போதைக்கு அடிமையான மருமகனை திருத்த 'தலிபான் ஸ்டைலில்' சித்திரவதை செய்த மாமனார்!
லக்னௌ: போதைக்கு அடிமையான மருமகனை அவரது மாமனார் 'தலிபான் ஸ்டைலில்' சித்திரவதை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பீலிபீட் மாவட்டத்தைச் சேர்ர்ந்தவர் முகமது யாமீன், இவர் போதை பழக்கத்துக்கு அடிமையாகி வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, அவரது மனைவி தமது தாய், தந்தை மற்றும் உறவினர்களிடம் சொல்லி அழுது புலம்பியுள்ளார்.
தமது மகளின் நிலை கண்டு வெகுண்டெழுந்த அவரது தந்தை, தமது மருமகனை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். அந்த நபர் வீட்டுக்கு வந்ததும், அங்கே அவரை சரமாரியாக தாக்கியதுடன் இடுப்பில் அணியும் பெல்ட்டால் அவருக்கு சாட்டையடி தண்டனையையும் வழங்கியுள்ளார்.
மேலும், பெண்ணின் குடும்ப ஆண்கள் அந்த நபரை கூட்டாக தாக்க, மாமனார் தமது மருமகனின் கழுத்தை பூட்ஸ் காலால் நெரித்துச் சித்திரவதைப்படுத்தியுள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர் கேமிராவில் படம்பிடித்து விடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த விடியோவில், தரையில் கிடந்தபடி சித்திரவதை பொறுக்க முடியாமல் அந்த நபர் மன்றாடி கெஞ்சுவது தெளிவாகப் பதிவாகியுள்ளாது. பெண்ணின் வீட்டார் அதையெல்லம் பொருட்படுத்தாமல் அந்த நபரை தொடர்ந்து தாக்கியதுடன் அதன்பின் அவரை ஒரு மரத்தில் கட்டி வைத்தும் அடித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இது குறித்து, காவல் துறைக்கு தகவல் கிடைக்கவே, சம்பவ இடத்துக்குச் சென்று இரு வீட்டாரையும் அதிகாரிகள் சமாதானம் செய்து வைத்துள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள நபர் தரப்பிலிருந்து இதுவரை புகார் எதுவும் அளிக்கப்படாததால் இச்சம்பவம் தொடர்பாக எந்தவொரு வழக்கும் பதியப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த விடியோ சமூக ஊடகத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதனைப் பார்த்த பலரும், தலிபான் ஸ்டைலில் மாமனார் தமது மருமகனை அடித்துச் சித்திரவதை செய்துள்ளார் என்று கருத்து பதிவிட்டுள்ளனர்.