`டேங்கை மாற்றினால் போதுமா; குற்றவாளிகள்?’ - அரசுப் பள்ளி தண்ணீர் தொட்டியில் மலம்; குமுறும் மக்கள்
திருவாரூர் அருகே உள்ள காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டை கடந்த இப்பள்ளியில் எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று, `காலை உணவு திட்டத்தில்’ உணவு சமைப்பதற்காக பள்ளி சமையலர்கள் வந்துள்ளனர். சமையலறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மளிகை பொருட்கள், பாத்திரங்கள் சிதறிக் கிடந்தன.
இதனால் அதிர்ச்சியடைந்த சமையலர்கள், தலைமை ஆசிரியர் பொறுப்பு, அந்த ஊராட்சியை சேர்ந்த சிலருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து பள்ளிக்கு அதிகாரிகள் மற்றும் காவல் துறை வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியின் பைப் உடைக்கப்பட்டிருத்தது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் ஒருவர் தண்ணீர் தொட்டியில் ஏறி பார்த்துள்ளார்.

தண்ணீர் டேங்கினுள், உரிக்காத சில தேங்காய் கிடந்தன. ஒரு பகுதியில் மலம் மிதந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் போலீஸிடம் சொல்லியுள்ளார். பின்னர் தண்ணீருக்குள் கிடப்பது மலம் தான் என்பதை உறுதி செய்தனர். இந்த விவகாரம் தீயாய் பரவியது. குழந்தைகள் குடிக்கிற தண்ணீரில் மலம் கலந்தவர்கள் மிருகத்தனமும், அரக்க மனமும் கொண்டவர்கள் என கொந்தளித்தனர். முதல்வரின் சொந்த மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்ததால் பேசு பொருளாகவும் மாறியது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த சூழலில், காரியாக்குடி கிராமத்திற்கு சென்று சிலரிடம் பேசினோம், `தினமும் காலை உணவு சாப்பிட்ட பிறகு இந்த தண்ணியை தான் பிள்ளைகள் குடிப்பார்கள். ஞாயிறு மாலை சுமார் 5 பேர் பள்ளிக்குள் சென்றுள்ளனர். பின்னர், மது குடித்து விட்டு சாப்பிட்டவர்கள் பொருள்களை சேதப்படுத்தியுள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அவர்கள் தண்ணீர் டேங்கில் மலத்தை போடு சென்றுள்ளனர். சமையலறையில் இருந்த அரிசி மற்றும் அண்டாவை தூக்கிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக திருவாரூர் டவுன் டி.எஸ்.பி அலுவலகத்தில் வேலை பார்க்கும் போலீஸ் ஒருவரின் இரு சகோதரர்கள் விஜயராஜ், விமல்ராஜ், செந்தில், காளிதாஸ், ஆனந்த்பாபு ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். நேற்று இரவு பத்து மணிக்கு பிறகு போலீஸ் அவர்களை விட்டு விட்டது. பின்னர் இன்று காலை மீண்டும் வரச் சொல்லி விசாரித்து வருகின்றனர்.
முதலில், `நாங்கள் சாப்பிட்டோம். ஆனால் மலம் கலக்கவில்லை’ என்றவர்கள் தற்போது முற்றிலுமாக மறுத்து வருகிறார்களாம். அஜித்குமார் லாக்கப் டெத் சர்ச்சையானதால் போலீஸார் விசாரணையில் மென்மை காட்டி வருவதாக சொல்கிறார்கள். இந்த கொடிய செயலை செய்தவர்களை கண்டு பிடிக்க வேண்டும், எதற்காக செய்தார்கள் என்கிற உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும்” என்றனர்.

பள்ளிக்குள் விசிட் அடித்தோம், ``பள்ளி முன்பு போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மலம் கலக்கப்பட்ட டேங்கை அகற்றி ஓரமாக வைத்து விட்டு புதிய டேங்கை மாடியில் வைத்துள்ளனர். யார் பள்ளி அருகில் வந்தாலும் போலீஸார் விபரம் கேட்டு விட்டுதான் உள்ளே அனுப்புகின்றனர். நானும், புகைப்படக்காரரும் பள்ளிக்குள் போட்டோ எடுத்து கொண்டிருந்தோம்.
ஓடி வந்த ஒரு போலீஸ் சார், இந்த விவகாரம் முடியப்போகுது, டாய்லெட் மோசமாக இருக்கு அதையெல்லாம் எடுக்காதீங்க என்றார். அதற்குள் உள்ளே வந்த டி.எஸ்.பி மணிகண்டன், தலைமை ஆசிரியரை அழைத்து யாரையும் உள்ளே அனுமதிக்காதீர் என கண்டிப்பு காட்டினார். ஊர் காரர்களிடம் யாராக இருந்தாலும் போலீஸுக்கு தகவல் தெரித்த பிறகு தான் அனுமதிக்க வேண்டும் என்றார்.

இதற்கிடையே காமராஜர் பிறந்தநாள் விழாவிற்காக அப்பள்ளியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மாணவர்களுக்கு நோட், பேனா கொடுக்க வந்தனர். அவர்களிடம் கடுப்பான டி.எஸ்.பி திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஒரு பள்ளி தான் உள்ளதா, வேறு பள்ளியில் போய் கொடுங்கள் என்றார். உடனே த.வெ.க நிர்வாகிகள், `தலைமையிலிருந்து என்ன நடக்கிறது என பார்க்க சொன்னார்கள்’ என சொல்ல, `என் பிள்ளையும் இங்கு படிப்பதாக நினைத்து விசாரித்து வருகிறோம் கிளம்புங்கள்; என சொல்ல த.வெ.கவினரும் கிளம்பி விட்டனர்.

இதையடுத்து நாம் தமிழர் கட்சியினரும் வந்தனர். யாரையும் பள்ளி முன்பு போலீஸ் அனுமதிக்கவில்லை. போலீஸை கேட்காமல் பள்ளி கேட்டை திறக்க கூடாது என தலைமை ஆசிரியருக்கு போலீஸ் அறிவுறுத்தினர். இதற்கிடையே அமைச்சர் அன்பில் மகேஸ், மாவட்ட ஆட்சியர் பள்ளிக்கு வருவதாக சொல்லப்பட்டது. ஆனால் இதை தவிர்த்து விட்டதாக சொல்கிறார்கள்.
சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்படுபவர்கள் தான் இதை செய்தனர் என முதலில் போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. தற்போது விசாரணை முடிவில் தான் தெரிய வரும் என சுணக்கம் காடுகின்றனர். தண்ணீர் டேங்கை மாற்றிவிட்டால் பிரச்னை முடிந்து விட்டதாக நினைக்க கூடாது. மிருகத்தனத்துடன் இதை செய்தவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என காரியாங்குடி மக்கள் தெரிவித்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb