன் 7 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

ஆனால் நடவடிக்கை எடுக்காததால் அம்மாணவி சக மாணவிகளுடன் சேர்ந்து கடந்த 12ம் தேதி கல்லூரிக்கு வெளியில் போராட்டம் நடத்தினார். இப்போராட்டத்தின் போது திடீரென பேராசிரியரால் பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவி வேகமாக கல்லூரி முதல்வர் அறைக்கு வெளியில் சென்று தீக்குளித்தார். இதில் அவர் உடல் பற்றி எரிந்தது. சக மாணவர்கள் தீயை அணைத்து அவரை புபனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் 90 சதவீத தீக்காயம் அடைந்திருந்தார். அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வந்தது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை கொடுத்தனர். மாணவி அடையாளமே தெரியாத அளவுக்கு உடல் முழுவதும் தீக்காயங்கள் இருந்தது.
டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும் நேற்று இரவு சிகிச்சை பலனலிக்காமல் மாணவி உயிரிழந்தார். இது குறித்து மாணவியின் தந்தை கூறுகையில், ''நான் எனது மகளை பார்க்க சென்றிருந்தபோது அவளை என்னால் அடையாளம் காணமுடியவில்லை. 95 சதவீதம் அளவுக்கு காயம் அடைந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். எனது மகளிடம் கல்லூரி முதல்வரும், புகார் கமிட்டி உறுப்பினர்களும் புகாரை திரும்ப பெறும்படி கூறி நிர்ப்பந்தம் செய்தனர். எனது மகள் போலீஸில் புகார் செய்யலாம் என்று சொன்னார். ஆனால் கல்லூரி புகார் கமிட்டி எனது மகளிடம் புகாரை திரும்ப பெறவில்லையெனில் போலீஸில் புகார் செய்து கைது செய்துவிடுவோம் என்று மிரட்டினர்'' என்றார்.

மாணவி தீக்குளித்தவுடன் இச்சம்பவம் தொடர்பாக கல்லூரி முதல்வர் திலிப் கோஷ் மற்றும் பேராசிரியர் சமீர் குமார் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவியின் மரணம் குறித்து அதிர்ச்சி தெரிவித்த மாநில முதல்வர் மோகன் சரன், ''தவறு செய்தவர்கள் கடும் தண்டனைக்கு ஆளாவார்கள். மாணவியின் உயிரை காப்பாற்ற எவ்வளவோ முயற்சிகள் எடுக்கப்பட்டும் பலனலிக்கவில்லை'' என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் நேற்று முதல்வரின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீஸாரின் விசாரணையில் மாணவிக்கு 6 மாதங்களாக பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக சக மாணவிகள் தெரிவித்துள்ளனர். மாணவி புகார் கமிட்டியிடம் புகார் கொடுத்தபோது அதனை விசாரித்த கமிட்டி பேராசிரியர் மீது எந்த தவறும் இல்லை என்றும், புகாரை திரும்ப பெறும்படியும் மாணவியிடம் தெரிவித்துள்ளது. புகார் கமிட்டியில் மூன்று மாணவிகள் இருந்தனர். ஆனால் தேர்வு நடைபெறுவதாக கூறி அம்மாணவிகள் விசாரணையின் போது இடம்பெறவில்லை.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி யில் உறுப்பினராக இருந்த அம்மாணவிக்காக ஏ.பி.வி.பி உறுப்பினர்களும் சேர்ந்து போராடினர். இச்சம்பவத்தை தொடர்ந்து அனைத்து கல்லூரிகளிலும் கட்டாயம் புகார் கமிட்டி அமைக்கப்படவேண்டும் என்றும், அக்கமிட்டி உறுப்பினர்களின் போன் நம்பர்களை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் வைக்கவேண்டும் என்று மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.