இந்திய வெளியுறவு கொள்கையை அழிக்கும் சர்க்கஸ்! ஜெய்சங்கரை விமர்சித்த ராகுல்!
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
சீனாவின் தியான்ஜின் நகரில் இன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
முன்னதாக, எஸ்சிஓ வெளியுறவு அமைச்சா்கள் அனைவரும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை இன்று காலை நேரில் சந்தித்துப் பேசினர்.
இதுதொடர்பான புகைப்படத்தை பகிர்ந்த ஜெய்சங்கர், ”இருநாடுக்கு இடையேயான உறவில் சமீபத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து ஷி ஜின்பிங்கிடம் விளக்கினேன்” எனப் பதிவிட்டிருந்தார்.
இந்த செய்தியை பகிர்ந்து ராகுல் காந்தி தெரிவித்ததாவது:
“சீன வெளியுறவு அமைச்சர் மோடியை நேரில் சந்தித்து, சீனா - இந்தியா உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விளக்கம் அளிப்பார் என நினைக்கிறேன்.
இந்திய வெளியுறவுக் கொள்கையை அழிக்கும் நோக்கில் வெளியுறவு அமைச்சர் முழு வீச்சில் சர்க்கஸை நடத்தி வருகிறார்” என விமர்சித்துள்ளார்.