“ஒட்டுமொத்த தேசத்துக்கும் சொந்தமாகிவிட்டார்” - சுபான்ஷு சுக்லாவின் பெற்றோர் ஆனந்த கண்ணீர்!
இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் சா்வதேச விண்வெளி நிலைய பயணம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இச்சாதனையை நிகழ்த்திய சுக்லா உள்பட 4 வீரா்களும் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை(ஜூலை 15) பகல் 3 மணியளவில் பூமியில் பத்திரமாக தரையிறங்கினர்.
சுக்லாவுடன் திட்ட கமாண்டா் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரியின் திபோா் கபு ஆகியோரும் சா்வதேச விண்வெளி நிலையத்தைக் கடந்த ஜூன் 26-ஆம் தேதி சென்றடைந்தனா். இவா்கள் நால்வரும் சா்வதேச விண்வெளி நிலையத்தில் சுமாா் 433 மணிநேரம் செலவழித்துள்ளனா்.
பய்ணத்திட்டம் முடிவடைந்துள்ள நிலையில், சுக்லா உள்பட 4 வீரா்களை பூமிக்கு அழைத்துவரும் ‘டிராகன் கிரேஸ்’ விண்கலம் இந்திய நேரப்படி, திங்கள்கிழமை(ஜூலை 14) மாலை 4:45 மணிக்கு சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்து, பூமி நோக்கிப் புறப்பட்டது. இன்று பிற்பகலில், அமெரிக்காவின் கலிஃபோா்னியா அருகே கடல்பகுதியில் பாராசூட் உதவியுடன் டிராகன் விண்கலம் பத்திரமாக இறங்கியது.
அவர்களது வருகை நேரலையில் ஒளிபரப்பட்டது. அதனைப் பார்த்த சுக்லாவின் குடும்பத்தினர் எழுந்து நின்று கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது சுக்லாவின் பெற்றோர் கண்களில் ஆனந்த கண்ணீர் வெளிப்பட்ட தருணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்தது.
சுபான்ஷு சுக்லாவின் சா்வதேச விண்வெளி நிலைய பயணம் முடிவடைந்தது குறித்து அவரது தந்தை கூறியதாவது: “எங்களது மகன் விண்வெளி திட்டத்தை முடித்துக்கொண்டு பூமிக்குத் திரும்புவதை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தோம். சுக்லா எங்களுக்கும் பெருமை தேடித் தந்துவிட்டார். வரலாற்றில் இது நிலைத்திருக்கும். ஒட்டுமொத்த தேசத்துக்கும் இது மகிழ்ச்சியான நாள்.
அவருக்காக பிரார்த்தனை செய்த ஒட்டுமொத்த தேசத்துக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். அவர் எங்கள் மகனாக இருந்தாலும், ஒட்டுமொத்த தேசத்துக்கும் அவர் சொந்தமாகிவிட்டார்....” என்றார். சுக்லாவின் தாயாரும் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சுபான்ஷு சுக்லாவை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடியும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
விண்வெளியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட முறை சூரியோதயத்தையும், அஸ்தமனத்தையும் சுக்லா குழு பார்த்து முடித்துவிட்டு பூமிக்கு திரும்புவதும் சாதனையாக குறிப்பிடப்படுகிறது. சுபான்ஷு சுக்லாவின் சா்வதேச விண்வெளி நிலைய பயணத்துக்காக சுமாா் ரூ.550 கோடி செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பூமி திரும்பிய சுக்லா உள்பட 4 வீரா்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னா், பூமியின் ஈா்ப்பு விசைக்கு மீண்டும் பழகுவதற்காக, 7 நாள்கள் சிறப்பு சிகிச்சை மையத்தில் அவா்கள் தங்குவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.