ஓவல் அலுவலகத்தில் கிளப் உலகக் கோப்பை..? புதிய சர்ச்சையில் டிரம்ப்!
ஃபிஃபா கிளப் உலகக் கோப்பையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய ஓவல் அலுவலத்திலேயே வைத்துக்கொள்வேன் எனக் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்காவில் நடைபெற்ற கிளப் உலகக் கோப்பை போட்டியில் பிஎஸ்ஜி அணியை 3-0 என வீழ்த்தி செல்ஸி கோப்பை வென்றது.
கிளப் உலகக் கோப்பையில் இது செல்ஸிக்கு இரண்டாவது வெற்றியாக இருந்தாலும் ஃபிஃபா நடத்திய முதல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்தக் கோப்பையை செல்ஸி அணியினருக்கு வழங்கிய பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கேயே நின்றிருந்தது கேலியாக்கப் பார்க்கப்பட்டது.
செல்ஸி வீரர்களும் இது குறித்து தங்களது விமர்சனங்களை முன்வைத்தார்கள்.
போட்டி முடிந்த பிறகு டிஏஇசட்என் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறியதாவது:
ஃபிஃபாவிடம் எப்போது வந்து இந்தக் கோப்பையை எடுத்துச் செல்வீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் நாங்கள் எப்போதும் வரமாட்டோம். நீங்கள் எப்போதுமே அதை உங்களது ஓவல் அலுவலகத்திலேயே வைத்துக்கொள்ளலாம் என்றார்கள்.
இதேபோல் இன்னொரு கோப்பையை உருவாக்கி செல்ஸி அணியினருக்குத் தரவிருப்பதாக ஃபிஃபா முடிவெடுத்துள்ளதாகக் கூறினார்கள்.
இது மிகவும் ஆச்சரியாமாக இருந்தது. தற்போதைக்கு, கிளப் உலகக் கோப்பை ஓவல் அலுவலகத்தில் இருக்கிறது என்றார்.
இது குறித்து ஃபிஃபா தலைவர் ஜியோவானி இன்பான்டோ எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. 100 நாள்களுக்கு முன்பாக ஓவல் அலுவலகத்தில் இந்தக் கோப்பையை அவர் அறிமுகப்படுத்தச் சென்றிருந்தார்.